மூன்றாவது அவதாரம் - இராமன்
கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.
உயிரணு பெறும் சரீரத்தின்
தோற்றமான விதத்தையும்,
எண்ணங்களின் தோற்றத்தையும்,
அதனின் இயக்கங்களை நமக்கு
உணர்த்துவதற்காக,
அன்று ஞானிகள் இராமன் என்னும்
கதாபாத்திரத்தைப் படைத்து, இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.
1. எண்ணம் தான் இராமன்
சூரியனிலிருந்து வெளிப்படும்
வெப்பம், விஷம், காந்தம், புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது, ஒரு செடியிலிருந்து
வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது, அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.
அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால்,
அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.
“சீதா” என்ற இந்த சுவை உயிருடன்
ஒன்றி,
அதன் உணர்வின் உடலாக சிவமாக
மாறுகின்றது.
சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.
இதைத்தான், திரேதாயுகத்தில்
நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று, தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது. அதில்
திரேதா என்பது சரீரம், உயிரணு உடல் பெறும் நிலை. இதற்குள் சீதாராமன், தான் எடுத்துக்
கொண்ட சுவை எதுவோ, அந்த எண்ணமாக இயக்குகின்றது.
ஒரு உயிரணு கடலைச் செடியின்
மணத்தை நுகர்ந்து, புழுவின் உடலைப் பெற்றபின் கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும் என்ற
எண்ணம் அந்தப் புழுவிற்கு வருகின்றது. அதாவது, எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ, அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான்
எண்ணம் வருகின்றது.
உயிரணு ஒரு செடியிலிருந்து
சத்தினை நுகர்ந்து, தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது, “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி,
இதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகின்றது.
உணர்ச்சியை வைத்து
உணர்வை இயக்கி,
அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது. எண்ணம் இல்லை என்றால்,
இயங்காமல்தான் இருக்கும்.
எந்த நினைவினை எண்ணுகின்றோமோ,
அது இராமனின் அம்பு போன்று
பாய்ந்து,
உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும்
இயக்கி,
அதன் தொடர் கொண்டு நமது உடலை
இயக்கும்.
எண்ணம் உருவாகவில்லை என்றால்,
உடலை இயக்காது.
இதைத்தான், நாராயணன் திரேதாயுகத்தில்
சீதாராமனாகத் தோன்றுகின்றான், என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது.
2. துன்புறுத்தும் உணர்வை வென்றவர் எவரோ அவரே கல்யாணராமன்
மனிதரிடத்திலும், உணர்வின்
எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள். கல்யாணராமனாக
எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத்
தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு, வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ,
அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர்.
ஏனெனில், காண்டீபத்தில் பொருத்தி
எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது. ஆகவே, துன்புறுத்தும் உணர்வை
வென்றவர் எவரோ, அவரே திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர்.
வீரதீரம் காட்டிய பலரும்
வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை. ஆனால்
இராமனோ,
தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து
தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்
என்பதை உணர்த்தும் பொருட்டு,
இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறித்துவிடுகின்றான்.
அதன்பின், சீதையை மணந்து
கொள்கின்றான் என்று காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியினை தன்னுடன் இணைத்துக் கொண்ட
நிலையைத்தான், “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர்.
மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி, அந்தத் தீமையைச் செயல்படவிடாது
தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் மகரிஷிகள். துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும்
நிலையை அடைந்தார்கள்.
பல கோடி தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், மகரிஷிகள் அதனை தமது அரவணைப்பாக, தமக்குள் சுவையாக
ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள்.
துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது. ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாறியவர்கள். இதுதான் ‘’கல்யாணராமா’’ என்பது.
3. மறைந்திருந்து வாலியின் செயலை ஒடுக்கினான் இராமன் - விளக்கம்
மேலும், இராமாயணத்தில் பிறர் கொள்ளும் கோபம், பிறர் கொள்ளும்
வேதனை போன்றவைகளை வாலியாகக் காண்பித்தனர். வாலி வலிமை மிக்கவன் என்றும், எதிரில் நிற்கும்
எதிரியின் வலிமையில் பாதி இவனுக்கு அதிகமாக வந்துவிடும் என்றும், இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.
இப்பொழுது, ஒரு மனிதன் வேதனையால் வாடுகின்றான் என்றால்,
நாம் அதைப் பரிவு கொண்டு, பண்பு கொண்டு பார்க்கும் பொழுது, அவனுடைய வேதனையான உணர்வுகள்
நம்முள் கலந்து, நம்முடைய நல்ல குணங்களை வலுவிழக்கச் செய்கின்றன.
நாம் எவ்வளவு பண்பு கொண்ட மனிதர்களாக இருப்பினும்,
வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால்,
அது நம் உடலுக்குள் கலந்து,
நமது நல்ல குணத்தின் தன்மையை வலுவிழக்கச் செய்துவிடும்.
ஆக, நாம் கேட்டுணர்ந்த வேதனை என்ற உணர்வுகள், நம்முள்
வலிமை பெறுகின்றது. இதுதான்,
வாலி எவரைப் பார்த்தாலும்,
அவரின் வலுவின் சரிபகுதியை, தனக்குள் பெற்றுக் கொள்வான், என்று காரணப்பெயரைச்
சுட்டிக் காட்டி, மனிதன் தன் இயல்பான நிலைகளிலிருந்து, எவ்வாறு தன்னை மீட்டிக்
கொள்ள வேண்டும்? என்பதனை இராமாயணத்தில் காண்பித்தார்கள்.
மனிதனின் இயல்பு, பிறர் துயரப்படுவதைக் கேட்டுணர்ந்து, அந்த துயரிலிருந்து மீட்டுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன்.
ஆனால் ஒரு சிலருக்கு அந்த துயரத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் என்ணம் இருந்தாலும், துயரப்படுவோரிடத்தில் விளைந்த உணர்வே இவரிடத்திலும்
விளைந்து விடுகின்றது.
இதிலிருந்து மீளும்
மார்க்கத்தை நமக்கு உணர்த்தும் பொருட்டுத்தான், “வாலியை இராமன்
மறைந்திருந்து தாக்கினான்” என்று இராமாயணத்தில்
காண்பித்தார், வான்மீகி மாமகரிஷி.
மறைந்திருந்து தாக்கவில்லை. மறைந்திருந்து அதனின் செயலை
ஒடுக்கினான் என்று அறிதல் வேண்டும்
ஏனென்றால், ஒரு மனிதன் வேதனைப்படுவதை
நாம் நேர்முகமாகப் பார்க்கும்பொழுது
அல்லது கேட்கும் பொழுது,
அந்த நோயின் தன்மை நம்முள்
கலந்து,
நமது நல்ல குணங்களில் ஊடுருவி,
நஞ்சு கலந்ததாக
ஆக்கிவிடுகின்றது.
நாம் நல்ல
குணத்தின் வலிமையை இழக்கின்றோம்.
இதிலிருந்து தப்ப வேண்டும்
என்பதை உணர்த்தும் பொருட்டுதான், இராமன்
மறைந்திருந்து வாலியை அடக்கினான், என்று நமக்கு உரைத்தனர் ஞானிகள்.
நாம் வேதனையை நுகர்கின்ற
பொழுது, நமது உடல் நடுங்குகின்றது, பயமாகின்றது, சோகம் சூழ்கின்றது. நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
இது போன்ற நிலைகளிலிருந்து மனிதர் மீள்வதற்குத்தான், அன்று ஞானிகள் காட்டியது ‘’கல்யாணராமா’’.
4. விஷத்தை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர் துருவ மகரிஷி
இன்று உலகில் எத்தனையோ விஷத்தன்மை இருப்பினும், தம்முடன் அரவணைத்து,
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் துருவ
மகரிஷி.
அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளையும்,
வேதனை கொண்ட உணர்வுகளை
தனக்குள் அடக்கி,
அதை தம்முள் ஒளியின் சரீரமாக
மாற்றிய
மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும்,
(துருவ மகரிஷியைப் பின்பற்றியவர்கள்)
எவர் தம்முள் கவர்கின்றனரோ,
அவர் பிறருடைய தீமையான
உணர்வுகளைக் கேட்டறிந்தாலும்,
அதனின் விஷத்தன்மையை அடக்கி
சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று,
தீமையிலிருந்து விடுபடமுடியும்,
இதுதான் ‘’கல்யாணராமா’’.
நாம் கல்யாணராமனாக ஆக வேண்டும். ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷிகளின்
அருளுணர்வின் துணை கொண்டு, நாம்
செயல்பட வேண்டும்.
அப்படிச் செயல்பட்டோம் என்றால், நாம் என்றும் கல்யாணராமனாக உலகில் எத்தனை
தீமைகள் இருப்பினும், தீமைகளை ஒடுக்கி நல் உணர்வைத் தன்னுடன் அரவணைத்து, ஒளியின் சரீரமாக தீமையற்ற நிலையாக, நாம் வாழமுடியும் என்பதுதான் இராமாயண
காவியத்தில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.