அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால் கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று அதைக் கவர்ந்து கொண்டால் தான் நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.
(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வார்கள்)
இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும்
1.உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம் எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
3.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.
இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?
இவனைச் சும்மா விடக் கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.
அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?
வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.
காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.
அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்… விண்…” என்று வலி இருக்கும்.
“ஈஸ்வரா…” என்று சொல்லுடா…! என்பார். ஆனால் ஈஸ்வரா…! என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.
விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.
எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…? இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.
ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!
ஏன்…?
நமக்குள் வேதனை வந்தாலும்… அது நம்மைத் தாக்கினாலும்.. நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.
உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.
நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.
இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.
அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
”போக்கிரி…” என்று சொன்னவுடனே நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது. நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.
வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.
நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.
1.அதற்காக வேண்டித் தான் நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும்.
அப்பொழுது அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ… அதே மாதிரி
1.“அவன் நம்மை எண்ணும் பொழுது..”
2.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
3.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”
ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால் நம்மைப் பார்த்ததும்
2.நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய் அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!
செய்து பாருங்கள்.