ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2022

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும்...? என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.

1.தாக்கும் உணர்வு வந்தால்... எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்... தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.

அது தான் “கல்யாணராமா...”

அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்... இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

அதை நாம் சிந்தித்தோமா...? என்றால் இல்லை.

மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்... ஏமாற்றி வாழ்வதே சரி...” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.

ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்... கோபக்காரன்... பல அரசாட்சிகளைப் பிடித்தவன்... யாகத்தை வளர்த்தவன்... வலிமை பெற்றவன் தான்.

இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்... உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.

யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.

ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்...
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்...
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்...
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது...?

காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.

ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்...!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன...?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்...? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.

வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது... அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.

கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்... கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்... சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை... விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்...”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்...? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.

இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.

நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).