ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2014

இறந்தபின் செல்வம் நம்முடன் வருமா? உடல் கூட நம்முடன் வருவதில்லை!

இன்று நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு, உடலை வளர்க்க செல்வத்தைத் தேடி அலைகின்றோம்.

அதே சமயம், நாம் தேடிச் சேர்த்த செல்வம் இறந்தபின் நம்முடன் வருமா? வருவதில்லை.  நமது உடல் கூட வருவதில்லை.

ஆனால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி,
அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா?
அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா?
என்ற அச்சமும், வேதனையும் கொள்கின்றோம்.

ஆனால், தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம். “அவனை எப்படிக் காக்கப் போகிறேன்?” என்று அவனை நினைத்து, வேதனையின் உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால்,
நமது உடலில் விஷ அணுக்கள் பரவி,
நம்மை மனிதனாக உருவாக்கிய
நல்ல அணுக்களைக் கொன்றுவிடுகின்றது.
கடும் நோயினை, நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

நோயானபின் உடல் நலிந்து, மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து, விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில் உடலைவிட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.

எந்த மகன்மீது பற்று வைத்தோமோ அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது. குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும், பத்துபேரில், யார் மீது அதிகப் பாச உணர்வை செலுத்தினோமோ, இதன் உயிரான்மா இதன் தொடர்கொண்டு, தான் பற்று கொண்ட உடலுக்குள் செல்கின்றது.

இது போன்றே, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள்
நான் அவனுக்கு உதவி செய்தேன்.
ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை,
உதவி வேண்டும்போது மட்டும் என்னை அணுகினான், அவனுக்கு வசதி சேர்ந்தபின், என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லைஎன்று வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து, எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி, இந்த உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின் எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ, உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.

அங்கே சென்று, தன்னுள் வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி, வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில், தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு,
வெளி வந்தபின்,
உயிரான்மா  பாம்பாகவோ, தேளாகவோ தான்,
அடுத்த உடலை உருவாக்கும்.