ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2015

நம் உடலான சிவனுக்குச் செய்யும் சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

பக்தி என்ற நிலைகளில் நாம் இருக்கின்றோம்.

அந்த பக்தி எதுவாக இருக்க வேண்டும்? விரதம் எதுவாக இருக்க வேண்டும்? எதன் வழி வாழ வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால், பக்தியில் இன்று என்ன செய்கிறோம்?

லஞ்சம் கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குகிற மாதிரி, ட்ரெயினில் இடம் பிடிக்கக் காசு கொடுப்பது போல, கோவிலில் பூசாரிக்குக் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் சொல்லுங்கள், முருகனிடம் சொல்லுங்கள் என்று அர்ச்சனைக்குக் காசு, பிறகு பூசாரிக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் அவர் இன்னும் சிறிது நேரம் அங்கே தீபத்தைக் காட்டுவார்.

ஆக, அவரிடம் கொடுத்து அங்கே காண்பித்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

நம் உடல் ஒரு ஆலயம்,
நம் உயிர் ஈசன்,
நாம் எடுக்கும் உணர்வுகள் சக்தியாக நின்று இயக்குகிறது.
ஆகவே, நாம் இந்த ஆலயத்தை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்?

நம் உடலான சிவனுக்குச் செய்யும் சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நல்ல உணர்வுகளை எடுத்து உடலான சிவனுக்கு இங்கே சேவை செய்யவேண்டும்.

அதே போன்று உயிரான ஈசனுக்கும் நல்ல உணர்வுகளை எடுக்கும்போதுதான் இங்கே அபிஷேகம் ஆகிறது.

வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் என்ன செய்யவேண்டும்?

அடுத்த கணமே “ஈஸ்வரா..,” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இங்கே பட்ட தீமைகளை நீக்கி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக, அந்த உணர்ச்சிகளை மாற்றி
அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்யவேண்டும்.

நம் மீது அழுக்குப் பட்டால்
நல்ல தண்ணீரை விட்டுக் கழுவுகிறோமா இல்லையா?

நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள்
உயிரிலே படுகின்றதா இல்லையா?

அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாகி
இயக்குகிறது என்று தெரிகிறது அல்லவா?

அப்பொழுது, தீமையான உணர்வு உயிரிலே பட்டவுடன் அதை நீக்க என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வைக் கொண்டு துடைக்க வேண்டும்.

ஆனால், ஞானிகள் நமக்கு நெறிப்படுத்திய இத்தகையை நிலைகளைக் காட்டாமலே சுத்தமாகவே நமக்கு மறைத்து விட்டார்கள்.