முதல் அவதாரம் - நாராயணன்
உயிரணுவின் தோற்றத்தையும்,
அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும், மனிதர், தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை
எது? என்பதையும், நமக்கு உணர்த்துவதற்காக, ஒரு உயிரணுவின்
உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.
உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின்
தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து, தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு
தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கி, நம்மை நல்வழிப்படுத்துவதற்காக,
உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை, கடவுளின் அவதாரங்களாக வகைப்படுத்தி, உயிரணுவின் தோற்றுவாயான
சூரியனுக்கு நாராயணன் என்று பெயரிட்டு, சூரியனைக் கடவுளின் முதல் அவதாரம், என்று நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.
1. சீவலிங்கம்
ஆதியின் வான்வீதியில் ரூபங்கள்
இல்லாத நிலையில் ரூபமாக, திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்றும், ரூபங்கள் உருவாகக்
காரணமாக இருந்த கண்ணுக்குப் புலப்படாததை, சக்தி என்றும், அது ஒன்றாக இணைந்து திடப்பொருளாகும்
பொழுது, பரமசிவம் என்றனர் ஞானிகள்.
பரம் என்பது எல்லை. பரம்பொருளாவதை
பரமசிவம் என்றும், சக்தி சிவமாகின்ற நிலையை நாம் தெரிந்து கொள்வதற்காக, பரமசிவம் என்று
காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
பரம்பொருள், தன் அருகில் காந்தப் புலன் மோதும் பொழுது, சுழற்சியின்
தன்மை அடைகின்றது. தன் ஓடு பாதையில் சுழற்சியால் ஈர்ப்பாவதும், தனது துருவப் பகுதியில், தனக்கு எதிர் முனையில்
வருவதைக் கவர்வதும், கவர்ந்து கொண்ட உணர்வை வெப்பம், தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.
இத்தகைய நிலை பெறுவதைத்தான்
சீவலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள். ஜீவனுள்ளதாக ஒரு பொருள் உருவாகின்றது என்பதை
நமக்கு உணர்த்துவதற்காக, சீவலிங்கம் என்று காரணப்பெயரை வைத்தார்கள்.
நாம் இன்று சிவலிங்கம் என்று
சொல்லுகின்றோம். ஆனால், மெய்ஞானிகள் வைத்த பெயரோ “சீவலிங்கம்”. ஆக, ஜீவிக்கும் திறன் பெற்று,
தனக்குள் வளர்க்கும் திறன் பெற்றது.
பரம்பொருள் தனது சுழற்சியின்
பொழுது, தன் துருவப் பகுதியில் எதிரில் வரும் தனது உணர்வினைக் கவர்ந்து, தனக்குள் உள்இழுப்பதும்,
இதற்குள் ஏற்படும் வெப்பத்தின் தன்மை கொண்டு, பரம்பொருளுக்குள் வெப்பம் நடுமையம் அடைந்து,
தன் அருகிலே இருக்கும் நிலைகள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, தன் அருகிலே இருப்பதை
அனைத்தையும் அது அமிலமாக மாற்றுகின்றது. பின் அதில் உள்ளது ஆவியாக மாறி, ஒரு திடப்பொருளாகின்றது.
மேற்பரப்பில் கவரப்படும்
அனைத்து சத்தும், கொதிகலனாகும் பொழுது, கீழிறங்குகின்றது. உதாரணமாக ஒரு இரும்பை உருக்கினோம்
என்றால், கீழ்பரப்பு உருகி, கீழே இருக்கும் பாகம் அமிலமாக மாறுகின்றது. கீழ்பாகம் உருக
உருக, மேல்பாகம் கீழே இறங்குகின்றது.
இதைப் போன்றுதான், பரம்பொருள்
தன் சுழற்சியாகும் பொழுது, மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை, அது நடுப்பாகத்தில்
வெப்பத்தின் தன்மை கூடி, தன் அருகிலே இருப்பதை உருகச் செய்து, அதன் உணர்வுகள் கீழே
இறங்குவதும், பாம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும், தான் கவர்ந்து கொண்ட
சக்தி, இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும், உலோகத் தன்மைகளாக மாறுவதும், கல் மண்
பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஆவதினால்தான், சீவலிங்கம் என்ற காரணப்பெயரைச்
சூட்டினார்கள்.
இவ்வாறு தனது வளர்ச்சியில்
கவர்ந்து கொண்ட நிலைகள், சிறு பொருளாக இருந்தது, பெரிய பொருளாக மாறுகின்றது. அப்படி
உருப்பெற்ற பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது. பெரும் பொருளாக மாறும் பொழுது, அதனின்
வளர்ச்சியும் அதிகரித்து, சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால்,
வெப்பத்தின் தன்மையும், ஈர்ப்பின் தன்மையும் அதிகரிக்கின்றது.
ஆக, சுழற்சியால் ஏற்படும்
வெப்பத்தை, தன் நடு மையத்தில் சேர்த்துக் கொள்கிறது. இதனால் வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது.
தன் அருகிலே இருக்கக்கூடிய பொருள்களின் கலவைகளை சீக்கிரமாக மாற்றுகின்றது. இந்த உணர்வின்
தன்மை பாறைகளாகவும், உலோகங்களாகவும் மாறுபடுகின்றது.
உதாரணமாக, ஒரு இரும்பு திடப்பொருளாக
இருப்பதை நெருப்பில் போட்டால், அது அமிலமாக மாறுகின்றது. இதைப் போன்று பரம்பொருள் மையத்தில்
அமிலநிலை உருவாகின்றது.
முதலில் நீராக இருந்தது,
அதனில் ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி, ஒன்றாக இணைந்த
அணுக்கள் இரண்டறக் கலந்து, ஒரு பொருளாக மாறியது.
2. கடவுள் என்ற தனித்தன்மை இல்லை
அதே சமயம் அதனின் சுழற்சி
வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள் உருகும் தன்மை அடைந்து, அதனில்
உருமாற்றங்கள் ஏற்படும் நிலைகள் பெற்றது. இந்த நிலைகள் எல்லாம், சந்தர்ப்பத்தால் உருவான
நிலைகள். கடவுள் என்ற தனித்தன்மை
இல்லை.
இயற்கையில் சந்தர்ப்பத்தால்
இணைந்த சக்தியின் நிலைகள்,
எதிர்மறை கொண்டு இயக்கும் நிலைகளால்தான்,
ஒன்றுடன் ஒன்று மோதி,
ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை
உருவானது.
கடவுள் என்பது வெப்பமாக உள்நின்று, தனது இயக்கத்தின் தொடர்
கொண்டு, தனக்குள் வருவதை உருமாற்றி, உணர்வை மாற்றி பல நிலைகளை உருவாக்குகின்றது. உள் நின்று இயக்கும் வெப்பத்திற்குத்தான் கடவுள், என்று காரணப்
பெயரை வைத்தார்கள், ஞானிகள்.
பிரபஞ்சம் உருவாகும் நிலையை,
சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில், ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு
உணர்த்தியுள்ளார்கள். சிவதத்துவத்தில் சக்தி சிவமாகும் விதத்தைக் காண்பித்து, பரமசிவம்,
சர்வேஸ்வரன், ஈஸ்வரன் என்னும் நிலைகளையும் காண்பித்து, அதனின் உண்மைகளை நம்மை அறியும்படி
செய்தனர்.
சிவனைக் காண்பிக்கும் பொழுது,
சிவனுக்கு இரண்டு மனைவி என்றும், ஒரு மனைவி ஜடாமுடி மேல் உள்ள கங்கை என்றும், இன்னொரு
மனைவி உடலில் சரிபகுதி பெற்ற பராசக்தி என்றும், உரைத்திருப்பார்கள் ஞானிகள்.
3. சிவன், பராசக்தி, திரிசூலம்
தான் நுகர்ந்த அணுவுக்குள் உள்ள வெப்பமும், தன்னுடன் இணைந்து இயங்குவதால் சிவனில் சரிபகுதி பராசக்தி
என்றும், நீரும் நெருப்பும் கலந்து, எப்பொருளின் தன்மையை தனக்குள் இணைக்கின்றதோ, அது தன்னுடன் இணைந்து
நிலமாக, சிவமாக மாறுகின்றது என்ற நிலையை, சிவரூபத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
சிவன் கையில் உள்ள திரிசூலம்,
நீர், நிலம், நெருப்பை நமக்கு உணர்த்தி,
திரிசூலத்தில் உள்ள உடுக்கையின் மூலம்,
ஒரு பொருளின் தன்மை ஒன்றிலே
மோதப்படும் பொழுது,
அதனின் மோதலின் நாதங்கள் மாறி,
உணர்வின் தன்மை எப்படி மாற்றங்கள் ஆகின்றது?
என்ற நிலைகளை நமக்கு உணர்த்தினார்கள்.
சிவனின் கழுத்திலும், கையிலும்,
விஷம் கொண்ட பாம்பு இருக்கும்.
ஆக, இதன் மூலம் விஷத்தின் இயக்கத்தையும்,
விஷத்தின் தன்மை மற்றொன்றுடன்
கலந்தபின்,
அது எதனின் உணர்வை நுகர்ந்ததோ,
அதனின் இயக்கமாக இயக்கும்
நிலையையும்,
நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்
ஞானிகள்.
சிவன் உடலிலே யானைத்தோல்,
புலித்தோல், மான்தோல், இவற்றிலான உடைகள் இருப்பதாகக் காண்பித்து, மானும் சிவமே, யானையும்
சிவமே, புலியும் சிவமே என்று உரைத்து, இதனின் உணர்வினால், உடல்கள் மாற்றமாகி உணர்வின் தன்மை கொண்டு,
மனிதனாக உருவானோம் என்பதையும் தெளிவாக்கியுள்ளார்கள்.
ஜடாமுடியில் பிறைச் சந்திரனைப் போட்டு, ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது, அதனதன்
செயல்கள் சமபங்கு இழந்துவிடுகின்றன, ஆக, அதனின் நிலைகள் குறைந்துவிடுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கி,
உலகம் உருவான விதத்தை ஞானிகள் சிவரூபத்தின் மூலமாக, நமக்கு உணர்த்துகின்றார்கள். இப்படி,
ஞானிகள் ஆதியில் கோள்களும், நட்சத்திரமும், சூரியனும், பிரபஞ்சமும் எப்படி உருவானது
என்று நமக்கு உணர்த்தினார்கள்.
4. ஸ்ரீதேவி, பூதேவி
பாற்கடலில், ஆதிசேஷன் மேல்
பள்ளி கொண்டு நாராயணன் இந்த உலகை இரட்சிக்கின்றான் என்றும், சூரியன் தான் வளர்த்துக் கொண்ட சக்தியை ஸ்ரீதேவி என்றும், அடுத்து அது திடப்பொருளாகும் பொழுது, பூதேவி என்றும் ஆக, நாராயணன் இரு சக்தியின் துணை கொண்டு இயங்குகின்றான்,
என்றும் உணர்த்தினார்கள்.
சிவதத்துவத்தில், கங்கை ஒரு
மனைவி என்றும், அதனுடன் சேர்ந்த வெப்பம் இன்னொரு மனைவி என்றும், ஆக சிவனுக்கு இரண்டு
மனைவி என்றுரைத்து, நீரின் சக்தியும், வெப்ப சக்தியும் இல்லையென்றால், உருப்பெரும் சக்தி
இல்லை. ஆக இது சிவசக்தி.
ஆனாலும், சூரியன் காந்தத்தால்
இழுத்து உறையச் செய்யும் பொழுது, உடலாக மாற்றப்படும் பொழுது, ஸ்ரீதேவி என்றும், இப்படி
உடலின் தன்மை அடைந்தபின், சுழற்சியின் தன்மை பெற்று தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை
உருவாகின்றது. ஆக, இதை ஞானிகள் பூதேவி என்றும் தெளிவாக்கியுள்ளார்கள்.
நாராயணன் ஒரு கடவுள். அவன்
எங்கேயோ இருந்து கொண்டு நம்மை இரட்சிக்கின்றான் என்று எண்ணுகின்றோம். ஆனால், நாம் வேதங்கள்
நமக்கு உணர்த்திய மூலத்தின் உண்மையை, ஞானிகள் காட்டிய வழியில் உணர்ந்திடல் வேண்டும்.
அப்படி உணர்ந்து, அந்தக்
கருத்தின் உணர்வாக இயங்கத் தொடங்கினால், அதனின் உணர்வை நாம் பெற்று, சூரியன் ஒளிச்சுடரானது
போன்று, மனிதர் தம் ஆறாவது அறிவின்
துணை கொண்டு, ஏழாவது நிலையான ஒளியின் உணர்வின் தன்மையினை வளர்க்க முடியும். எமது அருளாசிகள்.