ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2014

துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்துக் கொண்டேயிருப்பதுதான் தியானம்

1. பிறர் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மால் தாங்க முடியவில்லை
இன்றைய மனித வாழ்க்கையில் சாதாரணமாக, பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தவுடன் நமக்குத் தாங்க முடியாத நிலைகள் இருக்கும். மகிழ்ச்சியினுடைய நிலைகளைச் சொன்னால், தன்னையறியாமலே பலவீனப்படுத்தும் நிலைகளைப் பார்க்கலாம்.

காரணம், நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வரும் பொழுது, தாங்கக்கூடிய சக்தி இழந்து, தன் நிலையை மீண்டும் பலவீனப்படுத்திக் கொள்கின்றது.

தன்னைத்தான் பலவீனப்படுத்தி, மீளமுடியாத நிலைகளில்தான் இருக்க முடிகின்றதே தவிர, நல்ல சக்தியை இழந்துவிடுகின்றோம். சிந்திக்கும் ஆற்றலையும் இழந்துவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீளும் நிலைக்குத்தான், ஆத்ம சுத்தி என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை உங்கள் கையில் கொடுக்கின்றோம்.

இந்த ஆத்ம சுத்தி என்ற நிலையை, ஒரு தரம் இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டாலும், உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள முடியும், செய்து பாருங்கள். உங்களுக்குள் அந்த உண்மைகளைப் பார்க்கலாம்.

துன்பம் வரும்பொழுது, ஒருவரிடம் மனக்குறையெல்லாம் சொல்கின்றோம். அதைக் கேட்டவுடன் அவரும் சோர்வடைந்துவிடுவார். அவர் சோர்வடைந்தால், இன்னும் கொஞ்சம் பலவீனமாகச் சொன்னால், நம்மிடம் பலவீனத்தைக் கூட்டிக் கொள்கின்றோமே தவிர, குறைத்துக் கொள்வதில்லை.

“உன்னால் நான் கெட்டேன்,
என்னால் நீ கெட்டாய்”
என்று இரண்டு பேருமே பலவீனமாகி,
ஒருவருக்கொருவர் இதைத்தான் பெருக்கிக் கொள்கிறோமே தவிர, இந்தக் கஷ்டத்தைப் போக்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்று சிந்திப்பதில்லை.

ஆக, “உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்” என்று, இந்தப் பாசத்தினால் விஷத்தைத்தான் கலக்க விட்டுவிடுகின்றோம். அந்த விஷத்தை அடக்கும் சக்தியை இழந்துவிடுகின்றோம்.
2. துருவ நட்சத்திரத்தை எண்ணி சுவாசித்துக் கொண்டேயிருப்பதுதான் தியானம்
எமக்கு இயற்கையிலே துன்பத்தை ஊட்டினார் குருநாதர். அதன்வழி உண்மையை அறிந்துகொண்டோம். ஆனால், உங்களுக்கு சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய துன்பமான நேரத்தில், வேதனைப்படக்கூடிய நிலையிலிருந்து மீட்டுக்கொள்வதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அதன் வழியில் கற்றுக்கொண்ட,
அந்த உண்மையினுடைய நிலைகள் தெளிந்து, தேர்ந்தபின்,
யாம் அந்த உணர்ச்சியினுடைய நிலைகள் கொண்டு,
உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் துன்பங்கள் நேரும் பொழுது,
சுலபத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி என்ற நிலைகளில்
அந்த ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்தி,
ஒரு நொடிக்குள் உங்கள் மனக்கலக்கத்தை நீக்கி,
மன உறுதி கொள்வதற்காக
உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,
நேரமில்லை என்கிறீர்கள்.

ஆகவே, தியானம் என்பது வேறொன்றுமில்லை. அந்த துருவ நட்சத்திரத்தை நினைக்கின்றோம்”, அதன் பேரருளைப் பெறுகின்றோம்.

அடுத்து, நாம் ஆத்ம சுத்தி செய்கின்றோம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை, நம் உடல் முழுவதும் படரச் செய்கின்றோம். உணர்வை ஒளியாக மாற்றுகின்றோம். அவ்வளவுதான். எமது அருளாசிகள்.