ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2021

மகரிஷிகளின் உணர்வை நம் உடலிலுள்ள அணுக்களுக்குப் பொன்னாடையாகப் போர்த்த வேண்டும்

 

ஆறாவது அறிவால் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள் நாம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை அறியாது வரும் அசுர சக்திகளை அடக்கி நல்ல சக்திகளாக மாற்றிடும் நிலையாக நாம் செயல்படுத்த வேண்டும்.

காலையிலிருந்து இரவு வரையிலும் ஒவொரு நாளும் தீமைகளை நீக்கும் நிலையாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துணையாகப் பெற்று அசுர குணங்களை அழித்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஓங்கச் செய்திடல் வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் பொழுதெல்லாம் இதை மறவாது செய்ய வேண்டும்.

நம்முடைய நினைவின் எண்ணங்கள் அந்த அருள் வழி சென்று
1.நம் மனதைத் தூய்மைப்படுத்தவும்
2,நம் உடலைத் தூய்மைப்படுத்தவும்
3.நம் தொழிலைத் தூய்மைப்படுத்தவும்
4.அதனால் மகிழ்ந்திடும் நிலைகளையும் பெறுதல் வேண்டும்.

விவசாய நிலங்களைப் பண்படுத்தும் போது அந்த நிலம் பண்படுகிறது. அதே போல்
1.நம் மனதைப் பண்படுத்தும்போது வீடும் குடும்பமும் பண்படுகிறது
2.மனதைப் பண்படுத்தும் போது சகோதர உணர்வுகள் பண்படுகின்றது
3.மனதை பண்படுத்தும் போது மனிதனின் வாழ்க்கையும் பண்படுகிறது
4.பண்புடன் பழகும்... பண்புடன் வளர்ந்திடும் நிலையும் வளர்கிறது.

என்றுமே ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

என்றுமே இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியாக நாம் வளர்வதே தீப ஒளித் திருநாள்.
1.அசுரனை நீக்கிய நாள் என்றும்
2.அசுர சக்திகளை நீக்கிடும் நாள் என்றும்
3.அத்தகைய அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள் என்றும்
4.நாம் அதைப் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

அன்று எப்படிப் புத்தாடையாக மேலாடையைப் போர்த்துகின்றோமோ அதைப் போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வை நம் நல்ல குணத்துடன் இணைத்து இதைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தூய்மைப்படுத்தும் உணர்வான அருள் மகரிஷியின் அருள் சக்திகளை
1.தெளிந்த மனதுடன்... தெளிந்திடும் சக்தியாக நமக்குள் போர்த்தச் செய்வதே
2.இங்கே கொடுக்கப்படும் உபதேசமும்... யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியும்.

நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் அசுர குணங்களிலிருந்து மீளும் நந்நாள் தான் இது.

நமது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகளையும்... பாசத்தால் கேட்டறிந்த பிறரின் வேதனை உணர்வுகளையும்... சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகளையும்... அது போன்ற அசுர குணங்களை எல்லாம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீக்கும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

1.நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.அதனின் வலுவின் துணை கொண்டு அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.