ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2021

கோபத்தை வீரமாக்கி அதை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி “வீரிய சக்தியாக…” மாற்ற வேண்டும்- ஈஸ்வரபட்டர்

 

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…?

தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…?
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.