ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2016

பேரண்டத்தின் உட்பொருளையும், அகப்பொருளையும் மூலப்பொருள் என்ற நிலையில் பிரித்து நமக்குள் அறிவாக இயக்குவது “நம் உயிரே”

நமது சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளை நாம் அறிந்து கொண்டோம் என்றால் சாஸ்திரம் மெய்யாகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் அடையச் செய்கின்றது.

ஆனால், இன்று நாம் அனைவருமே சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப் பொருளை அறியக்கூடிய தன்மையே காலத்தால் மறையும் நிலைக்கு வந்துவிட்டது.

அத்தகைய நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் எது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

நமது உயிரே நமக்குள் மெய் ஆகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்படுத்தினாலும் நமக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதனுடைய உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைப்பது நம் உயிரே.

அதைத்தான் மெய்ப் பொருள் என்று சொல்வது.

பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும் நமக்குள் மெய்யை உணர்த்துவதும், மெய்யின் தன்மையை அறியச் செய்வதும், மெய்யின் நிலைகள் நம்மை இயக்கச் செய்வதும் நமது உயிரே.

மெய்ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அறியச் செய்வதும், அந்த மெய் வழியில் நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.

ஏனென்றால், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை உயிரின் துணை கொண்டுதான் நாம் பெற முடியும்.

உலகின் நிலைகளையும் பேரண்டத்தின் நிலைகளையும் மெய்ஞானிகள் உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து உயிருடன் ஒன்றிய மெய்யாக மெய்யின் நிலையாக நிலை கொண்டு இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆகவே, நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருள் எது என்ற நிலைகளை நாம் பார்ப்போம்.

“ஓ...ம் ஈஸ்வரா.. குருதேவா...,” என்றால் நமது உயிர் நமது உடலுக்குள் நின்று “ஓ” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அந்த குணங்கள் அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக்கி அந்த ஜீவ அணுக்களை நமது உயிர் இயக்கிக் கொண்டேயுள்ளது.

அதுதான் ஓம் நமச் சிவாய, ஓம் நமச் சிவாய. நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக நமக்குள் உறையச் செய்து கொண்டேயிருக்கின்றது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டயுள்ளது.

நாம் எத்தகையை குணங்களை எண்ணுகின்றோமோ நம் உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கங்களையும் மெய்ப்பொருளாக நம்மை அறியச் செய்கின்றது.

நாம் கோப்ப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குள் உள்ள இந்த உணர்வின் செயலை அதனின் உணர்வின் தன்மையை நமது உயிர் உணர்த்துகின்றது.

எத்தகையை நிலைகள் பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும் நமது உயிர் அதனின் உட்பொருளையும், அகப்பொருளையும், மூலப்பொருள் என்ற நிலைகளில் பிரித்து நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கிக் கொண்டுள்ளது.

அவைகளையெல்லாம் நம்மை அறியச் செய்கின்றது. உணரச் செய்கின்றது. இயக்கச் செய்கின்றது. நுகர்ந்தது அனைத்தையும் நமது உயிர் உடலாக்கிக் கொண்டேயுள்ளது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.