அம்மா, அப்பா அருளால், ஞானகுரு அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை, பேரொளியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…… என்று கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி, உங்கள் உயிரான ஈசனை வேண்டி, ஏங்கி தியானிக்கவும்.
(1) சப்தரிஷிகள் உபதேசித்து, உணர்த்திய அருள்வழி, எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா……
இருளை அகற்றி, ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் சப்தரிஷிகள். ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, ஏழாவது நிலைகள் பெற்று, உணர்வின் ஒளியின் சரீரமாக வாழ்பவர்கள் ரிஷிகள்.
அவர்கள் மனித சரீரத்தில் வாழ்ந்த காலத்தில், தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி, அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய,
அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று,
அந்த அருள் ஞான வழியினை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனை வேண்டி ஏங்கி இருக்கவும்.
(2) எங்கள் சொல்லும் செயலும், புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா…
நாம் நுகர்ந்த உணர்வுகளை, சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது,
நமது சொல்லின் உணர்வுகளானது
நமது சொல்லைக் கேட்போரின் உணர்வுகளை,
புனிதம் பெறச் செய்யக்கூடிய அருள்சக்தியாகவும்,
அவர்களது உடல்களில் தெளிந்த மனத்தைக் கொடுத்து,
மகிழ்ந்து வாழச் செய்யக்கூடிய அருள்சக்தியாக,
அமைய வேண்டும் என்றும்,
எங்கள் செயலை யார் பார்த்தாலும்,
அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும்
என்றும் எண்ணினால், நமது உயிர் அதையே நம்முள் ஜீவ அணுவின் கருவாக உருவாக்குகின்றது.
(3) நாங்கள் பார்க்கும் அனைவரும், நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா….
நாம் யாரைப் பார்க்கிறோமோ, “அவர்கள் நலம் பெற வேண்டும், வாழ்க்கையில் வளம் பெற வேண்டும்” என்ற உணர்வை நாம் நமக்குள் எடுத்துக் கொண்டால், அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. நமது நல் உணர்வின் தன்மையே நமக்குள் வளர்கின்றது.
நம் எண்ணத்தின் நிலைகள் கொண்டு, அவர்களை நலம்பெறச் செய்யும் சொல்லாக வருகின்றது. அவர்கள் அதைக் கேட்கும் பொழுது, நலம் பெறும் சக்தியும் பெற முடிகின்றது.
(4) எங்கள் பேச்சும், மூச்சும், உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா….
உலகில் உள்ள, அனைவருடைய உணர்வுகளையும் நாம் கேட்டு அறிந்துள்ளோம். “நமக்குள்” உலக மக்களின் உணர்வுகள், அணுத்தன்மை அடைந்துள்ளது.
நமக்குள் பகைமை உணர்வுகளோ, மற்ற உணர்வுகளோ இருப்பினும், நாம் உலக மக்கள் அனைவரும் அமைதி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி தியானிக்கப்படும் பொழுது, நமக்குள் இருக்கும் அணுக்கள், நாம் எண்ணிய வழிப்படி அமைதி பெறுகின்றது.
அமைதியாக இயங்கத் தொடங்குகின்றது.
நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாற்றுகின்றது.
அவ்வாறு மாற்றுவதற்கே துருவ தியானம்.
(5) “ஓம்…” என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை, எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.
நமது உயிர், “ஓ” என்று இயங்கிக்கொண்டே உள்ளது. நாம் எதைப் பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, எண்ணுகின்றோமோ, நுகர்கின்றோமோ, இவை அனைத்தையும் நமது உயிர்
“ஓ” என்று பிரணவமாக்கி
“ம்” என்று ஜீவ அணுவை உருவாக்கும் அணுக்கருவாக
விளையச் செய்கின்றது.
நாம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, இதுவரை தியானித்த உணர்வுகள் அனைத்தையும் நாம் நுகரப்படும் பொழுது, நமது உயிர், நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைகளை நாதங்களாக இயக்கி, (அரங்கநாதன்) நுகர்ந்த உணர்வின் தன்மையை வைத்து, நம்மை ஆளுகின்றது, ஆண்டவனாக இயக்குகின்றது.
உடல் ஒரு அரங்கம், நமது உயிர், “அரங்கநாதனாக” அரங்கத்திலிருந்து, நுகரும் உணர்வுகளை நாதங்களாக அனுப்புகின்றது. நாதத்தின் இயக்கமே உணர்ச்சிகள். “ஆண்டாள்”.
ஆகவே, “அனைவரும் நலம் பெற வேண்டும், மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற வேண்டும்” என்று, தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நாம் நுகர்ந்தால், அது அரங்கநாதனாகி, நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, தீமைகளை அகற்றும் நாதமாக நம் உயிர் இயக்குகின்றது.
நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை வைத்து ஆள்கின்றது, நம் உயிர். நாம் எதை நுகர்கின்றோமோ, அதனின் தொடர் கொண்டு நமது உடலை இயக்கச் செய்கின்றது. உணர்வின் தன்மையினை உடலாக மாற்றுகின்றது. இருளை அகற்றி ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.
(6) நற்குணங்களின் உணர்வை சுவாசமாக்கி, நல்ல மணமாக, நம்மை ஆளும் ஆண்டவனுக்கு, ஆராதனை செய்வோம்.
நாம் அனைவரும் நலம் பெறவேண்டும் என்றும், பண்புகள் வளரவேண்டும் என்றும், தெளிந்த மணம் பெறவேண்டும் என்றும், மலரைப் போல மணமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்றும், நாம் எண்ணத்தால் எண்ண வேண்டும். அப்படி எண்ணும் பொழுது,
நுகர்ந்த உணர்வுகள் நுகரப்பட்டு, உயிரிலே படும் பொழுது,
உயிரான ஈசனுக்கு ஆராதனை மட்டுமல்ல,
அபிஷேகமும் செய்கின்றோம்.
நாம் நுகரும் உணர்வுகள்தான் “உணர்வின் மணமாக”, உணர்வின் அலையாக உடல் முழுவதும் படரப்பட்டு, உயிரால் அமைக்கப்பட்ட, இந்த உடலான ஆலயம் பரிசுத்தமாகின்றது. உடலில் உள்ள நல்ல குணங்களுக்கு அமுதாகவும் அமைகின்றது. நமது உடலான சிவத்துக்கும் மகிழ்ச்சியான சக்தியாக கிடைக்கின்றது.
எனவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால், நமது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த, தீமைகளை மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக, நம்முள் உருவாக்கும். மகிழ்ச்சி என்ற உணர்வினை நமக்குள் தோற்றுவிக்கும்.
அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் நுகர்ந்து, உணர்வை ஒளியாக மாற்றி, உயிரான ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்.
ஆலயங்களில் தீப ஆராதனை காட்டும் பொழுது, அங்கே இருள் அகன்று, அங்கிருக்கும் பொருள் தெரிகின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகரும் பொழுது, அது நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி,
மெய்ப் பொருளைக் காணச் செய்யும்,
பிரகாசமான நிலைகளை நமக்குள் உருவாக்க உதவுகின்றது.
(7) நாம் எண்ணும் நல்ல உணர்வை, இறைவனாகத் துதிப்போம்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதி, நம்மில் கலந்து இறையாகின்றது. இறையான உணர்வுகளின் தொடர் கொண்டு, நமது உயிர் அதன்வழி இயக்குகின்றது. ஆகவே, நாம் நமக்குள் நல் உணர்வுகளை இறையாக்குவோம்.
(8) நாம் எண்ணும் நல்ல குணங்களை, நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்.
நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ, அவை அனைத்தும் நம் உடலுக்குள் தெய்வமாக நின்று, நல்ல உணர்வுகளையும், நல்ல உணர்ச்சிகளையும் தூண்டி, நம்மைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மலருகின்றது.
நாம் ஒவ்வொரு நல்ல குணத்தையும்
நமக்குள் நம்மைக் காக்கும் சக்தியாக
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
எண்ணி ஏங்கி தியானிப்போம்.
(9) நன்மைகள் பல செய்யத் துணிவோம்.
நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும். நாம் பலருக்கு நன்மைகள் செய்தாலும், எதிர்மறையான உணர்வுகளைச் சந்திக்க நேர்ந்தால், துணிவை இழக்காது, “அவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வுகளை” நமக்குள் வளர்த்திட வேண்டும் என்பதே இதன் பொருள்.
(10) நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்.
ஒவ்வொரு உயிரும் கடவுள், உடல் ஆலயம். மனிதராக உருவாக்கிய அரும்பெரும் சக்தி, சர்வத்தையும் காத்திடும் அருள் சக்தி கொண்ட உடல் என்ற நிலைகளில், நாம் அனைவரையும் மதித்தல் வேண்டும்.
உங்களை யாம் மதித்தால்,
எமக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும்
யாம் மதித்தவராவோம்
என்று நமது குரு எமக்கு உணர்த்தினார். குரு காண்பித்த அருள்வழியில், நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்.
(11) உடலைக் கோவில் என மதிப்போம்.
ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதித்து, அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம். சந்தர்ப்பத்தால் தீய உணர்வுகள் உடலான கோவிலுக்குள் சேர்ந்திருந்தால், ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம், பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
மேலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அங்கே படர்ந்து, அந்த ஆன்மா தூய்மை அடைய வேண்டும் என்று நாம் எண்ணினால், நாம் நுகரும் உணர்வுகள், நமது ஆன்மாவைப் புனிதம் அடையச் செய்கின்றது. நமது உடலான ஆலயம் தூய்மைப் படுத்தப்படுகின்றது. அதன்வழி நமக்குள் மகிழ்ச்சி பெறும் தன்மை உருவாகின்றது.
(12) அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம்.
நாம் எதையெல்ல்லாம் எண்ணுகின்றோமோ, அவை அனைத்தையும் ஈசனாக இருந்து உருவாக்குவது நமது உயிர். உருவாக்கிய உணர்வுகள் அனைத்திற்கும், குருவாக இருப்பதும் நமது உயிர். நாம் எண்ணியதை நம்முள் இயக்குவதும், இறையாக்குவதும் (இறைவன்), இறையின் உணர்வுகளைச் செயலாக்குவதும் (தெய்வம்) நமது உயிரே.
எண்ணிய உணர்வை உடலில் வளர்த்து,
உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை
தன்னுடன் எடுத்துச் சென்று,
மறு உடலை உருவாக்குவதும் உயிரே.
நாம் நல் உணர்வுகளைக் கவர்ந்து கொள்ளும் பொழுது, நம்முள் சொர்க்கலோகத்தை உருவாக்கி, நம்மை மகிழச் செய்வதும் நமது உயிரே.
13.தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம்.
நம் உயிர் கடவுளானாலும், நம்மை மனித உருவாக உருவாக்கிய கடவுள், நம் தாயே, தந்தையே. தெய்வகுணம் கொண்டு உருவாக்கிய, தாயின் உயிரே கடவுள். தெய்வமாக நம்மைக் காத்தருளியதும் தாயே.
நாம் எதும் அறியாத குழந்தையாக இருக்கும் பருவத்தில், நாம் ஒரு சிறு நெருப்பைக் கண்டாலும், உடனே அங்கே தாவிச் சென்று அதைத் தொட முயல்வோம். அப்பொழுது நம்மை ஈன்ற தாய், உடனே அங்கே வந்து, “இது நெருப்பு, சுட்டுவிடும்” என்று அந்த இடத்தில் குருவாக இருந்து, நமக்கு நல் அறிவை ஊட்டி, நாம் நெருப்பைத் தொட்டு விடாதவாறு பாதுகாக்கின்றார்கள்.
இப்பொழுது, ஞானிகள் கொடுத்த அருள்ஞானத் தத்துவங்களை நாம் அறிந்து கொள்கிறோம் என்றால், அதுவும் நம் தாய் தந்தையர் கொடுத்த, பூர்வ ஜென்ம வினைகளே.
ஆகவே, நாம் நம் தீமைகளை நீக்கி, அருள் ஞான சக்தியை வளர்ப்பதற்கு, நல் பாதையைக் காண்பித்த முதல் தெய்வமாக, நமது தாய் தந்தையை மதித்திடல் வேண்டும்.
(14) நல் வழி காட்டும் குருவை அடைவோம்
நமக்கு, எப்பொழுதும் நல் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும், நமது தாயை குருவாக மதித்து எண்ணினால், நமது வாழ்க்கையில் நல்வழியில் வாழ நமக்கு இது உதவும்.
தன் இனம் தழைய வேண்டும், தழைத்தோங்க வேண்டும்,
அருள்ஞானம் பெறவேண்டும், என் குழந்தை மகிழ வேண்டும்,
உலகையே வென்றிடும் நிலையும்,
அனைவரும் போற்றும் நிலையும் பெறவேண்டும் என்று
தாய் கற்பனையினைக் கூட்டுகின்றது.
தாய் தன் உணர்வினை நமக்குள் பாய்ச்சுகின்றது.
அதன் வழியில், இளமைப் பருவத்தில் தாய் உற்று நோக்கும் உணர்வையும், தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் கொண்டு, தாயின் எண்ணத்தை நமக்குள் வளர்க்கின்றது.
வளர்ச்சியின் பருவத்தில், தன் குழந்தை திசை மாறினாலும், தன் குழந்தைக்கு நல்வழி காட்டுகின்றது, ஞானப்பாலை ஊட்டுகின்றது. நம்மைக் காக்கின்றது, நல்வழி புகட்டுகின்றது. அப்பொழுது நமது குரு யார்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நம்மைக் காத்தது,
நம்மை உருவாக்கியது,
நம்மை நல்வழி காட்டிய குரு, நமது தாயே.
நமது உடலில் “தாயின் காத்திடும் உணர்வின் பதிவுகள்” உண்டு. அதன் பேச்சும், மூச்சும், சூரியனின் காந்தசக்தி கவர்ந்து வைத்துள்ளது.
ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், அதனை அலைகளாக மாற்றி, நமது பூமியில் பரவச் செய்கின்றது. அந்தச் செடியில் விளைந்த வித்தை, பல நாள் கழித்து, மண்ணில் அந்த வித்தினை ஊன்றினால், புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு, தாய்ச் செடியின் சத்தினை நுகர்ந்து, அதே செடியாக வளர்ந்து, அது தன் வித்தினைப் பெருக்கும் தன்மை வருகின்றது.
இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில் தாய் ஊன்றிய உணர்வின் சத்து, நாம் மறந்திருப்பினும் காற்றிலே அது உண்டு. அறிந்தபின், தாயின் உணர்வை நுகர்ந்து, அன்னையின் அருளைப் பெறவும், அதன் வழியில் வளரும் தனமையைக் கொண்டு சென்றால்,
நமது வாழ்க்கையில் அதுவே குருவாகி,
நமது வாழ்க்கையை வழி நடத்தும்.
(15) குரு காட்டும் வழியை மதிப்போம்
அன்னை தந்தை உணர்வுகள் தான், நமது உடல். நம்மைக் காக்க வேண்டும் என்ற, தாய் தந்தையின் உணர்வு நமக்குள் பதிவு கொண்டு, அவர் அருள் பெற்று, விண்ணின் ஆற்றலை நம்முள் ஏங்கிப் பெறும் சக்தியைப் பெறுதல் வேண்டும். அதுவே குருவழி. அன்னை தந்தை இல்லையென்றால், அருள் உணர்வு நமக்கு இல்லை.
அன்னை தந்தையின் உணர்வை எண்ணி, ஏங்கி நுகரும் பொழுது, அவர்கள் உடலிலிருந்து வரும் உணர்வுகள், நமக்குள் இயக்குகின்றது. ஆகவே, நமது அன்னைதான் நமக்கு முதல் இடம், இரண்டாவது தந்தை.
(16) குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்
அன்னையின் உணர்வின் தன்மையை நாம் எண்ணி, அன்னை தந்தை அருளால், அன்னையின் கருவிலே அகஸ்தியர் பெற்ற அருள் சக்தியைப் பெறுவோம்.
சந்தர்ப்பத்தால் தன்னைக் காக்க, நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அகஸ்தியரின் தாய் தந்தை நுகர்ந்தனர். இதனால் கருவிலிருக்கும் குழந்தை, நஞ்சினை வென்றிடும் தன்மை பெறுகின்றது.
தாய் தான் நுகர்ந்த உணர்வுகளை,
நஞ்சினை வென்றிடும் சக்தியை,
தன் கருவிலுள்ள சிசிவினிடத்தில் உருப்பெறச் செய்கின்றது.
இதைப் போன்றுதான், நமது தாயும் உருவாக்கினார்கள்.
ஆகவே, அகஸ்தியர் நஞ்சினை வென்றிடும் உணர்வைப் பெற்றார். நாமும் நஞ்சினை வென்றிடும் உணர்வைப் பெறவேண்டும் என்றால், நமது தாயின் உணர்வுகள், எப்பொழுதுமே நம் உடலுக்குள்ளே இணைந்தே வருகின்றது.
விபத்துக் காலங்களில் “அம்மா” என்று கூவினால் தாயின் உணர்வுகள் உடனடியாக உங்களைப் பாதுகாக்கின்றது. ஆகவே, நமது தாயின் உணர்வுகளை குருவாக ஏற்று, அதன்வழி கடைப்பிடிப்போம்.
(17) குருவின் துணையால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை, பேரொளியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
இப்படி நாம் எண்ணி ஏங்கும் பொழுது, நமது தாயின் அருளே, நமக்கு இவைகளின் சக்தியை ஊட்டுகின்றது. தாய் நம்மைக் காத்த உணர்வும், நாம் இன்னல்படும் நேரத்தில் விழித்திருந்த உணர்வும், நம்மிடம் பதிவு உண்டு.
அதன் துணையுடன், நாம் அன்னை தந்தை அருளால், “அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை, நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனை எண்ணி ஏங்கும் பொழுது, நம் உயிரும் குருவாகின்றது. நாம் எண்ணுவது நமக்குள் அருள் சக்தியாக மாறுகின்றது.
ஆகவே, இதனை நமக்குள் உருவாக்க, நமது குருவழி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வழி நாம் இதனைப் பின்பற்றி, அருள்வழியினைக் கடைப்பிடித்து, இருளை அகற்றி, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி,
பிறவியில்லா நிலையை அடைவதே
அகஸ்தியர் காண்பித்த அருள்வழி.
ஏனெனில், சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும், கணவன் மனைவிக்குள்ளும், நம் மக்களுக்குள்ளும் எத்தனையோ தீமையின் உணர்வுகள் வருகின்றது. அதையெல்லாம் உணர்வாக நாம் நுகர்ந்தால், பகைமையூட்டும் குருவாக நம்மை இயக்கிவிடும்.
ஆகவே, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கும், நல்வழி காட்டும் குருவை அடைவோம். குரு காட்டும் வழியை மதிப்போம். நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும், நம் உயிரே குருவாக இருக்கின்றது.
நம் உயிரான குருவின் துணை கொண்டு, அகஸ்தியர் தம் வாழ்க்கையில் பெற்ற, நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, பேரருள் உணர்வினை நாம் பெறுவோம்.
அகஸ்தியர் துருவனாகி, திருமணமானபின் துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றெனெ இணைந்து, வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி ஒன்றி வளர்ந்தனரோ, இதே போல இல்லற வாழ்க்கையில் கணவனும், மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடப்போம் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது, அதுவே குருவாகின்றது. அதுவே நம்மை இயக்குகின்றது.
இல்லற வாழ்க்கையில், கணவனும் மனைவியும் வெறுப்பு அடையும் பொழுது, அவர்கள் நரகத்தை அடைகின்றனர்.
ஆகவே, நமக்குள் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமென்றால், தீமைகளை அகற்றிய, துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறுதல் வேண்டும்.