ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2016

கேதர்நாத் அனுபவம்

குருநாதர் சொன்ன முறைப்படி கேதார்நாத்திற்கு செல்லப்படும்போது அங்கு கடும் பனிப்பாறைகள். இதே போல அங்கே சென்று நான் கடந்து ஒரு இடத்தை விட்டு மாறிய பின் ஒரு மலை மாதிரித் தான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விட்டேன்.

அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் என்றைக்கோ அரசர்கள் தன் பரிவாரத்துடன் போன பாதை போல இருக்கிறது. எல்லாம் பனிப்பாறைகள் மூடியபடி கிடக்கிறது.

தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கிடக்கின்றது. குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ, ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ, அல்லது என் கண்களால் பார்த்த பின் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா என்று பார்ப்பபதற்கா வைத்தாரோ எப்படி வைத்தார்? என்று எனக்குத் தெரியாது.

பார்த்தவுடனே அப்பொழுது அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்?

ஏதாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் கொண்டு போக வேண்டுமென்றாலும் பயம். இதற்கு ஆசைப்படுகிறான் என்று குரு என்னை எதாவது செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது?

ஒரே ஒரு வேஷ்டியைத்தான்  கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைத் தாக்காதபடி பாதுகாத்து கொள்ளலாம்.

இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யப்போகும்போது இதையும் கடந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்று குருநாதர் சொன்னார். சுடு தண்ணீர் இருக்கின்றது. அங்கே நீ போய்ப் பார் என்கின்றார்.

அங்கு போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது, நான் நடந்து வந்த பாதையில் உள்ள பனிப் பாறைகள் “திடு.., திடு.., திடும்..,” என்று எல்லாம் இடிந்து விழுந்தது.

ஆக, வேறு பாதை எனக்குத் தெரிந்தால் தானே நான் திரும்பிப் போக முடியும். அப்பொழுது பாறைகள் இடிந்து விழுந்தவுடன் அப்பொழுது தான் எனக்குச் சந்தேகம் வருகின்றது.

“ஐய்யோ..,” பிள்ளைக் குட்டிகள் எல்லாம் என்ன ஆவது? நாம் இதற்குள் போய்விட்டால் என்ன ஆகியிருப்போம் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.

அதை நான் நினைத்தவுடன் குருநாதர் சொன்னதை விட்டு இந்த உடல் ஆசை வந்துவிட்டது. அப்பொழுது என் பையன் என்ன செய்வான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்யும்? என்ற உணர்வை எடுத்தவுடனே என்ன ஆனது?

உடனே இருதயம் “கிர்..ர்ர்ர்ர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்து என் இருதயமே இரைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

ஆனால் இதைத்தான் நான் பார்க்க முடிகின்றது அதை எண்ண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்துவிடுவோமோ...,” என்ற உணர்வு தான் வருகின்றது.

அப்பொழுது தான் அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார்.
“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதை பாராய்..,”

ஏனென்றால், அங்கே தங்கம் மற்ற ஆபரணங்கள் எல்லாம் இருந்தது. ஆனால், உயிரை விட்டுப் போனபின் என்ன இருக்கின்றது? சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் (பனிப் பாறையில் உறைந்த அரச பரிவாரங்கள்) அதெல்லாம் இல்லையே.

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ,
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்,
இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாளப்போகிறாய், மறைந்து விடப் போகிறாய். நீ யாரை காக்கப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருநாதர்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் இந்த உடலான உலகம் உனக்குச் சதமா?
என்று வினாக்களை நாதத்தை எழுப்புகிறார்.

இவைகள் எல்லாம் அனுபவ ரீதியிலே மனிதனின் ஆசை வரப்போகும் போது நாம் போகும் பாதைகள் எத்தனை?

இந்த மனித வாழ்க்கையில் வரப்போகும்போது எத்தனையோ பேர் இந்தச் சாமியாருக்கென்ன? இவர் (என்னை) கொள்ளை அடிக்கிறார் என்று சொல்கின்றனர்.

மந்திர தந்திரங்களைச் செய்யும் சாமியார்கள் மாதிரி எத்தனையோ பேர் என்னைப் பற்றிப் பேசுகின்றனர், ஏசுகின்றனர். எத்தனையோ தொல்லைகளும் கொடுக்கின்றனர்.

அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

அப்பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடிய தன்மை வர வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன்.

ஆனால், அவர் உணர்வை எனக்குள் விட்டால் எனக்குள் இப்படி ஒரு விரலை நீட்டினாலே அவனைத் தூக்கி எறியக் கூடிய சக்தி உண்டு.  இருந்தாலும் அதை நாம் பயன்படுத்தினால், நாம் உண்மையின் இயக்கத்தைக் காண முடியாது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு அவனின் விஷத்தின் தன்மையை அடக்க முடியும். ஆனால், அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும்.

இது இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு நீ எப்படி வாழ வேண்டும்? இந்த மனிதனின் உடலுக்குப் பின் மீண்டும் வீரிய சக்தி எது? இவையெல்லாம் உன்னைத் தாக்கிடாது உன்னைப் பாதுகாக்கும் உணர்வு எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை எழுப்புகின்றார் குருநாதர்.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப் படும்போது உன்னைப் பாதுகாக்கும் சக்திகளையெல்லாம் நீ பெற முடியும். தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அருள் உணர்வை உனக்குள் பெருக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை.

இவ்வளவு சக்தியையும் நீ இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். உனக்குள் வலுவான சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் பெற்று தீமை என்ற நிலைகளை நீக்கி தூக்கி எறிய வேண்டும்.

ஒருவன் எனக்கு எதிரியாக இருக்கின்றான் என்று உணர்வைப் பாய்ச்சி அவனைத் தூக்கி எறிந்து அவனைத் துன்புறுத்தும் நிலை வந்தால் அதே உணர்வு உனக்குள் நல்ல அணுக்களைத் தூக்கி எறிந்து விடும் துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும்.

சக்திகள் எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் நின்று இயக்கப்படும்போது அது உன் உடலையேதான் இயக்கும். ஆகவே இதை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனுபவப் பூர்வமாக குருநாதர் கொடுத்தார்.

இப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உட்கார்ந்து கேட்கின்றீர்கள். லேசாக அனுபவத்தைச் சொல்கின்றோம். “என்னமோ.., சாமி சொல்கின்றார் நம்மால் முடியுமா..,?” என்று நினைக்கின்றீர்கள்.