ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2014

சாமி செய்யும் என்றால் சாமி ஒன்றும் செய்யாது, ஏன்?

1. சாமி செய்யும் என்றால் சாமி ஒன்றும் செய்யாது, ஏன்?
பக்தி என்ற நிலைகளில், ஆராதனை செய்துகொண்டு
சாமி செய்யும் என்றால், ஒன்றும் செய்யாது”.

சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை
நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்,
அந்த வேதனை கலந்து, நல்ல குணமும் சேர்ந்து
உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.

கடைசியிலே, நமக்குள் அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம், வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான்
தெய்வமாக உணர்த்தப்பட்டு, அதை முன்னிறுத்தி,
இந்த குணம் உங்களுக்கு இன்னது செய்யும்,
இந்த குணம் நம் உடலிலே இருக்கிறது.
உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை,
அதற்குப் பெயர்களை வைத்து
தெய்வ உருவங்களாக காட்டி
அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால், நாம் ஆராதனை செய்துவிட்டு, சாமி செய்யும்என்றால் எப்படிச் செய்யும்?
2. தியானம் செய்வதை பெரிய மலை என்று எண்ணுகின்றோம்
தியானம் என்றால் என்னமோ பெரிய மலை என்று எண்ணுகிறோம்.
நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
திரும்பத் திரும்ப நினைத்து,
அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால், இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு, குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். அந்தச் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியை,
சொல்லாலே, பேச்சாலே, இந்த உணர்வாலே கொடுத்து,
உங்களுக்குள், நீங்களும் வளர்த்துக் கொள்ள
வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து, இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை, மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம். இதைப் போலத்தான், இந்த தியானம் என்பதின் நிலைகள்.
3. எண்ணும் எண்ணமே இறைவன், இறையின் செயலே தெய்வம்
அழுத்தமாக ஓம் ஈஸ்வரா என்று,
நம் உயிரை - புருவ மத்தியில் எண்ணி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்என்ற
சுவாச உணர்வுகளை
நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி”, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்களுக்குள் தீமை செய்யம் அணுக்களை இது நன்மை செய்யும் அணுக்களாக மாற்றும். நல்ல சிந்திக்கும் திறன் கிடைக்கும். வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவான வழியைக் காட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

இந்த சக்தியை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ச்சப்படும் பொழுது, இந்த உணர்வுகள் அங்கேயும் சென்று வேலை செய்யும்.
தீமைகள் அகலும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

வீட்டிற்குள்ளேயோ, தொழில் செய்யும் இடங்களிலேயோ, மற்ற இடங்களிலேயோ, பகைமைகள் வருகின்றது. அந்தப் பகைமையை நீக்கச் செய்யும் இடம்தான் கோவில்.

அதாவது கோவிலுக்குள் வந்தால் ஒருமை. மக்கள் அனைவரும் ஒன்றி வாழ மகிழ்ந்து வாழத்தான் அன்றைய ஞானிகள் கோவிலை அமைத்தார்களே தவிர,
நம் குறைகளைச் சொல்லவோ,
வேதனைகளை வெளிப்படுத்துவதற்கோ,
மற்றவரை வேதனைப்படச் செய்வதற்கோ கோவில் இல்லை.

மனிதனைப் பண்படுத்தி, அடுத்த நிலையாக மனிதன் தெய்வீக நிலை பெறச் செய்ய உருவாக்கப்பட்ட இடம்தான் கோவில். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வம். இதைத்தான் கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று அன்று வியாசக பகவான் தெளிவாக உணர்த்தியுள்ளார்.