ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2014

கடவுளின் அவதாரம் - கூர்ம அவதாரம்

ஐந்தாவது அவதாரம் - கூர்மை
1. குருக்ஷேத்திரப் போர்
“நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்”. அதாவது, நாம் தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினோம் என்றால், நமக்குள் அந்த உணர்வின் தன்மை விளையும்.

நல் ஞானியின் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது, நாமும் அவர்கள் அருள் வட்டத்தில் இணைய முடியும். இதைத்தான் அன்று ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள்.

உதாரணமாக, ஒரு ஆமையைப் பார்த்த நரி, அதைத் தன் உணவாக எண்ணி, ஆமையின் அருகே வருகின்றது. ஆக, நரியின் உணவுக்கு, நரியின் கண் ஆமையைக் காட்டுகின்றது.

நரியின் கண், ருக்மணி படமெடுத்து ஆமையைக் காட்டினாலும், அதன் கண்ணுக்குள் இருக்கும் சாந்தமான சத்யபாமா, ஆமை புசிப்பதற்கு உகந்ததுதான்என்று நரிக்கு உணர்த்துகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு, ஆமையின் உடலிலிருந்து வரக்கூடிய மணம், நரியால் சுவாசிக்கப்படும் பொழுது, நரியின் உயிரான குருஷேத்திரத்தில், ஆமையின் உணர்வலைகள் மோதி இயக்கப்படும் பொழுதுதான், நரியிடத்தில், “இனி இதனை எளிதில் கவரலாம்என்ற உணர்வின் நினைவலைகளை, இயக்குகின்றது.

அதே சமயம், நரியின் நினைவலையும், ஆமையின் உணர்வும், நரியின் உயிரான குருக்ஷேத்திரத்தில், ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.

ஆமையின் உணர்வுகள் எளிதாக இருப்பதனாலும்,
அதே சமயம், நரியின் உணர்வுகள் வலுவுடன் இருப்பதனாலும்,
நரியின் உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்து,
இதை நாம் விழுங்க முடியும்,
இதை நாம் பிடித்துக் கொள்ள முடியும் என்று,
உயிருக்குள் உணர்வுகள் தூண்டப்பட்டு,
நரியானது, ஆமையின் அருகிலே செல்லுமாறு இயக்கப்படுகிறது.
2. கண்ணே (கூர்மை) காத்திடும் நிலையாக இருக்கின்றது
ஆனால், ஆமை நரியைப் பார்த்தபின்,
அதன் உடலிலிருந்து வரக்கூடிய வலுவான உணர்வை
இந்த ஆமை நுகர்ந்து, உணர்ந்து,
இதனின் உயிரான குருக்ஷேத்திரத்தில் போர் நடக்கின்றது.
ஆனால், அதே சமயம் நரியின் உணர்வைக் கண்டு,
தன் சிரசை உள் இழுத்து, தன்னைக் காத்துக் கொள்கின்றது.
ஆக, இவையனைத்திற்கும் கண்ணே காத்திடும் நிலையாக இருந்து, செயல்படுத்துகின்றது.

அதே சமயம், நரிக்கும் அதன் கண்தான் வழிகாட்டுகின்றது. அதனின் வழி நரி சென்றாலும், ஆமையின் உயிரான குருக்ஷேத்திரத்தில், நரியின் உணர்வான நிலைகள் உந்தப்படும் போதுதான், ஆமை நரியின் வலுவைக் கண்டு, தன்னைக் காத்திடும் நிலையாக, தனக்குள் தன் சிரசை உள் இழுத்துக் கொள்கின்றது.

அவ்வாறு, ஆமை தன் சிரசை உள் இழுத்துக் கொண்டாலும், அந்த நரியைப் பார்த்த உணர்வுகள், ஆமையின் உடலுக்குள் வலுபெறும் நிலையாக ஆகிவிடுகின்றது. இதைத்தான், குருஷேத்திரப் போரில் கண்ணன் சங்கநாதம் ஊதிய பிறகுதான், குருஷேத்திரப் போரே நடக்கின்றது என்று வியாசர் எடுத்துரைக்கின்றார்.

ஆக, இங்கே ஆமையின் கண்கள், நரியிடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கவர்ந்து சுவாசிக்கும்போது,
உயிரான குருக்ஷேத்திரத்தில் சங்கநாதம்,
அதாவது, உணர்வின் நாதம் வெளிப்படும்போது,
நரியின் உணர்வின் வலுவை அறிகின்றது.
அதன்பின் தான், ஆமையின் உயிரான குருக்ஷேத்திரத்தில், அதனின் உடலிலிருக்கும் உணர்வும், நரியின் உணர்வை நுகர்ந்து கொண்ட உணர்வும், இரண்டறக் கலந்து, அதில் நரியின் உணர்வு வலுவாகும் பொழுது, “அதனிடம் சிக்கிக் கொள்வோம்என்ற நிலையை இது உணர்ந்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு, தன் தலையை இழுத்துக் கொண்டாலும், நரியின் உணர்வுகள் அனைத்தும், இந்தச் சாந்தமான ஆமையின் உணர்வின் குணங்களுக்குள், இரண்டறக் கலந்துவிடுகின்றன.

அதே சமயம், நரியின் உணர்வு ஆமையின் சாந்தமான உணர்வுடன் கலந்தவுடன், அந்தப் போரில் நரியின் உணர்வே மேலோங்கி, இந்த ஆமையைத் தன் உணவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று உணர்த்தினாலும், அது ஊதிய சங்கநாதம் கொண்டுதான், நரியும் இந்த ஆமையை உணவாக உட்கொள்ள, நகர்ந்து வருகின்றது.
3. கூர்மையாகப் பார்த்து, வலுகொண்ட உணர்வின் உடலுக்குள் புகுந்துவிடு
இவ்வாறு, நரி ஆமையை நோக்கி நகர்ந்து வரும்போது, இந்த ஆமை தன்னைக் காத்துக் கொள்ள, நரியைக் கூர்மையாகப் பார்த்து, அந்த உணர்வின் சாரத்தைச் சேர்க்கச் சேர்க்க, ஆமையின் உணர்வுகள் ஒடுங்குகின்றது.

ஆக, ஆமையின் உடலுக்குள்
நரியின் உணர்வலைகள் ஓங்கி வளர்ந்தபின்,
ஆமையின் உணர்வுகள் செயலற்றதாக, இதற்குள் ஆகி
ஆமையின் உடலுக்குள் போர் நடந்து,
ஆமையின் உடலைப் பிளந்து,
அதனின்று விளைந்த நிலையை,
ஆமையின் உயிர், தன்னுடன் அழைத்துச் சென்று,
அந்தக் கண்கள் காட்டிய, கண்ணனின் வழி கொண்டு,
நரியான அந்த வியூகத்தைத் தகர்த்து, அதனின் வலுவை,
இதற்குள் சேர்த்துக் கொண்ட, உணர்வின் துணை கொண்டு,
நரியின் உடலுக்குள் ஊடுருவி,
அதனின் மையம் அடைந்து,
அந்த நரியின் உணர்வே, இந்த ஆமையின் உடலுக்குள்
சேர்ப்பித்து வளர்த்துக் கொண்டு,
நரியின் உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு,
நரியின் உணர்வின் சத்தை இது கவர்ந்து,
இந்த உணர்வின் துணை கொண்டு, நரியாக உருவாக்குகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொரு பிறவியிலும் தன்னுடைய சரீரத்தைக் காத்துக் கொள்வதற்காக,
நமது கண்கள்
“உன்னைக் காட்டிலும் இது வலுக்கொண்டது,
எனவே, அதனின் உணர்வு கொண்டு,
அதனை நுகர்ந்து தப்பித்துக் கொள்” என்று
இந்த உடலுக்குள் உணர்வின் சத்தை வளர்த்து, அதனின் வலுவைக் கூட்டச் செய்கின்றது.

நீ இந்த உடலை விட்டுச் சென்றபின், கவர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, “இவ்வுடலைக் காட்டிலும், வலுக் கொண்ட உணர்வின் உடலுக்குள் புகுந்துவிடு” என்று இந்தக் கண்ணே உணர்த்துகின்றது,
4. வியூகத்தைத் தகர்த்து, அதனுள் சென்று அதுவாகிவிடு – கூர்மை அவதாரம்
கண்ணன் காட்டிய வழிப்படி, தான் கவர்ந்த உணர்வின் துணை கொண்டு, ஒன்றின் ஈர்ப்புக்குள் புகுந்து, ஒன்றின் வியூகத்தைத் தகர்ந்து. கவர்ந்த உணர்வின் துணை கொண்டு, அதனின் சத்தைத் தனக்குள் கவர்ந்து, “தானே அதுவாக ஆனது” என்ற நிலையை உணர்த்துவதற்காக, கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்” என்று உணர்த்தப்பட்டது.

மான் ஒரு புலியைப் பார்த்து, புலியிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றது. ஆனால், புலி தன் பசியைப் போக்க, மானைப் பார்த்து, தனது ஆவேச உணர்வு கொண்டு தாக்க எண்ணினாலும், புலி வெளியிடும் உணர்வின் தன்மையை, மான் நுகர்ந்து அறிகின்றது.

புலியின் ஆவேச உணர்வை மான் நுகர்ந்து அறிந்து கொண்டபின்,
மானின் சாந்தமான உடலுக்குள்,
புலியின் வீரியமான உணர்வு அதிகரித்து,
பயத்தின் உணர்வுகள் அதிகமாகி,
புலியின் உணர்வைச் சுவாசித்து,
மானின் உயிருக்குள் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது.
அந்த சமயம், மானின் கண், மானுக்குத் தப்பித்து ஓட வழியைக் காட்டுகின்றது.

ஆனாலும், புலி மானை விடாது துரத்தும் பொழுது, மான் புலியை எதிர்த்து நிற்கின்றது. அப்பொழுதும், கண்ணே மானை வழி நடத்துகின்றது.  அப்பொழுது புலியின் உணர்வு அதிகரித்து, மானின் உடலுக்குள் கூடி, மானின் உடலைப் புலி தகர்த்துவிடுகின்றது.

அப்படித் தகர்த்துவிட்டால், புலியின் உணர்வின் துணை கொண்டு, மானின் உயிரான்மா புலியின் வியூகத்தைத் தகர்த்து, வியூகத்தில் ஊடுருவி, புலியின் உணர்வை நுகர்ந்து,
புலியின் உணர்வாகக் கருவுற்று,
மான் புலிக் குட்டியாகப் பிறக்கும் நிலை வருகின்றது.

கண்ணன் காட்டிய உபதேசம் என்பது, “ஒன்றைக் கூர்ந்து கவனித்து, கூர்ம அவதாரமாக அதுவாக நீ மாறு.
ஒன்றின் வலுவை உனக்குள் சேர்த்தால், இப்பொழுதுள்ள உடல் இழக்கப்பட்டால், எதனின் உணர்வை வலுவாகச் சேர்த்தாயோ, அதனின் உடலை நீ பெறமுடியும்” என்று கீதையிலே ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு போர் முறையின் மூலம், உணர்வின் செயல்களைப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டன.

உணர்வுகள் மறைகின்றது.
உணர்வுகள் வளர்கின்றது.
உடல்கள் மடிகின்றன.
உணர்வுகள் கலக்கின்றன. பின் விளைகின்றன.

உணர்வின் வலுகொண்டு எதனை நுகர்ந்ததோ, அதனின் உணர்வின் துணைகொண்டு, இன்னொரு உடலுக்குள் போகின்றது என்ற நிலைகள் நமக்கு ஞானிகள் காண்பித்த பேருண்மைகள்.