வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் என்று காட்டுவார்கள். பரமபதம் என்று அன்றைய
நாளில் பரமபதத்தையும் விளையாடிக் காட்டுகின்றார்கள்.
முதலில் தாயக் கட்டையை உருட்டுவோம். அதில் தேள், பன்றி, நாய், குதிரை, யானை
இதைப் போன்று எல்லாம் காட்டப்பட்டிருக்கும். இதை எல்லாம் கடந்து வரிசையாகச் சென்ற பின்
ஏணி வருகின்றது.
ஏணி மேல் ஏறிப் போகின்றது. அடுத்த கட்டங்கள் வரப்படும்போது பாம்பு வராத
நிலைகளில் எல்லையைக் கடக்கின்றது.
ஒரு சிறு பாம்பு கடித்தால் அது மீண்டும் கீழே வந்து விடுகின்றது.
இதை மனிதன் தன்னைத்தான் உணர்ந்து நாம் எப்படி மனிதன் மனிதனாக உருவானோம்?
மனிதனான பின் நாம் என்னவாக ஆக வேண்டும்? என்று சிந்திக்கும்படிச் செய்கின்றார்கள்.
இந்த உடலைப் விட்டுப் பிரிந்த பின் நாம் பிறவியில்லா நிலைகளை அடைவதுதான் “சொர்க்க
வாசல் – பரமபதம்” என்றார்கள்.
சொர்க்க வாசல் என்பது எப்பொழுது? மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்,
அதிலிருந்து அந்தச் சொர்க்க வாசல் என்று சொர்க்கக் கதவைத் திறப்பார்கள்.
இப்பொழுது வழக்கத்தில் என்ன செய்கிறோம்? காலை நான்கு மணிக்கெல்லாம் கதவைத்
திறந்தவுடனே கோவிலுக்குள் சென்று முந்திக் கொண்டு போகவேண்டும் என்று போவோம்.
“நான் சொர்க்கம் அடையப் போகிறேன்..,” என்ற நிலையில் பிறரைத் தள்ளிவிட்டுத்
தான் சாமியைக் கும்பிடுவதற்குச் செல்வோம். அன்றைய தினம் விரதமும் இருப்போம்.
அப்பொழுது எதிலே சொர்க்கம் இருக்கிறது? தான் பெறவேண்டும் என்ற ஆசையில்
தெய்வத்தை நாம் எண்ணினாலும் தன் அருகில் இருக்கக்கூடிய மனிதனைத் தள்ளுகின்றோம்.
அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணமோ மனிதனைப் பண்புடன் அரவணைத்து வாழும் நிலைக்குப்
பெறவேண்டும் என்று தான் சிலையாகப் படைக்கப்பட்டது.
அந்தச் சிலையை ஒவ்வொருவரும் உற்றுப் பார்த்து விண்ணில் துருவ நட்சத்திரத்திலிருந்து
வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து தன் உடலுக்குள் சேர்த்து உடல் பெறும் உணர்வை
மாற்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்காகச் செய்தார்கள் அன்றைய மெய்ஞானிகள்.
வழக்கமாக எல்லோரும் நேர் வாசல் வழியாகப் போகும் நிலைகளிலிருந்து வடக்கு வாசலைத்
திறக்கும்படிக் காட்டுகின்றார்கள். நாம் வடக்கில்தான் சொர்க்கம் அடைகின்றோம்
என்பதனை இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்.
நம் பூமியின் வடக்குத் திசையில் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற
நிலையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக
எண்ணிலடங்காத ஒளியின் உயிராத்மாக்கள் சுழன்று கொண்டுள்ளது.
ஆகவே, சாதாரண மனிதனும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல வேண்டும்
என்பதைத் தான் அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.