ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2022

மந்திர ஒலிகளுக்குள் என்றுமே நாம் சிக்கக் கூடாது

சாமிக்கு சக்தி ஏற்றுகிறேன்...! என்று சொல்லிக் கோவிலிலே யாகம் செய்யும் பொழுது அதிலே புடவைகளைப் போடுவார்கள்... பட்டாடைகளைப் போடுவார்கள்... உணவுப் பொருள்களை எல்லாம் போடுவார்கள். பல வாசனைப் பொருட்களையும் போட்டுப் பொசுக்கி புகையை எழுப்புவார்கள். போடும் போது மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதை எல்லாம்
1.நாம் கண்களில் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்... அதை நாம் சுவாசிக்கின்றோம்
2.அந்த வாசனையுடன் சேர்த்து மந்திர ஒலிகளும் நம் செவிகளிலே படுகின்றது
3.செவி... அந்த மந்திர ஒலிகளைக் கவர்கின்றது...
4.உயிரிலே படுகின்றது... உணர்ச்சிகள் கவரப்படுகின்றது
5.இப்படிப்பட்ட உணர்வுகள் ஆனபின் இதற்குப் பெயர் “வசியம்”
5.நாம் எண்ணி எடுக்கக்கூடிய எண்ணங்கள் அதர்வண...
6.அதாவது நம் எண்ணங்களை மாற்றி... அவர்கள் செய்வதை நமக்குள் ஏற்றி நம்மை வசியப்படுத்துகின்றார்கள்.

புரிந்து கொண்டீர்கள் அல்லவா...!

யாகத்தில் என்னென்ன சொன்னார்களோ அது எல்லாம் பதிவாகி விடுகின்றது... உடலிலே சேர்ந்து விடுகின்றது. மீண்டும் இதையே எண்ணி எடுத்து நாம் அர்ச்சனை அபிஷேகம் என்று மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.

அந்தச் சாமி நமக்குச் செய்யும் என்ற எண்ணத்தில் தான் போகின்றோம்.
1.கோவிலிலே சாமிக்கு சக்தி ஏற்றுவதாக அவர்கள் சொல்வார்கள்
2.ஆனால் யாருக்குச் சக்தி ஏற்றுகிறார்கள் என்றால் உங்களுக்குத் தான் ஏற்றுகிறார்கள்.

அர்ச்சனை செய்தால் இந்தச் சாமி நமக்கு எல்லாம் செய்யும். வாழ்க்கையில் ரொம்பக் கடினமாகிவிட்டால்... யாகத்தைச் செய்தால் சாமி நமக்குச் செய்யும்...! என்று இப்படித்தான் ஆலயத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

வசியம் எல்லாம் செய்த பிற்பாடு இந்த வாழ்க்கையின் முடிவில் இறந்த பின் என்ன செய்வார்கள்...? மந்திரத்தைச் சொல்லி அதில் என்னென்ன பொருள்களைத் தீயிலே போட்டுக் கருக்கினார்களோ... இதையே புகை மூட்டத்தின் மூலம் அதே மந்திரத்தைச் சொன்னால் (இறந்தவர் சொன்ன) அந்தப் பக்தி கொண்ட ஆன்மாக்கள் மந்திரம் சொல்வோருக்குக் கைவல்யமாகி விடுவார்கள்.

அக்காலத்தில் அரசர்கள் செய்த முறைகள் இது.

அரசன் இதை எடுத்துக் கொண்ட பிற்பாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உங்கள் உணர்வை... உங்கள் உயிரை... எப்படி எல்லாம் வேலை வாங்க வேண்டுமோ... அதை அவன் செய்வான். இல்லை என்றால் அவன் உடலுக்குள் போகலாம்.

அதை வைத்துப் பில்லி சூனியம் ஏவல் என்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவான். சில கருத்தன்மை உயிரிலே பட்டபின் அதற்குத் தகுந்த மாதிரி வேலை செய்யும். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்வது... அதையேதான் அரசர்கள் செய்தார்கள்.

நாடி என்ற நிலையில் அரசனுடன் பழகப்படும் பொழுது அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இதே போன்று இன்னொரு குட்டி அரசன் செய்தான் என்றால் நாடி சாஸ்திரத்திலே மந்திர ஒலிகளாக எழுதி வைப்பான்.

மந்திரத்தைச் சொன்னால் சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் அவன் கூடு விட்டு கூடு பாயும் நிலையாக அரசன் செய்வான். அதற்குண்டான உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றார்கள்.

பின் அந்த நாடியை எடுத்து வாசிப்பார்கள். அதிலே ஒரு முட்டையை வைப்பார்கள். வாசித்து முடித்த பின் முட்டைக்குள் அந்தக் கரு இருக்காது. அப்படி என்றால் அந்த உடலுக்குள் அவன் வந்து விட்டான்...! என்று அர்த்தம்.

அவன் வந்த பிற்பாடு...
1.இவன் சொல்லக்கூடிய வாக்குகள் அனைத்தும் பலிக்கும்.
2.நாடியில் எழுதி இருக்கும்... அதை அவன் சொல்லிக் கொண்டே போவான்
3.இன்னார் கூட வந்தேன்... இந்த மாதிரி வந்தேன்... இப்படியெல்லாம் இருந்தது... என்று கட கட... என்று சொல்லிக் கொண்டே போவான்.

இதைத் தான் நாடித் துடிப்பு என்று சொல்வது. நாடி என்றால் துடிப்புக்கொப்ப உயிர் ஆகின்றது.

அரசன் அவன் வாழும் காலத்தில் அந்த உடலில் சுகங்களை எப்படி அனுபவித்தானோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்து இங்கே இந்த மனித ரூபத்தில் மீண்டும் அனுபவிப்பான். இது சாகாக்கலை.

ஆனால் ஞானிகள் காட்டியது இது அல்ல. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால் அது வேகா நிலை.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உயிர் வேகுவதில்லை ஆனால் உடல் கருகுகின்றது. கருகிய உணர்வுடன் வெளியிலே வரும் போது தன் நண்பன் மேலோ... அல்லது இன்னொரு பாசம் கொண்டவர் மேலோ... “இந்த உடலை விட்டுப் போகிறேன்...” என்ற வேக உணர்வுடன் சென்றால் போதும்.

அந்த உடலுக்குள் சென்றுவிடும். பின் “ஐய்யய்யோ... எரிகின்றதே...!” என்று சொல்லி அந்த எரிச்சல் தாங்காதபடி நெருப்பை வைத்து அவனும் தற்கொலை செய்து கொள்வான். இது எல்லாம் சாகாக்கலை.

1.ஆகவே மந்திர ஒலிகளிலே நாம் என்றுமே சிக்கக் கூடாது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பற்றுடன் பற்றி
3.உயிரைப் போன்றே நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி வேகா நிலை பெற வேண்டும்.

ஞானிகள் நமக்குக் காட்டியது அதுதான்...!