ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2015

நலம் பெறுக - வளம் பெறுக - துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக

இப்பொழுது நாம் பார்க்கிறோம். ஒருவர் நமக்குத் தீங்கு செய்துவிட்டார் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா. அவர் வாழ்க்கையில் நல்ல உணர்வுகள் வளம் பெறவேண்டும். நல்ல குணங்கள் அவருக்குள் வரவேண்டும் என்று இப்படி நாம் எண்ணிப் பழகவேண்டும்.

ஏனென்றால் தவறு செய்பவரைப் பார்த்தவுடன் “போகிறான்.., பார்”, என்று தவறு செய்பவனின் உணர்வை நமக்குள் எடுத்து கெட்டதை வளர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால், நாம் சாதாரணமான நிலையில் போய்க் கொண்டிருப்போம். நமக்கு வேண்டாதவன் வந்து என்ன சொல்வான்?

இந்த மாதிரி எல்லாம் உங்களுக்குத் தொந்தரவு செய்தான் என்று சொல்வார்கள். “உங்களைப்பற்றி” ரொம்ப அசிங்கமாகப் பேசுகிறான் என்று சொன்னவுடன் பதிவாக்கிக் கொள்கிறோம்.

பிறகு அவனைப் பார்த்தவுடன், “போகிறானா.., அயோக்கியன்” என்று இப்படிச் சொல்லி அந்த உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குவோம்.

ஆக, அந்த உணர்வு வந்து அவனைப் பார்த்ததும் நமக்குள் கெட்டதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம். அப்பொழுது பகைமை என்ற உணர்வு வரும்.

முதலில் அவனிடம் நேசம் என்ற நிலையில் அவனிடம் நாம் நல்ல குணங்களுடன் இருந்திருப்போம். இந்தச் சந்தர்ப்பம் அவன் மேல் உள்ள நல்ல குணங்களை பகைமையாக மாற்றிவிடும்.

அந்த உணர்வை எடுத்தபின் அவனை எதிரி என்ற நிலையில் எண்ணி நோயின் தன்மை நமக்குள் வளரும். நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். அப்பொழுது அதைத் தடைப்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்ககள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை எடுத்து ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

அடுத்து, எங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்த வேண்டும். எங்கள் சொல் பிறரை நல்லதாக்க வேண்டும்.

அதைப் போல நாங்கள் பார்ப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகவேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தீங்கு செய்வோரைப் பற்றிய நினைவு வரும்பொழுதெல்லாம் எண்ண வேண்டும்.

நாம் அவர்கள் தீமைகளை மறந்துவிட்டு
நல்ல குணங்கள் வளர வேண்டும்
நல்ல செயல்கள் வளர வேண்டும்
என்று நாம் இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் நல்ல குணங்கள் வளம் பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் உணர்வுகள் அங்கே வளரவேண்டும் என்று நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் வந்து நமக்குள் பகைமையாக்குவது இல்லை. ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கின்றது. மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியை நாம் வளர்த்துக் கொள்கிறோம்.