உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.
ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.
ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.
அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது...?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது...? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்
அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.
பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.
இப்படி... மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.
ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.
அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.
கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்
அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.
1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.
அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.
பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.
அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).