ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2013

அத்திரி மாமகரிஷி 1

1. அத்திரி மகரிஷி ஏன் அரச நிலையை வெறுத்தான்?
அத்தி மரத்தின் நிழலிலே, அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ,
அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும்
அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு
ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும்
என்று தன் உணர்வின் தன்மை கொண்டு, அரசனாக இருந்தவன் அத்திரி.
 
நாட்டின் நிலையும், தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு, தனக்கு இந்த சொத்து வேண்டும், அந்த சொத்து வேண்டும் என்றும், இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு, இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது, ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து, அரச சபையைக் கூட்டி, அதன் வழிகளிலே அரசை நடத்தி, அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும், அதை அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில், மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது,
இவனது சிந்தனைகள் குலைந்து,
நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது,
மக்கள் மத்தியிலே கொடூரத் தன்மைகளை விளைய வைத்து
மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி,
அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும்,
மழை நீர் பெய்யாத நிலையும்,
தவித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைகளில்தான்
அரச நிலையே வேண்டியதில்லை,
என்று உணர்கின்றான்.
2. மக்களை மகிழச் செய்தான் அத்திரி
பின், ஒவ்வொரு உயிரின் தன்மையில், அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால், அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து, அந்த மெய்யின் தன்மையான ஒளிநிலை பெற முடியுமென்று பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான், அத்திரி மாமகரிஷி. 

அவரது அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து, இதையெல்லாம் வெறுத்து
இனி, நாம் ஒவ்வொரு மக்களின்
நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்,
நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து
அரச நிலையைத் துறந்து, காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து, ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்றவர் அத்திரி மகரிஷி.

பின், மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து,  ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து, அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து, அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி,  தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர், அத்திரி மாமகரிஷி.

ஆக, அத்திரி மாமகரிஷி அரசனாக வாழ்ந்தான், பின் உணர்ந்தான் பின் தன் நிலைகளை அறிந்தான். இதைப் போன்று, மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாலும், நாம் அரசனைப் போல, வீட்டிற்குள்ளும் அரசாட்சி புரிகின்றோம்.

அதைப் போன்று, பண வசதி கொண்டு வீட்டிற்குள் அரசாட்சி செய்தாலும், நாம் ஒரு அரசனாகவே இருக்க விரும்புகின்றோம். ஓரளவிற்கு பொருள் இருந்தாலும்,  தன்னை மதிக்கவில்லை என்றால்,  இரு நான் பார்க்கின்றேன் என்ற எண்ணம் தான் வருகின்றது.  ஒரு பேரரசனாக இருந்தாலும், அந்த நிலைகள்தான் வருகின்றது.

ஆக அதே சமயம், ஒருவர் உதவி செய்கிறார் என்று எண்ணினால், அந்த உதவியின் தன்மையை நாம் பெற்றுவிட்டபின், அவர் செய்யக் கூடிய தவறுக்கெல்லாம் நாம் உடந்தையாக ஆகவேண்டும்.

அப்படி ஆகவில்லை என்றால், நான் உதவி செய்தேன், என்னை எதிர்க்கிறான் பார் என்கிற நிலைகளில், அவன் செய்யும் தவறுக்கு உறுதுணையாக வேண்டும். இப்படித்தான் நாம் ஒவ்வொரு உண்மையினுடைய நிலைகளிலும், நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இதைப் போன்றுதான், மனிதனுடைய வாழ்க்கையிலும் இதே உணர்வுதான் இவ்வாறு, ஒருவருக்கொருவர் நம்மை அறியாமலேயே ஞானிகளுக்கு முன்னாடி மெய்யையே அழிக்கும் உணர்வுகள், வந்து கொண்டேதான் இருக்கின்றது.

    மெய் என்றும் அழிவதில்லை. அதன் ஒளியின் சுடர் கொண்டு, என்றும் பொங்கிக் கொண்டேதான் இருக்கும். 

ஆக, மெய்யுணர்வின் தன்மையால், மெய்யைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு, நாம் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மெய் ஒளியை அனைவரும் பெற எமது அருளாசிகள்
3. மக்களை மகிழச் செய்வதற்கு, மழை நீரைக் கொட்டச் செய்தான் அத்திரி
அத்திரி மாமகரிஷி, அவ்வளவு பெரிய அரசன்
தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து,  
அந்த மெய்ஞானியின் அருள் ஒளி பெறவேண்டுமென்று, மக்கள் மத்தியிலே வந்தான். 

அதைப் போல நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், இன்றைக்கு யாராவது குறை சொல்லிவிட்டால், இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நாம் பேசுகின்றோம். இது அரசுக்குச் சமம்தான்.

நாம் நல்ல நிலையில் இருக்கும்போது ஒருவர் கேவலமாகப் பேசிவிட்டால், நாம் நல்ல மதிப்பாக இருக்கிறோம், குறைத்துப் பேசுகிறான், இவன் திமிரைப் பாரு, இரு நான் பார்க்கிறேன் என்போம்.

இந்த உணர்வுகளில் நாம் எண்ணும்போது, நம் உயிரான ஈசனுக்குள் பட்டவுடன், இரு நான் பார்க்கிறேன், என்று இந்த உணர்வுகள் வரும். நாம் சொல்லும்போது, இந்த உணர்வுகள் நமக்குள், ஈசனுக்குள் பட்டுத்தான், அந்த வேலையைச் செய்கின்றது.

ஆக, இதைபோன்று நமக்குள் வரும் இந்த நிலையை  அன்று அத்திரி மகரிஷி இதையெல்லாம் கண்டுணர்ந்து, தான் ஆணையிட்டால் எத்தனையோ செயல்படும் நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் துறந்து,  தன் உணர்வின் தன்மையை மாற்றிக் கொள்வதற்கு, ஒவ்வொரு மனிதனையும் ஈசனாகக் கருதினான். ஆக ஈசனுக்கு அபிஷேகம்.

மகிழ்ச்சியாவதற்கு தான் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, மழை நீராக கொட்டச் செய்தான். ஆனால், ஒவ்வொருவரையும் பசியாறச் செய்து, ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் தன்மை வருவதற்கு வேண்டி, மக்களை நாடி வந்தான்.
4. உயிரான ஈசனுக்குள், துன்பத்தை நுழைய விடாதீர்கள்
அதைப்போல, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நமக்குத் துன்பம் என்று எப்பொழுது தோன்றினாலும் ஆத்மசுத்தி  என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நம்மைத் துன்புறுத்தும் நிலையோ, நம்மைக் கேவலப்படுத்தும் நிலையோ, நம்மை அசிங்கப்படுத்தும் நிலையோ, பிறர் பேசிவிட்டால், அசிங்கப்படுத்தி விடாதீர்கள். அதை உடனே தடைப்படுத்துங்கள். ஆக,  உயிரான ஈசனுக்குள், அதை நுழையவிடாதபடி தடைப்படுத்துங்கள்.

ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு,  அவனிடமே கேளுங்கள். 

மகரிஷிகளின் அருள் ஒளியை, என் ஜீவாத்மா பெறவேண்டும், மகரிஷிகளின் அருள் ஒளியை, என் உடலுக்குள் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள், இந்த உடல்  உறுப்புகளை உருவாக்கிய, அந்த அணுக்கள் ஒவ்வொன்றும், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று, நாம் எண்ணி ஏங்கி எடுக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த ஆலயத்திற்குள் நின்று, அந்த அணுவின் தன்மை கொண்டு, உயிரான நிலைகளில்தான் செயல்படுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிமிடமும், நமக்குள் இதைச் செயல்படுத்தும்போது, நமக்குள் தீய உணர்வுகள் வராது தடுப்பதோடு, நம் பேச்சும் மூச்சும், நமக்கு எந்தத் துன்பத்தை ஊட்ட எண்ணுகின்றனரோ, அவர்களிடம், நாம் இந்த எண்ணத்தைப் பாய்ச்சிவிடுவோம்.

அவர்கள் செய்வது நாளை நல்லதாக இருக்கட்டும்,
அவர்கள் பேச்சும் மூச்சும் நல்ல உணர்வுகளை ஊட்டட்டும்
என்று நீங்கள் எண்ணுங்கள்.

இவ்வாறு, இதை நீங்கள் எண்ணினால், அவர் நம்முடைய எண்ணங்களை அவர் எடுத்தால் எடுத்துக் கொள்ளட்டும். எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால்,  நமக்குள் அவர்கள் அப்படிச் செய்கிறார்களே, என்று வேகமாக இழுத்து, உணர்வைக் கூட்டிவிட்டால், நமக்குள் அந்த வேலையைச் செய்துவிடும்.

ஏனென்றால், நாம் எதை எண்ணினாலும், அது, நமக்குள் வருகின்றது. நம் ஈசனைவிட்டு அகலுவதில்லை. கொடுப்பதைச் சமைப்பான். ஏனென்றால், நாம் எதை எண்ணுகின்றோமோ, இந்த உயிரில் நாம் சுவாசித்தவுடன்,  இதுவே பிரம்மமாகின்றது.

ஆக, நாம் எந்த சந்தர்ப்பத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும்போது, அந்த மகரிஷிகள் நல்லதை உருவாக்கும், பிரம்மத்தின் ஆற்றல் பெற்ற சக்தி பெற்றவர்கள்.

நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் அந்த பிரம்மத்தை உருவாக்குவதற்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெற்று, அந்த மெய்ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை, நமக்குள் சுவாசித்து இந்த உயிரான நிலைகளில் பிரம்மமாக்கும்போது, அது பிரம்மமாகி நமக்குள் ஜீவனாகின்றது.

இதனுடைய தத்துவத்தை,
வெகுகால நிலைகளில் உங்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளேன்.
இதைத் தவறவிடாதீர்கள். 
உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு,  ஆணித்தரமாக, அழுத்தமாக,  அந்த மெய் உணர்வின் மகரிஷிகளின் அருள் ஒளிகளை, உங்களுக்குள் பெருக்குவதற்கு, இந்த உணர்வை யாம் பதிவு செய்கின்றோம். எமது அருளாசிகள்.