ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2016

நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாகி, கருவாகி அணுவாகி நம் உடலுக்குள் மாற்றங்கள் வருகின்றது என்பதைக் கூறியவன் அகஸ்தியன்

நீங்கள் சாப்பிடுகின்றீர்கள். ருசி இல்லையென்றால் முகம் சுளிக்கின்றது. முகம் சுளித்தவுடன் உமிழ்நீர் கொட்டுகின்றது. அப்பொழுது அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் போனவுடன் என்ன ஆகின்றது?

சிறிதளவு தான் சாப்பிட்டிருப்போம். சாப்பாடு ஒன்றும் ஆகவில்லையே என்று நினைத்தால் வயிறு வலிக்கின்றது, நெஞ்சு வலிக்கின்றது, “கிறு கிறு..,” என்று எப்படியோ வருகின்றது என்று சொல்வீர்கள்.

அந்தச் சாப்பாட்டில் உணரும் உணர்ச்சிகள் இந்த உணர்ச்சிகளத் தூண்டி அது வேகமாகச் சுவாசிக்கச் செய்து அதே உணர்வு உமிழ்நீராக மாறி நம் சாப்பாட்டையே மாற்றிவிடுகின்றது.

இதே மாதிரி சுவையான முறையில் சாப்பிடுகின்றீர்கள். சாப்பிட்டவுடன் சுவையற்ற நிலையில் “பாவிப் பயல் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறானே..,” என்று ஒருவர் தன் பையனைப் பற்றி கதையைச் சொல்கிறார்.

தன் பையன் “இப்படிச் செய்கின்றான், அப்படிச் செய்கின்றான்” என்றூ நம்மிடம் சொல்கிறார் என்றால் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் இருக்க முடியுமா?

அந்த உணர்ச்சிகள் நுகர்ந்தவுடன் என்ன செய்யும்? உமிழ்நீராக மாறுகின்றது. நீங்கள் ருசியாகச் சாப்பிட்ட உணவுடன் இது போய்க் கலக்கின்றது.

ஏற்கனவே, ருசியாக இருக்கின்றது என்று கூடக் கொஞ்சம் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த உணர்வுகள் உள்ளுக்குள் போனவுடன் “கட புடா.., கட புடா” என்று செய்யும்.

பார்க்கலாம் நீங்கள், நன்றாகச் சாப்பிட்ட பின் இதைப் போல கஷ்டம் என்று  ஒருவர் சொல்வதைக் கேட்ட பின் அல்லது கஷ்டப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ பார்த்த பின் அன்றைக்குப் பார்த்தால் ஒரு பத்து நிமிடத்திற்குள் உங்கள் உடலுக்குள் எப்படிக் கலக்கிறது என்று பாருங்கள்.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றாகத் தான் சாப்பிட்டிருப்போம். இந்த உமிழ்நீர் போனவுடன் நன்றாக ஜீரணமாவதை விஷமாக மாற்றிவிடுகின்றது.

நல்ல சத்துள்ள பாலில் பாதாமைப் போட்டு ஒரு துளி விஷத்தைப் போட்டால் எப்படி இருக்கும்?

பாதாமிற்குச் சக்தி இருக்கின்றதா? நல்ல சத்துக்கு இங்கே அதிகாரம் இருக்கின்றதா? உங்கள் நல்ல குணத்திற்குச் சக்தி இருக்கின்றதா?

ஒன்றுமே இல்லாமல் போகின்றது. ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மை நிலைகள்.

இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றீர்கள்?

சாமியார் செய்வாரா? தெய்வத்திடம் போய் அழுது பாலாபிஷேகம் செய்தால் சரியாகிவிடுமா? எல்லா அர்ச்சனையும் செய்து அபிஷேகமும் செய்து கஷ்டத்தையெல்லாம் சாமியிடம் சொன்னால் சாமி வந்து பாதுகாக்கும் என்றால் பாதுகாக்குமா?

நாம் வழி முறையைத் தவறி நடக்கின்றோம். ஆனால், இன்று விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம் என்பதை மறந்திடலாகாது.

விஞ்ஞானத்தில் ஒரு பொருள் ஒரு பொருளுடன் மாறினால் எப்படி உணர்வுகள் மாறுகின்றது? இந்தக் காற்று மண்டலம் எப்படி நச்சுத் தன்மையாகின்றது? தண்ணீர் எப்படிக் கெட்டது? இங்கே கிருமிகள் வரக் காரணம் என்ன?

இதையெல்லாம் காற்றில் வருவதை வடிகட்டிக் காண்பித்து இன்னென்ன அலைகள் இப்படி இருக்கிறது என்று விஞ்ஞானி காட்டுகின்றான். நிரூபிக்கின்றான் விஞ்ஞானி. அப்பொழுதாவது நாம் உணர்கின்றோமா என்றால் இல்லை.

இதையெல்லாம் கண்டவன் அன்று அகஸ்தியன் சொன்னான். நுகர்ந்த உணர்வுகளால் எண்ணங்கள் வருகின்றது. எண்ணத்தின் உணர்வு நமக்குள் கருவாகின்றது. அணுவாக உருவான பின்பு உடலுக்குள் எப்படி மாறுகின்றது?

இதைத் தெளிவாகக் கூறியுள்ளான் அகஸ்தியன்.

“நுகர்ந்த உணர்வுகள் – சீதாராமா” என்று அதைத்தான் இராமாயாணம் என்ற நிலைகளில் காட்டியுள்ளான். யாராவது நினைக்கின்றோமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.