ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2013

நாம் சப்தரிஷியாக வேண்டுமென்றால், முதலில் என்ன செய்யவேண்டும்?

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற கீதையின் தத்துவப்படி,   நம் முன்னோர்கள்,  எதைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ, அதனை நாமும் பெறுகின்றோம். 

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து, நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது, நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர். அதனின் பயனாக,  
நாம், நம் உணர்வின் சக்தியை, 
விண்ணை நோக்கிச்  செலுத்தினோமானால்,
நமது முன்னோர்களின் உயிரான்மாக்களை
விண் செலுத்த உதவிய  நம்முடைய நினைவுகள்,
துரித நிலையில் இயங்கி, அங்கே செல்லவும்,
மகா ஞானிகளின் உணர்வை, துரித நிலையில் நாம் ஈர்க்கவும்,
நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை, அந்த விநாடியே அகற்றவும்,
நமக்குள் உணர்வின் சக்தியைப் பழக்கவும்,
மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்,
அந்த உணர்வுகள், ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும், ஒளி கண்டு இருள் விலகுவது போன்று,  அங்கே இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று,  நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்.

சப்தரிஷி என்பவர் யார்? ஆறாவது அறிவின் துணை கொண்டு, தீயவுணர்வுகளை மாய்த்து, நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த,  ஏழாவது அறிவினை தன்னிடத்தில் பெற்றவர்களை, சப்தரிஷி என்று நாம் அறிந்துணர முடியும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை, நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று,  நாம் தியானிக்கும் பொழுது,  நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம். சிறிது காலத்திற்காவது, நமது முன்னோர்களை எண்ணி தியானித்திடும் பொழுது, அவர்கள் சப்தரிஷி தன்மை பெற்று விடுகின்றனர். அதைத் தொடர்ந்து
நீங்களும் ரிஷித்தன்மையை பெறுகின்றீர்கள். 
நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால்,
முதலில், 
உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்
என்பதை உணரவேண்டும்.

நிலக்கடலையின் மேல் ஓடை உடைத்து நீக்கிவிட்டு,
அதனுள் இருக்கும் பருப்பை, நாம் சுவைப்பது போன்று,   

தீமையின் தன்மை நமக்குள் இதுவரை சேர்ந்திருந்து,
நமக்குள் உணர்வின் சக்தியாக வலுப்பெற்றிருந்தாலும்,
நாம் அதை உடைத்தெறிந்தால், 
நன்மையைப் பெறச் செய்யும் உணர்ச்சியை,
உந்திப் பெறுகின்றது. 

உணர்வின் எண்ணங்களுக்கு, இடையிலுள்ள
போட்டியை, சஞ்சலத்தை நீக்கி விட்டால்,
அதனில் ஒளியின் சிகரமாக இருக்கும் உணர்வுகள்,
அதனுடைய வீரிய சக்தியை, நமக்குள் கவர்கின்றது. 

அவை,  நன்மை பயக்கும் சக்தியாக நமக்குள் இரண்டறக் கலந்து, நல்ல உணர்வின் எண்ணங்களை,  ஓங்கச் செய்கின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வை, நாம் கவர்ந்து,
நமக்குள் ஒளிச் சுடராக மாற்றும் நிலையைத்தான்,
நமது இன்றைய செயல்களாக அமைத்து,
நாளைய சரீரமாக, நமது உயிரான்மாவை,
ஒளிச் சரீரம் பெறச் செய்யவேண்டும்.