ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2022

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது... மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

உதாரணமாக... கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்...!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி...” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா...? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்... சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ... அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்... இணைந்து வாழ்வதும்... பிரிந்து வாழ்வதும்... எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்... அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்... எண்ணத்தின் உணர்ச்சியும்... நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது...? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது...? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்... உணர வேண்டும்... பார்க்க வேண்டும்... என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது...” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.