ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2021

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்...?

 

இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலைகளில் தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே ஒளி வீசிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியான உணர்வலைள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியில் பெருகிக் கொண்டே உள்ளது.
1.அதனை யாரெல்லாம் நுகர்ந்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றனரோ
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அன்பால் பண்பால் பரிவால் பிறர்படும் துன்பங்களையோ துன்பப்படுத்தும் உணர்வுகளையோ உற்றுப் பார்த்து
1.அந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த நினைவினைத் தனக்குள் கூட்டி விட்டால் அதுவே பெருகி
3.நமக்குள் தீமையின் விளைவுகளாகப் பெருகி... தீமையின் உணர்வாகவே பெருக்கிவிடும்.

ஆகவே அதனின்று தனித்து... அந்த அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பின்... யார் துன்பப்பட்டார்களோ அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதித்து அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் அங்கே அருள் ஞானமாகப் பெருகத் தொடங்கும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு வாழ்க்கை நடத்தப்படும் போது அதை நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இது தான் ஆடி பதினெட்டு... பதினெட்டாம் பெருக்கு...!

ஆகவே... நாம் யாரைச் சந்தித்தாலும் யாருடன் பழகினாலும் சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அந்த தீமைகளைப் பெருக்காது அதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு உணர்வின் தன்மையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் நகர்ந்து சென்றே இயக்குகின்றது ஒன்றொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த இயற்கையின் சுழற்சி வட்டத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து அது பெருகுகின்றது

புயல் காற்று சுற்றும் பொழுது பல உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மற்ற தாவரங்களின் சத்தை தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் இயக்கமாக அது இயங்குகின்றது என்று பல முறை சொல்லி உள்ளேன் (ஞானகுரு).

ஆற்றிலே நீரோட்டம் இருக்கும்போது அது ஓடும் பாதை அனைத்திலும் அது தன் உணர்வின் சத்தை வளர்த்து செழிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

நீர் இல்லை என்றால் தாவர இனங்களைப் பெருக்கும் நிலையும் இல்லை. அதே போல் நமக்குள் ஜீவ நீர் இல்லை என்றால் நமக்குள் உணர்வுகளைப் பெருக்கும் சக்தி இல்லை.

1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் ஜீவ நீராக ஊற்றி
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் அருள் ஞான சக்தியைப் பெருக்கி
3.அருள் ஒளியின் சிகரமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

அதனை நினைவு படுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு. அதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்.

பல நிலைகளிலும்... பல எத்தனையோ கோணங்களில் நாம் திசை மாறி... திசை மாற்றி... இப்படிப் பல பல கோணங்களில் நாம் மாறிப் பரிணாம வளர்ச்சி அடைந்து... மனிதர்களாக வந்தவர்கள்தான் நாம்.

இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று நாம் விண் வழி செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நன்னாளாகப் ஆடி பதினெட்டு என்று கூறுகின்றார்கள்.

பத்தாவது நிலையிலிருக்கும் உயிர் முழுமை அடைய வேண்டுமென்றால்
1.அஷ்டதிக்கு...! எட்டுத் திக்கில் இருந்து... பல முனைகளிலிருந்து வரும் தீமைகளை அகற்றி
2.அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே “பதினெட்டாம் பெருக்கு” என்பது

நாம் இப்படிப் பெருக்கி விட்டால் எந்தத் திக்கிலிருந்து எந்த உணர்வு வந்தாலும் அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு பேரருள் பேரொளியாக மாறும் நிலைகள் வருகின்றது.