குருநாதர் பல நிலைகளைச் செய்தாலும் கூட என் குடும்பம் வாழ வேண்டும் என்று ஆசை எனக்குள் (ஞானகுரு) இருந்தது.
இந்த ஆசை எவ்வாறு உருவாகின்றது...? அதனால் விளையும் தன்மைகள் என்ன...? என்பதை உணர்த்துவதற்காக குருநாதர் இமயமலைக்கு என்னை அனுப்பினார்.
பனிப்பாறைகள் மீது நடக்கச் சொன்னார். இப்பொழுது உடலிலே ஆடைகளை அணிந்திருக்கின்றோம். ஆனால் அன்று அதுவும் இல்லாதபடி வெறும் கோவணத்துடன் தான் அங்கே போகச் சொன்னார்.
1.நான் சொல்லும் உணர்வின் தன்மையை ஏங்கிச் சுவாசி
2.பனியின் குளிர் ஒன்றும் செய்யாது
3.உன் நினைவாற்றல் அருள் ஒளி பெறும் உணர்வுடன் ஒன்றும் போது வாழ்க்கையில் மன பலம் பெறுவாய்
4.ஆகவே உன் நினைவு நான் சொன்னதன் பால் இருக்கப்படும் பொழுது பனிப்பாறைகள் உன்னை ஒன்றும் செய்யாது என்றார்
அதன் படி பனிப்பாறைகளைக் கடந்து நான் செல்கின்றேன். சென்ற பின் திடு...திடு... என்று நான் வந்த பாதையில் இருந்த பனிப் பாறைகள் அனைத்தும் நொறுங்கிக் கீழே விழுகின்றது.
நான் வந்த பாதை இடிந்து போய் விட்டதே... இனி எப்படித் திரும்பப் போகின்றோம்...? குழந்தைகளையும் குடும்பத்தையும் நான் எப்படிப் பார்க்கப் போகின்றேன்...? என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.
அப்போது இந்த உடல் பற்று வரப்படும் பொழுது “என் இருதயமே இறைகின்றது...” சிறிது நேரத்தில் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.
காரணம்... குருநாதர் கொடுத்த கவசம்... அவர் கொடுத்த உணர்வின் தன்மையை நுகர மறந்துவிட்டேன்.
இனி எவ்வாறு வாழ்வது...? என் குழந்தைகள் என்ன ஆவார்கள்...? என்று குடும்பத்தின் பற்று வரப்படும் பொழுது இந்த உடல் பற்று தன்னாலே வருகின்றது.
அப்பொழுதுதான் குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்...!
“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே... தயங்காதே...!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ...?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்...!
மனமே இனியாகிலும் மயங்காதே... மயங்காதே...!
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ...?
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ... சதமாமோ...?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே... தயங்காதே...!” என்று
குருநாதர் இந்தப் பாடலை பாடிக் காட்சிகளைக் கொடுக்கின்றார்.
நீ இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் எல்லாம் போய் உன் உயிர் வெளியேறி விட்டால்
1.“பொன்னடி பொருளையும் சுகத்தையும்” காண முடியுமா...? நீ எதை எண்ணுகின்றாய்...?
2.நான் எதைச் சொன்னேன்...? எதை எண்ணி ஏங்குகின்றாய்...?
3.எதைப் பெறச் செய்கின்றாய்...? எதை நீ பெறுதல் வேண்டும்...?
ஆகவே...
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு... அந்த உணர்வின் தன்மையை அங்கே குடும்பத்தில் பாய்ச்சு...
2.அவர்கள் நலம் பெற வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து...
3.அந்த அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சு அவர்கள் நலமும் வளமும் பெறுவார்கள்.
பாசத்தால் “இப்படி ஆகிவிட்டதே...” என்று அவருடைய நிலைகளை எண்ணும் பொழுது இங்கே உன் உயிர் போய் விட்டால் அந்தப் பொன்னடி பொருளை எவ்வாறு நீ காணப் போகின்றாய்...?
நான் உனக்குப் போதித்த உணர்வுகளை நீ ஏன் மறந்தாய்...?
1.அருள் ஒளி பெறு... இருளை அகற்றிவிடு
2.இந்த உடலின் பற்றை அறுத்துவிடு
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை அனைவரும் பெறச் செய்யும் அந்த அருள் பற்றை உண்டாக்கு
4.அருள் வாழ்க்கை வாழ்ந்திடு... இருளை அகற்றிடும் சக்தி பெற்றிடு...
5.இருளை அகற்றிடும் வாழ்க்கை வாழ்ந்துவிடு
6.அருள் ஒளியின் பற்றாக வாழ்ந்திடு
7.அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிவிடு
8.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிவிடு
9.பிறவியில்லா நிலைபெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்துவிடு என்று இந்த உபதேசத்தை அங்கே கொடுக்கின்றார்.
ஆகவே... இந்த வாழ்க்கையை இன்னல்கள் வந்தாலும் நாம் பற்ற வேண்டியது எது...” அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.
குரு வழியில் அருள் உணர்வுகளைப் பெறுவோம்... இருளை அகற்றிடும் அருள் வழியைப் பெறுவோம்... அருள் வழி வாழ்வோம்.
1.அனைத்துக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்... தியானிப்போம்...!