நாம் உயர்ந்த கருத்த்துக்களையெல்லாம்
கேட்டுக் கொண்டிருப்போம். அதைக் கேட்கும்போது உயர்ந்த நிலைகளில் இருக்கிறோம் என்று
எண்ணுவோம்.
அந்த நேரத்தில் யாராவது வந்து,
உங்கள் சாமி (ஞானகுரு)
பெரியவரா.., அவருக்கு என்ன தெரியும்..? என்று கேட்டால் போதும். கோபம் பொத்துக் கொண்டு
வரும்.
அவர்களின் உணர்வுதான் நம்மை
மாற்றுமே தவிர சமாளிக்கும் திறன் இருக்காது. அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்?
ஞானிகள் கொடுத்த உணர்வின் வலு கொண்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்று
மௌனம் சாதித்து,
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
நிச்சயம் அவர் உணர்வார்
உணரும் பருவம் வரும் என்ற
உணர்வை எடுக்க வேண்டும்.
இந்த உணர்வுகளை எடுத்துக்
கொண்டபின், “நீ சீக்கிரம் உணர்வாய் பார்த்துக் கொள்” என்று மட்டும் நீங்கள் ஒரு சொல்லைப்
பதிவு செய்யுங்கள்.
இதைக் கேட்ட அவரும் “அது அப்படியா?” என்பார். அப்புறம் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்.
இந்த உணர்வுகள் போனவுடன் அவருக்குள்
இருக்ககூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.
அப்பா.., நீ புரிந்து கொள்
புரிந்து கொள்ளக் கூடிய காலம்
வரும், புரிந்து கொள்வாய்
உன்னை நீ அறிவாய், இந்த உலக
இருளைப் போக்குவாய்
உணர்வின் நிலைகளை நீ அறிவாய்
என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.
இது அங்கே பதிவாகும்.
இப்படி நீங்கள் எண்ணவில்லை
என்றால், “அவன் எப்படி எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்லலாம்? நீ இப்படிச் சொல்லும்
அளவுக்கு வந்துவிட்டாயா? இரு.., நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று நீங்கள்
சொன்னால் “அவன் உணர்வு உங்களைப்
பார்த்துவிடும்”
இதையெல்லாம் நாம் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏனென்றால், அந்த உணர்வின் சக்தியை நாம்
அறிந்திடல் வேண்டும்.
உயர்ந்த நிலைகளில் பற்று இருக்கும்.
ஆனால் நான்கு பேர் இப்படிக் குறை உணர்வுடன் பேசினால் அதையெல்லாம் நுகர்ந்து எடுத்துக்
கொள்வார்கள். கடைசியில், போக வேண்டிய பாதையை விட்டு விட்டுவார்கள்.
பிறகு எப்பொழுது பார்த்தாலும்
மற்றவர்களிடம் அவர் இப்படிப் பேசினார், இவர் இப்படிப் பேசுகிறார், எப்படி இப்படிப்
பேசலாம் என்று சொல்லிக் கொண்டே போய் இந்தச் சண்டையை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்,
தொழிலும் கொண்டு போய்விட்டுவிடுவார்கள்.
கடைசியில் என்ன ஆகும்? நாம்
சிந்தித்துச் செயல்படும் நிலையைக் கெடுத்து நமக்கு நாமே தண்டனை கொடுத்த நிலையாக ஆகிவிடும்.
ஏனென்றால், நாம் தீமைகளை அகற்றிடும்
நிலைகள் பெற்றுத்தான் இந்த உடல் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக
மாற்றி நல்லதைத் தன் உடலாக்கிடும் திறன் பெற்றது.
ஆக, நமக்குள் பதிவு செய்த
உணர்வின் நிலைகள் கொண்டு கேள்விப்பட்ட தீமையினை நீக்கி நல்ல உணர்வினைப் படைக்கும் ஆற்றல்
கொண்டது. இவ்வாறு படைத்திட்டவன் மகரிஷி.
அந்த மகரிஷிகளின் உணர்வை நாம்
நுகர்ந்து,
அதனுடன் நாம் இணைந்திட வேண்டும்
என்பதற்குத்தான்
பல வட்டங்களை இங்கே எழுப்பி
உங்கள் நினைவாற்றலை இணைத்து
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து
உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
தாவர இனங்களுக்கு எப்படியோ
அதைப் போல உங்கள் உணர்வை நுகரச் செய்யும்போது உங்களுக்குள் இது பால்வெளி மண்டலமாக வருகின்றது.
அப்பொழுது உங்களுடைய எண்ணங்கள் தீமைகளை அகற்றும் நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
இதை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.
ஆனால், நீங்கள் இதை நினைவுகொள்ள
வேண்டும்.
குறையான உணர்வுகளை எவர் சொன்னாலும்
அதைப் எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது. உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று நினைவினை அங்கே அதிகமாக்கி இந்தக் கணக்கைக் கூட்ட வேண்டும்.
எந்த அளவிற்கு அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் என்று அளவுகோல் கூட்டுகின்றீர்களோ இந்தத் தீமையின் நிலைகள்
வராது. ஆனால், குறையாகப் பேசுகிறார்கள் என்று அந்தக் கணக்கைக் கூட்டினால் நன்மை செய்யும்
கணக்குகள் குறைந்துவிடும்.
ஆனால், நன்மையினுடைய நிலைகளை
நன்மை நன்மை என்று நாம் சொன்னாலும் ஆக, அந்த நன்மை நன்மை ஆகாது.
நல்லது நல்லதும் ஆகாது,
கெட்டது கெட்டதும் ஆகாது.
தீமை என்ற காரத்தின் உணர்வினுடைய
நிலைகளுக்குள் நாம் நன்மை என்ற நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால் அந்தத் தீமையின் நிலைகள்
இதற்குள் உள்ளடங்கி நன்மை பயக்கும்
நிலையாக இணைந்தே இயக்கும்.
இதைப் போல, மகரிஷிகளின் அருள்
வட்டத்தை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். வாழ்க்கையில் எத்தகையை தீமைகள் வந்தாலும்
அந்த மகரிஷிகளின் அருளுணர்வுகள் என்னிலே பெறவேண்டும் என்ற இதைப் பெருக்கிக் கொண்டுதான்
இருக்க வேண்டும்.
ஆக, தீமை என்ற நிலைகளை இந்தக் கணக்கைத் தள்ளிவிட வேண்டும்.
இது சரியில்லை,
இது தப்பான கணக்கு என்று நீக்கிப்
பழகவேண்டும்.
இது இல்லையென்றால் நாம் நமக்குள்
இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றுதான் பொருள்.