ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2015

தீமைகளை நீக்கிடும் உபாயங்களையும் பயிற்சியையும் தான் உங்களுக்குக் கொடுக்கின்றோம்

தலைவலி வயிற்று வலியைப் போக்குவதற்குத்தான் எம்மைப் பார்க்க வருகிறார்கள்.

வயிற்று வலி வந்தவர்களைப் பார்த்தபின் இதை விடக் கொடூரமான நிலைகளில் “அட பாவமே..,” என்று எனக்குக் கூட அப்படித்தான் இருந்தது. சாமியிடம் (ஞானகுரு) போனால் நன்றாக ஆகின்றது என்று சொல்வார்கள்.

ஆனால், அடுத்தவர்களிடம் (வலி உள்ளவர்களிடம்) இதைச் சொல்லி அந்த வலியை மீண்டும் வாங்கிக் கொள்வார்கள். அப்புறம் என்ன சொல்வார்கள்.

சாமியிடம் சென்றேன். முதலில் வயிற்று வலி நீங்கியது. ஆனால், மறுபடியும் இப்பொழுது வந்து விட்டது. ஆகவே, டாக்டரிடம் போகப் போகிறேன் என்பார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதைக் கேட்டபின் அடுத்தவர்களும் வருவார்கள். வந்து நல்லதான பின் அதே மாதிரி அடுத்தவர்களிடம் போய்ச் சொல்வார். மீண்டும் வந்துவிடும்.

ஆக மொத்தம், உங்களுக்கு வரும் தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டுமல்லவா?

தலை வலிக் கேஸ் உடல் வலிக் கேஸ் எல்லாம் இங்கே வந்து எம்மைச் சந்தித்த பின் நன்றாக ஆன பின் என்ன செய்வார்கள்? இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.

கேன்சர் வந்தவர்கள் கூட நல்லதாக ஆனபின் இங்கே வருவதில்லை. ஆனால், சென்றாலும் மீண்டும் அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால், மண்ணுக்குள் வித்து மறைந்துள்ளது. மழை இல்லாத போது எல்லாம் காய்ந்து போய்விடுகிறது. ஆனால், மழை பெய்தவுடன் என்ன செய்யும்? மீண்டும் தள தள என்று தன் சத்தை எடுத்து வளரத் தொடங்கும்.

இதைப் போலத் தான் உங்களுக்குள் மறைந்த நிலைகளை அது அவ்வப்பொழுது துடைக்கத் தவறினால், சந்தர்ப்பமானால் அது மீண்டும் முளைத்துவிடும்.

டாக்டரிடம் சென்று நோய்க்கு மருந்து சாப்பிட்டாலும் விஷத்தின் (நோயின்) தன்மையை அடக்கினாலும் அந்த மருந்தின் தன்மை மற்றொன்றை அடக்கும்.

மீண்டும் அதன் வழியில் புதுப் புது நோய் உங்களுக்கு வரும். ஆக, அது தன் உணர்வை எடுத்து விஷத்தைப் பாய்ச்சி வளர்க்கும்போது இப்படித்தான் ஆகும்.
நான் இந்த மருந்தைச் சாப்பிட்டேன்
அப்புறம் இந்த மருந்தைச் சாப்பிட்டேன் என்று
வாழ்க்கையின் நிலைகளில் இப்படித் தான் நாம் சொல்வோம்.

இதைப் போன்று நமக்குள் மாறி மாறி வரும் நிலைகளை விதித் தன்மை கொண்டு நம் உடலிலே முன் குவித்து மதி கொண்டு இதை ஒளியாக மாற்றும் தன்மை பெறவேண்டும்.

வீட்டில் அழுக்குப்பட்டால் துடைக்கிறோம், கையில் அழுக்குப்பட்டால் கழுவுகிறோம், துணியில் அழுக்குப்பட்டால் துவைக்கின்றோம்.

அதைப் போல நம் வாழ்க்கையின் நிலைகளில் தீயவர்களையோ மற்றவர்களையோ பார்க்கின்றோம், அறிகின்றோம், அப்பொழுது உணர்வுகள் நம் உடலில் அழுக்காகச் சேர்கின்றது. இவைகளை அவ்வப்பொழுது துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இதுதான் கடும் நோய்களாக மாறி மாறி நமக்குள் வருகிறது. சாமி செய்யும் சாமியார் செய்வார், மந்திரம் செய்யும் என்ற நிலைகளில் தான் நீங்கள் எண்ணுகிறீர்கள்.

தலை வலி, மேல் வலி, இடுப்பு வலி என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் எல்லாம் போக்கிக் கொண்ட பின் யாம் சொல்வதை மறந்து விடுகிறார்கள்.

அடுத்தாற்போல் வேதனைப்படுபவர்களை உற்றுப் பார்த்து அதை நுகர்ந்து அந்த நோய் உருவாக்கும் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுவார்கள்.

ஆனால், அது வராமல் தடுக்க வேண்டுமல்லவா? தடுக்கத் தவறினால் மீண்டும் இழிநிலையான சரீரத்திற்குத்தான் செல்ல நேரும்.

அழுக்குகள் சேர,
       நல்ல ஞானங்கள் மறைய,
              இருண்ட நிலைகள் கொண்டு,
                     சிந்திக்கும் தன்மை இழக்க,
                            நமக்குள் விஷத்தின் தன்மை பெருக்க,
மீண்டும் ஊர்ந்து செல்லும் பாம்பினங்களாக நம்மை அழைத்துச் சென்றுவிடும் நம் உயிர்.

அறியாது வரும் தீமைகளையும் நோய்களையும் நீங்களே நீக்க்கிக்கொள்ளும் பயிற்சியைத் தான் யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை எடுக்கப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று அதை எடுக்கப் பழகிக் கொண்டால் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் ஆன்மாவை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.

பிறிதொரு சக்தி நமக்குள் வந்தால்
அதை மாற்றியமைக்கும் வழியைத் தான்
உங்களுக்கு உபதேசிக்கின்றோம்