ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2013

ஒரேடியாக ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியுமா?

1. பிறருடைய தீமையைக் கேட்டுணர்ந்தால், உணர்வதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்
    மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்,  இந்த உணர்வின் தன்மையை உள்ளுக்குள் கொண்டு போய், அந்த உணர்வை வலுப்பெறச் செய்து தீமையை இயக்கும் நிலையை நாம் இழக்க வேண்டும். நமது ஆன்மாவில்,  அந்தத் தீமையை இழந்திடல் வேண்டும்.

உதாரணமாக, ஒரு நோயாளியைப் பார்த்து அவன் சொல்வதைக் கேட்கின்றோம். நாம் பாசத்தால் இருக்கும் பொழுது,  நமது ஆன்மாவில் வந்துவிடுகின்றது.

ஆன்மாவில் கலந்த வேதனைகள்,  நம்மை அறியாமலே நமக்குள் வந்து கொண்டே இருக்கின்றது. நம் நல்ல குணத்துடன், இந்த வேதனை கலந்து விடுகின்றது. அது ஜீவ அணுவாக மாறியபின், தன் இரையைத் தேடி, உணர்ச்சிகளைத் தூண்டி,  அது வளரத் தொடங்குகின்றது. இப்படிப்  புதுப் புது அணுக்களாக,  நமக்குள் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றது.

நாம் அந்த வேதனையைக் கேட்டறிந்தாலும்,  ஒவ்வொரு நொடியிலும், ஈஸ்வரா  என்று உயிருடன் தொடர்பு கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று, உடலுக்குள் பதிவு செய்த உணர்வை நினைவு கொண்டு,  இதை உயிருடன் இணைத்துவிட வேண்டும். நம் ஆன்மாவில் கலந்த வேதனையை சுவாசிக்கும் பொழுது,  அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது. இதை இடைமறிக்க வேண்டும். 

மகரிஷிகளின் அருள் உணர்வு வரும் பொழுது,  கேட்டுணர்ந்த உணர்வுடன் இது இணைந்து விடுகின்றது. அந்த தீமையின் நிலைகளை நிலைகளை, உள்ளுக்குள் அடக்கும் உணர்வு வரும் பொழுது, ஆன்மாவில் கலந்துள்ள உணர்வுக்கு வேலை இல்லாமல், நம் ஆன்மாவை விட்டுத் தள்ளிப் போய் விடுகின்றது.
அப்படித் தள்ளவில்லை என்றால்,
அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இப்படித்தான்நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையைக் கேட்டுணர்ந்தால், உணர்வதற்கு மட்டும் தான், பயன்படுத்த வேண்டும். மீண்டும் அது நமக்குள் வளராதபடி, தடுத்தல் வேண்டும். 

அதற்கு நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை,  அடுத்த கணமே அதனுடன் இணைத்துப் பழக வேண்டும். இது இரண்டும் கலந்து விட்டதென்றால், அந்த அணுவின் தன்மையாக விளைகின்றது. அந்த சக்தி நமக்குள் கூடிக் கொண்டே வருகின்றது.
2. அருள் உணர்வுகளை வாழ்க்கையில், அவ்வப்பொழுது இணைத்துக் கொண்டே வரவேண்டும்
இதுவெல்லாம் நமக்குள் தெரிந்து இருந்தாலும்,  உதாரணமாக,  சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்கு கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி ருப்பான்,  அவனைப் பார்த்தவுடன்,  கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது, இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும்.

அப்பொழுது,  அவனை வெறுக்கும் நிலைகள், நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும். சிறிது நாள்,  அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது. சாப்பாடு கிடைத்ததும்,  வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள், எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால்,  வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்துவிட்டால்,  தளதளவென்று வெளியில் வரத் தொடங்கிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை உணர்வுகள்,  அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்,  அவனைப் பார்த்தவுடனே,  அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து,  அதனின் செயலாகத்  தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும். 

அப்பொழுது நாம்,  இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்,  அவனைப் பார்த்தவுடனே,  கோபம் வருகின்றது என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின், இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள், நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ,  நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது. 

கெடுதல் செய்தவனைப் பார்த்து, அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும்,  அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. 

அந்த நேரத்தில்,  மற்ற மனிதர்களிடத்தில் உருவான, கெடுதல் செய்த உணர்வின் தன்மை, நமக்கு எதிரில் இருந்தால், அது வந்துவிடும்.

இரவில் தூங்கும் பொழுது, யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி, இன்னொரு உரு நமக்குள் தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும். அப்பொழுது நம்மை அறியாமலே,  இரவு வேளைகளில்,  தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

அந்த மாதிரி நேரங்களில்,  நாம் இரவில் தூங்கும் பொழுதெல்லாம்,  இந்த உணர்வுகள் வரும் பொழுதெல்லாம், ஈஸ்வரா  என்று உயிரை வேண்டி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைத்து,  அதைப் பெற வேண்டும் என்று எண்ணி,  உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும். அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும், 
இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான், 
நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர,
ஒரேடியாக ஜெபமிருந்து
ஆண்டவன் அருளைப் பெறுவேன்,
என்று சொன்னால் நடக்காது. 

ஒவ்வொரு நிமிடத்திலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது, அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை,
இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.

அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே உறைந்துவிடும். எல்லா உணர்வுகளிலும், அந்த மகரிஷிகளின் உணர்வை சேர்த்துக் கொள்ளவேண்டும். இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான்,  இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள், கோபங்கள், வெறுப்புகள் இவையெல்லாம் அடக்கினான்.

அவ்வாறு அடக்கி, அவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள் இப்படி, அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது,  பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழகவேண்டும். இல்லையென்றால், நான் எல்லாம் செய்கின்றேன்,  ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும், இப்படித்தான் இருக்கும் என்று இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.

அப்பொழுது,  நாம் போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம். எது எப்படி இருந்தாலும்,  எவ்வளவு கடுமையான நிலைகளை,  நாம் பார்த்துணர்ந்தாலும்,  ஒவ்வொரு நொடியிலும் ஆத்மசுத்தி என்ற நிலையை, நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச்செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஆத்மசுத்தி என்பது. இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது, தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது, ஒதுங்கிக் கொள்கின்றோம். இதே மாதிரி,  தீமையான உணர்வு வரும் பொழுது,
அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க,
அந்த மகரிஷிகளின் உணர்வை ஆதாரமாக வைத்து,
இதிலிருந்து.  சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக, வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில்,  விலகி நிற்கின்றோம். இதைப் போன்று, 
நம் வாழ்க்கையில்,
கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்,
மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்,
என்று, அந்த எண்ணத்திலிருந்து
விலகி இருக்க வேண்டும்.
 
3. சாமி சக்தியை நாம் எப்பொழுது பெற்றதாக அர்த்தம்?
நீங்கள் அனைவரும் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர,  உடலில் விளைந்த உணர்வுகளைத் தேடாதீர்கள்,  அதை நாடாதீர்கள். 

நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு, மெய் ஒளியை எடுத்து வளர வேண்டுமேயொழிய,  இந்த உடலில் பெற்ற உணர்வுகளை நாடக் கூடாது. 

இந்த உடல் மடிவது. இந்த உடலில் பெற்ற மெய் ஞானியின் உணர்வை,  யாம் பெற்றதை,  வலு கொண்டு எடுக்க வேண்டும்.

நாம் இந்த உடலை எண்ணினால்,  அதில் என்னென்ன உணர்வு விளைந்ததோ அதுதான் வரும். யாம் காட்டிய நிலைகள் கொண்டு, காட்சிகள் வந்தாலும், யாம் கொடுத்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,  என்று மெய் ஒளியுடன் இணைத்து வலுப் பெறவேண்டும். சாமி வந்தார்,  காட்சி கொடுத்தார்,  எனக்கு நல்லதாச்சு,  ஆகிவிட்டது என்பதெல்லாம்,  உடல் இச்சைக்குத்தான் மாறும். இந்த நிலையில் இருந்து மாறுபட வேண்டும்.

நாம் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும்.
நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்.
சாமி செய்கின்றார் என்பதற்கு பதில்,
சாமி பார்வை,
எப்படிப் பிறரின் தீமையைப் போக்குகின்றதோ,
அதே உணர்வை, பிறரின் தீமையை நீக்கும் சக்தியாக,
நீங்கள் பெற வேண்டும்.
அதை நீங்கள் பெற்றால்தான்,
"சாமி சக்தியை",  நீங்கள் பெற்றதாக அர்த்தம்.
இல்லாவிடில்,  அதில் அர்த்தம் இல்லை.