ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2021

“செல்வம் நம்மை என்றுமே காப்பதில்லை...” என்று சொல்வதன் உட்பொருள் என்ன...?

 

நாம் செல்வத்தைச் சம்பாதிக்கிறோம். செல்வங்களைச் சேமித்து வைத்த பின்... பையன் சொன்னபடி கேட்கவில்லையே...! நாளை இந்த சொத்தை எல்லாம் அவன் என்ன செய்வான்...! என்று பையன்பால் எண்ணம் வருகிறது.

இந்த உணர்வின் சத்து வளர்ந்தபின்...
1.எந்தப் பையனை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்த்தோமோ
2.உடலை விட்டுப் பிரிந்த பின் உயிரான்மா நேராக அந்த உடலுக்குள் தான் செல்லும்.
3.பையன் உடலுக்குள் சென்றாலும் அவனைக் காக்காது அந்த உடலிலும் நோயாகி வேதனையைத் தான் அங்கே உருவாக்கும்.

அப்போது பையனும் எண்ணுவான்...! என் தந்தை சொன்னார்... நான் கேட்கவில்லையே... இப்படி ஆகிவிட்டதே...! என்று அந்த வேதனையை எண்ணுவான்.

இந்த உணர்வு தோன்றினாலும் விஷத்தன்மை வளர்ந்து அந்த உடலையும் மடியச் செய்து விடுகின்றது. ஆக... பையன் உடலுக்குள் சென்று விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்டபின் பையனை வீழ்த்தி விட்டு அவனைக் காக்காதபடி வெளிவந்து விடுகிறது தந்தையின் உயிரான்மா.

தொக்கி வைத்திருந்த பணம் அவன் நோயைப் போக்குவதற்குச் செலவழிப்பதற்குத் தான் சரியாக இருக்கும்.

1.அப்பா சம்பாதித்து வைத்திருந்தார். பையன் செலவழித்தான்...
2.கடைசியில் அனாதையாகப் போய் நோய்வாய்ப்பட்டுச் செத்தான்.
3.சொத்தெல்லாம் மறைந்துவிட்டது...! என்று மற்றவர்கள் சொல்வதை நாம் எத்தனையோ கேட்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் செல்வம் நம்முடன் என்றுமே வருவது இல்லை. செல்வத்தால் வந்த வினைகள் “தன் பையன் அதைக் காப்பான்..” என்று எண்ணினாலும் கடைசியில் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இப்படி வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்ட பின்... உடலில் அணுக்கள் மாறி... உயிர் அந்தக் கணக்கின் பிரகாரம் சிவனாக உடலாக மாற்றும் பண்பால்
1.அடுத்து விஷத்தையே உணவாக உட்கொண்டு வாழும் உயிரினமாக
2.பாம்பாகவோ புலியாகவோ உயிர் உருவாக்கிவிடும்.

இது போன்ற நிலைகள் உருவாகும் நிலையை நமக்கு உணர்த்துவதற்குத்தான் ஒவ்வொரு ஆலயங்களிலும் அங்கே ஒரு தெய்வ குணத்தை முன்னணியில் வைத்துக் காட்டியிருப்பார்கள்.

காளியம்மன்... மாரியம்மன் கோவிலுக்கு முன் அக்னி குண்டமும் அங்களேஸ்வரி கோயிலுக்கு முன் அக்னி குண்டத்தையும்... தீமை செய்யும் உணர்வின் குணங்களுக்கு எல்லாம் அதை வைத்துக் காட்டியிருப்பார்கள்.

அக்னி குண்டம் இறங்கும்படி சொல்வார்கள். அந்த அக்கினியில் இறங்குவதற்கு அல்ல.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும்போதெல்லாம் “ஈஸ்வரா...!” என்று தன் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் அனைவரும் இந்த வாழ்க்கையில் தீமைகளை வென்றவர்கள் அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் அக்கினியாக மாற்றிக் கொண்டவர்கள்.

1.அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
2.அந்த உணர்வை நம் உடலான குண்டத்திற்குள் இறக்க வேண்டும்...
3.தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்துவதற்குத் தான் சிலையை வைத்து
1.நாம் எண்ண வேண்டியது எப்படி...?
2.மனித வாழ்க்கையில் தீமை அகற்றுவது எப்படி...? என்ற நிலைகளைத் தெளிவாக்குகின்றனர் ஞானியர்.

ஆடிப்பெருக்கு என்ற நிலையில் கூடுதுறை என்ற மூன்றும் சேர்த்து நன்மையைப் பெருக்குவது போல் நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்ற அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி அருள் வழியில் நாம் செயல்பட வேண்டும்.

உயிருடன் ஒன்றி தீமைகளை அடக்கி தனக்குள் அந்த அருள் ஒளியைக் கூட்டுதல் வேண்டும். ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை தியானிப்போம்.

அதைப் பெருக்கிக் கூட்டி அருள் சுடராக வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறத் தியானிப்போம்... தவமிருப்போம்.