நம் அன்னை தந்தைதான் நம்மை முதலிலே மனிதனாக உருவாக்கி நமக்கு அறிவையும்
தெளிவையும் ஊட்டினார்கள். நமக்குக் குருவாக இருந்து இயக்கிக் கொண்டு இருப்பதும்
நம் அன்னை தந்தையே.
அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையில் கண்டுணர்ந்து மனிதனாக
உருவாக்கியது. மனித நிலைகள் தனக்குள் தன் இனம் தழைக்க வேண்டுமென்று ஏக்க உணர்வின்
உண்மைப் பொருளை உணர்த்தி அதன் வழிகளில் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது தாயின்
உயிர்.
நமது தாய் தந்தை உயிர் கடவுளாக இருப்பதால் அதனின் உணர்வால் அறிந்துணர்ந்த
உணர்வின் தன்மை கொண்டு தன் இனம் தன் மக்கள் என்று அதனின் உயிரே அறிவுறுத்தப்பட்டு
நம்மைக் காத்தருளி நல்வழி காட்டி நல் உணர்வுகளைப் புகட்டியது தாய் தந்தை உயிர் கடவுள்.
நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும், மகிழ்ந்திடவும், மனிதன் என்ற உண்மையை
உணர்த்துவதற்கும் நமது தாய் தந்தையின் உயிரே கடவுளாக நின்று தெய்வமாக நின்று நல்
வழி புகட்டிய குரு முதல் குருவும் தாயே. நம்மைக் காத்த முதல் தெய்வமும் தாயே.
இதை நமது சாஸ்திரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதை நாம் தெரிந்து
தெளிந்து இந்த நிலையை நாம் அறிந்து கொள்வதே நலம்.
எனது (ஞானகுரு) அன்னை தந்தை என்னை மனிதனாக உருவாக்கினார்கள். அதன் வழியில்
பேரண்டத்தின் உணர்வின் தன்மையை அறியும் தன்மையாக நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் பேரண்டத்தின் உணர்வின் உண்மையை உணர்த்தவும் செய்தார்.
என் அன்னை தந்தையின் பூர்வத்தில் அவர்கள் எண்ணிய ஏங்கிய ஏக்கத்தின் உணர்வில்தான்
கருவிலேயே இந்த உணர்வின் தன்மையை என் அன்னை தந்தையர் என்னிலே பதியச் செய்துள்ளது.
அந்தப் பூர்வத்தில் அமையவில்லை என்றால் பேரண்டத்தின் உண்மையை உணரும் தன்மையை
நான் இப்பொழுது பேச முடியாது.
என் அன்னை தந்தை சிரமத்தின் எல்லை கடந்த நிலையில் இருக்கும் பொழுது என் தாய்
ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணி
ஏங்கியது.
அறியாத இருள் நீங்கிட வேண்டும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும்
என்றும், பொருள் கண்டுணர வேண்டும் என்ற உணர்வினை உந்தியது. உணர்வின் ஏக்கத்தை என்
தாய் பெற்றது என்று குருநாதர் உணர்த்தினார்.
காரணம் எனது தந்தையின் தாய் என் தாய் மேல் பற்றற்று இருந்தது. அதை தினமும்
நிந்தித்துக் கொண்டேயிருந்தது.
மேலும் என் தந்தை மாற்றுத் தாரம் செய்து கொள்ள வேண்டும் என்று சொந்தத்தில் அது
இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில் என் தந்தையின் தாய் என் தாய்க்குக் கடும்
கொடுமைகளை உருவாக்கியது.
அந்த நிலையில்தான் என் தாய் தன் மூதாதையர்களை எண்ணியது. எங்கள் மூதாதையர்கள்
பலர் ஞானத்தின் தத்துவத்தில் அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்.
என் தாய் அவர்களை எண்ணி அதன் வழிகளில் பேரின்பத்தைக் காட்டும் பெருநிலை கொண்ட
மகரிஷிகளை எண்ணி அந்த அருளைத் தான் பெறவேண்டும் தன் குடும்பம் பெறவேண்டும் என்று
எண்ணி ஏங்கியது.
என் தாய் இவ்வாறு எண்ணி ஏங்கியதைப் பிற்காலத்தில் குரு எனக்கு உபதேசித்தார்,
உணர்த்தினார். நீ இந்தத் தத்துவம் பெறுவதற்கே மூலம் உன் தாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர்.
ஏனென்றால், அக்காலங்களில் மாமியாருக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும். இல்லையென்றால்
அதற்குப் பல தீமைகளும் விளைந்து கொண்டேயிருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் உன் தாய் அது எண்ணத்தின் ஏக்கத்தால் அது பெற்ற அந்த
உணர்வின் தன்மை தாய் கருவில் நீ இருக்கும் பொழுது தாய்க்குள் பதிவான அந்தப்
பதிவின் உணர்வே உன்னில் இயங்கத் தொடங்கிவிட்டது.
அதுவே உன்னை நான் நாடி வந்ததற்கும் மூலமும் அது தான் என்று நமது குருநாதர்
எனக்கு உணர்த்தினார்.
உனது தாயின் உயிர் கடவுள். உன்னைக் காத்தருளிய தாயின் அந்த உணர்வே தெய்வம். நீ
இன்று மனிதனாக இருப்பதற்கு நல் வழி காட்டிய அதுவே குரு என்று குருநாதர் அதை
உணர்த்தினார்.
இதைப் போன்ற பல பல உண்மையின் நிலைகளை குரு உணர்த்தி அன்னை யார் என்பதைத்
தெளிவாக்கினார். மனிதனாக இருப்போர் நாம் அனைவருமே இந்தச் சாஸ்திரத்தின் உண்மை
நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்.