ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2015

சித்திரபுத்திரனின் கணக்கு - எந்தக் கணக்கை நாம் கூட்ட வேண்டும்?

நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அவையெல்லாம் இந்திரீகம்.

இந்திரலோகம் என்பது நமது சரீரம் எத்தனை கோடிகள் இருப்பினும் “சித்திரபுத்திரன்”
நாம் கண் கொண்டு பார்த்த உணர்வுகள் எதுவோ
நினைவு கொண்டு உணர்ந்த நிலை எதுவோ
அவையெல்லாம் புத்திரனாக நமக்குள் அமைந்துவிடுகிறது.

நமக்குள் எண்ணத்தை எந்த வகையில் அதிகரிக்கின்றோமோ அதன் கணக்குப் பிரகாரம்தான் - சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் இந்திரலோகத்தின் செயலாக்கங்கள் இருக்கிறது என்று காட்டியுள்ளார்கள்.

அதே சமயத்தில் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். அந்த எமன் யார்?

நாம் எதை எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் கணக்கு அதிகமாகின்றது.

ஆக, இப்பொழுது மகரிஷியின் அருள் சக்தியினுடைய கணக்குகளை இந்த எண்ணத்தை நமக்குள் பதித்து இந்தக் கண்ணின் நினைவாற்றல் அங்கே செல்லப்படும்போது சித்திரபுத்திரன் அந்தக் கணக்கின் பிரகாரம் நமக்குள் தீமைகளை வென்றிடும் கணக்குகள் கூடுகிறது.

அந்தக் கணக்கின் பிரகாரம் நம்முடைய எண்ண வரிசைகள் எமனைக் கொன்றிடும் உணர்வுகளாக வருகின்றது. இந்த எண்ணத்தை அழித்துவிட்டு எமனையே கொன்றிடும் நிலையும் இங்கே வருகிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என்ற இந்த உணர்வைத்தான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஒருவன் தீமைச் செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் அவன் தீமை செய்தான், ஆகவே அவனை விடுவேனா பார்..,? என்று எண்ணினால் என்ன ஆகும்?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் அவனை அழித்திட வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ
அதன் மேல் நாம் கொள்ளும் பாசம்
பாசக் கயிறால் அவனுக்குள் விளைந்த தீயவினைகள்
உனக்குள் எப்படி விளைகிறது என்ற நிலையை
சித்திரபுத்திரன் கணக்கைக் காட்டுகிறார் குருநாதர்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் நீ கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள்
அவருடைய நிலைகளை
நீ எவ்வளவு நேரம் எண்ணுகின்றாயோ
எவ்வளவு நேரம் அறிகின்றாயோ
அந்தக் கணக்குக் கூடிவிடும்.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் அவன் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் அவனையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது.

அதாவது எருமையாக வந்து அவரின் நோயை நமக்குள் அங்கே கொண்டு செல்கிறான், நரகலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறான் என்ற இந்த நிலையை இவ்வளவு விளக்கமாக விரிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய மார்க்கங்கள் இப்படித்தான் என்று உணர்த்தினார் நமது குருநாதர்.

ஆனால், ஞானிகள் வகுத்துக் கொடுத்த இந்த நிலையை சித்திரபுத்திரன் கணக்கு என்று சொல்லப்படும் பொழுது எங்கேயோ கணக்கெடுக்கின்றான், அங்கே ஒரு கணக்கு இருக்கின்றது, அவனுக்கு இந்திரலோகத்தில் உத்தியோகம் என்ற நிலைகளைத்தான் நாம் எண்ணுகிறோம்.

இத்தகையை தீமைகளை நீக்குவதற்காக இதைக் கொன்றவன், வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை அங்கே காட்டி அந்த உணர்வினை இங்கே அந்தக் கணக்கைக் கூட்டு.

ஆக, நான் சொல்லும் நிலைகள் இப்பொழுது உனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை
இந்தச் சித்திரபுத்திரன் - கண்ணின் நினைவைக் கொண்டு
விண்ணை நோக்கி எடுத்து
அந்த உணர்வின் தன்மை கொண்டு அதை நீ கவர்ந்து
அதன் மேல் பாசத்தைச் செலுத்து.

அந்த உணர்வின் கணக்குப் பிரகாரம் உயிர் ஒளியானது. உணர்வு ஒளியாக மாறும் அதனின் நிலைகளுக்கு நீ செல்ல வேண்டும் என்று எமக்கு உணர்த்துகிறார் குருநாதர்.

நாம் ஒரு குழம்பு உதாரணமாக சாம்பார் வைக்கிறோம் என்றால் காரத்தை அதிகமாகக் கூட்டிவிட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம் காரம் காரம் என்ற உணர்ச்சிதான் வரும். உப்பை அதிகமாக்கிவிட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம்தான் அதனின் ருசி இருக்கும்.

இதையெல்லாம் அறிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையில் உங்களைப் பண்படுத்திக் கொள்ள இது உதவும்.

அந்த மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட அருள் சக்திகளை உங்களுக்குள் அதிகமாகப் பதியச் செய்து உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்கிறோம்.

ஆகவே, தீமைகள் உங்களை அணுகாது மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் இணைக்கச் செய்து “சித்திரம்” அந்த மகரிஷிகளின் உணர்வின் எண்ணங்களைக் கூட்டச் செய்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கப் பெருக்க அந்தக் கணக்கின் பிரகாரம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடன் நாம் இணைந்து வாழ முடியும்.
நம்மால் நிச்சயம் இது முடியும்.
மனிதர்களால் சாத்தியமானதுதான்.