நம்மை மனிதனாக உருவாக்கிய தாயையும் தந்தையையும் நாம் எப்படிக் கடவுளாக எண்ண வேண்டும்
என்று ஆதியில் அகஸ்தியர் தாயின் உணர்வின் தன்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
நம்முடைய சாஸ்திர விதியே இதுதான்.
நமது உயிர் நமக்குள் “ஓ” என்று இயக்கி அந்த உணர்வின் துணையால் பல கோடி
உணர்வின் தன்மை நாம் பெற்று பல மிருக இனங்களாகப் பிறந்தும் அதிலிருந்து நம்மை
காத்திடும் உணர்வின் துணைகொண்டு இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரே கடவுள்”.
இதை அறிந்துகொள்ளும் நிலைகள் பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அணுவுக்குள்
அணுவின் ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து இந்த உணர்வின் செயலை தெளிவாகத்
எடுத்துரைத்தான் அகஸ்தியன்.
அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த அந்த உணர்வின் சக்திகள்
இன்றும் நம் பூமியில் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.
அவன் இந்த உடலிலே தீமைகளை அகற்றி உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய
ஒளியின் சரீரமாக இன்றும் துருவத்தில் நிலைகொண்டு துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக
இயங்கிக் கொண்டுள்ளார்.
அந்த அகஸ்தியன் அவன் காட்டிய நிலைகள் தான் சாஸ்திரப்படி உயிரே கடவுள். முதலிலே
பேரண்டத்தின் நிலைகள் எதுவாக இருப்பினும் கடவுள் எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளான்
என்ற நிலை இல்லை.
நமக்குள் நம்மை உருவாக்கியது நமது உயிரே.
பேரண்டத்தின் ஆற்றலே அந்த உணர்வின் தன்மையை கவர்ந்து வெளிப்பட்டாலும் அந்த
உணர்வைப் பிளந்து உணர்வின் இயக்கத்தை அறிந்து, அறிந்த நிலைகள் நம்மை இயக்கி
இத்தகைய உடலின் உணர்வே மனிதனாக உருவாக்கியது.
ஆகவே கடவுள் எங்கேயோ இல்லை. அவன் நமக்குள் நின்றே அவன் இயக்குகின்றான்.
எத்தகைய குணத்தின் தன்மை நாம் நுகர்கின்றோமோ இந்த உணர்வினை 'ஓ' என்று
ஜீவனாக்கி இந்த உணர்வின் சத்தை நமக்குள் ஜீவ அணுவாக மாற்றும்போது நாம் எண்ணிய
குணமும் நமக்குள் பதிந்த உணர்வும் மீண்டும் அதை நினைவுபடுத்தி அது
இயக்கப்படும்போது அதுவும் கடவுளாகத்தான் ஆகின்றது.
“தூணிலும் இருக்கின்றான்.., துரும்பிலும் இருக்கின்றான் உன்னிலும்
இருக்கின்றான்.., அனைத்திலும் இருக்கின்றான்..,” என்று பிரகலாதன் கதையில் இது தெளிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சூரியனின் காந்தப் புலனறிவு ஒரு உணர்வின் சத்தை அது கவர்ந்து கொண்டால் அதே
சூரியனால் இயக்கப்படும் உடலின் இயக்கத்திற்குள் நம் உயிரால் கவரப்பட்ட உணர்வின்
தன்மை அதைப்போல இருந்து உணர்வின் இயக்கத்தை உணர்ந்து அது உணர்ந்த உணர்வின் செயலாக
நம்மை இயக்கும் செயலாக அது கடவுளாக இயக்குகிறது.
இந்தப் பேருண்மை நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே, அந்த
சாஸ்திர விதிப்படி இன்று நமது உயிர் கடவுள். உள் நின்று இயக்குகின்றது.
நாம் எண்ணிய உணர்வின் சத்தை 'ஓ..,' என்று ஜீவனாக்கி 'ம்..,' என்று உடலாகி
நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின்
ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.
அதனின் உணர்வே இன்று படர்ந்து கொண்டிருப்பது. அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த
உண்மையைத்தான் மகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் இதை உணர்த்துகின்றார்.
நம் குருநாதர் உணர்ந்த அறிவின் தன்மையை நாம் அனைவரும் பகிர்ந்து அந்த அறிவின்
தன்மை நாம் தெளிந்து நமது வாழ்க்கையில் வரும் நம்மை அறியாது சேரும் இருளிலிருந்து
மீளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றோம்.
ஞானிகளால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல. அதில் உள்ள
மூலக்கூறுகளை நாம் அறிந்து கொண்டால நாம் அனைவரும் விண் செல்வது சுலபம்.