ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2021

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன...?

 

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது...” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது... “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்...
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு “ஒரு இயக்கப் பொருளுக்குள்...?
5.அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது...? என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்... எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்... மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு - ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி... உடம்பாக மாறி... இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்...? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.