ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2016

பணம் சம்பாதிக்க மட்டும் தான் சினிமா, டி.வி. எடுக்கிறார்கள் - மக்களை நல்வழிப்படுத்தும் ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை

டி.வி.யில் காட்டிய இராமாயணத்தில் சீதாவாக நடித்த அந்தப் பெண் வெளியில் வந்தது என்று சொன்னால் “சீதா வந்துவிட்டாள்..,” கண்டவுடனே அந்த வரவேற்பு வருகின்றது.

இப்படிச் டி.வி./சினிமாவில் நடித்துப் பெயரானவுடனே என்ன நடக்கின்றது. அவர்களையே கடவுளாக்கிப் பின்னாடி போகின்றார்கள்.

சினிமாவைப் பார்த்தேன், சாதாரண மனிதனைக் கடவுளாக்கி இன்று போய் கொண்டிருக்கும் நிலைகள் தான். சினிமாக் கதை வசனத்தை எழுதி ஆகா..., இந்தக் கதை எழுதியதால் நன்றாகப் படம் ஓடியது என்று போக வேண்டியதுதான்.

எல்லோரையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து அவர் பெரிய கடவுள் என்று நான் போய்விட்டேன். இப்படித்தான் நமது கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றதே தவிர நாம் எங்கே செல்கின்றோம்? எப்படி இருக்கின்றோம்? எதன் வழியில் நாம் இருக்கின்றோம்? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஆக, மனிதனுக்காக வேண்டி எடுக்கும் பொழுது காசுக்காக வேண்டிக் கதைகளை எழுதுகின்றான். கதைகளைத் திரிபு செய்கின்றான். அப்பொழுது அதிலே காட்டப்படும் நிலைகள் அதனதற்குத் தக்கவாறு நமக்குள் எண்ணங்கள் வருகின்றது.

அடிக்கடி சண்டை போட்டு கலாட்டா செய்பவனுக்கு, சினிமாவில் சண்டை போடும் காட்சி வந்தது என்றால், “அடுத்து..., எப்படிடா சண்டை போடுவது?” என்ற உணர்வுகளைத் தூண்டுகிறது.

நாம் சாந்தமும் ஞானத்தோடு அங்கு போனால் அந்தச் சண்டை போடும் காட்சியைப் பார்த்தவுடன் “என்ன படம்.., இது.., ஒரே கலாட்டாவாக இருக்கின்றது? என்று உணர்வுகளைத் தூண்டுகிறது.

ஆகவே, உணர்வுக்கொப்பத் தான் அந்த இயக்கம் ஆகின்றது.

இப்பொழுது சினிமாவில் நடக்கக்கூடிய கதைகள் எல்லாம் எப்படி இருக்கின்றது?

காசுக்காக வேண்டி..., எப்படிக் குற்றவாளியாக்க வேண்டும்? எப்படித் திருட வேண்டும்? எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டும்? எப்படியெல்லாம் பிழைக்க வேண்டும்? என்ற நிலைகளைத் தான் காட்டுகின்றார்கள்.

சினிமாவில் இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டும்போது அது வழி வந்து அது தான் நடைமுறையில் இன்று நடக்கின்றது. பார்க்கலாம் நீங்கள்.

மோட்டார் சைக்கிளில் போகும் போது திருடுகின்றான். போய்க் கொண்டிருக்கும் போது எப்படித் திருட வேண்டும் என்பதைச் சினிமாவில் காட்டுகின்றான். பார்த்தவுடன் நிஜ வாழ்க்கையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது செயினை அறுத்துவிட்டு ஓடிப் போகின்றான்.

மனிதன் திருந்தி வாழ்வதற்கும் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைச் சினிமாவில் காட்டி இருந்தால் பரவாயில்லை.

இன்றைய சினிமா உலகில் என்ன நடக்கின்றது?

அவன் காசு சம்பாதிக்க வேண்டும். “யார் கெட்டுப் போனால் எனக்கு என்ன..,?” என்ற அந்த நிலையில் தான் இன்று சினிமாவினுடைய நிலைகள் நடக்கின்றது. நாடகங்கள் எடுத்தாலும் கூத்தாடி நாடகமாகப் போய்விட்டது.

அன்று ஞானிகள் காட்டியது “மனிதன் திருந்தி எப்படி வர வேண்டும்?” என்று அது தெளிவாகக் காட்டப்பட்டது.

இராமாயணத்தைப் பற்றிப் பட்டிமன்றம் வைத்து இராமனைப் பற்றியும் தசரதனைப் பற்றியும் கேவலமாகப் பேசுபவர்கள் இருக்கின்றார்கள்.

இராமனுக்கு எப்படி வந்தது சக்தி? குகனுக்குத்தான் இந்தச் சக்தி உண்டு அவன் தான் இராமனைக் காப்பாற்றினான். படித்த வர்க்கங்கள், இப்படி வியாக்கியானப்படுத்தி ஜட்ஜ்மென்ட் கொடுக்கின்றார்கள்.

உண்மையின் நிலைகளை நாம் உணர்வதற்கும் மக்களுக்குத் தெளிவான நிலைகளைக் கொண்டு வருவதற்கும் இல்லை.

காவியத் தொகுப்பில் இவனுடைய கருத்தை அவன் சொல்வதும் அவனுடைய கருத்தை இவன் சொல்வதும் இரண்டுக்கும் எப்படி என்று இவர்களுக்குள் போர்முறை வருகின்றதே தவிர ஞானிகள் காட்டிய கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அழித்துவிட்டனர். போர்முறைக்கே வருகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும். அந்த மெய்ஞானிகள் உணர்த்திய பேருண்மைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.