ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.
நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?
நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.
ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.
விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.
இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.
தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.
மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.
அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.
நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது
1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது
ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.
ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?
அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!
பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.
மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.
அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.