ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2013

பழனிமலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொன்னார் குருநாதர்

1. மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர்
குருநாதர் என்னை பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று, ஒரு கரண்டியும், ஈயமும் எடுத்து வரச் சொல்லிச் சொன்னார்.

அங்கு, அவர் சொன்ன இடத்தில் இருக்கும் செத்தைளை எல்லாம் எடுத்து வரச்சொல்லி,இந்த இடத்தில் இந்த மாதிரி செத்தைகள் இருக்கும், எடுத்துக் கொண்டு வா, என்று எனக்கே தெரியாமல் அவர் இதையெல்லாம் செய்கிறார்.

 நான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன், அந்தக் கரண்டியை வைத்து, அந்த ஈயத்தையும் வைத்து, இந்த செத்தைகளெல்லாம் போட்டு,தீயை வைத்து எரிடா என்றார்.

அது எரிந்து வந்தவுடன், இந்த ஈயம் உருகியது. உருகியவுடன், அது தங்கம் போன்ற நிறமாக மாறியது, அது அப்படியே எரிந்து கொதிக்கிறது. கொதித்தவுடன்,எப்படி இருக்கிறது?” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.
நான் ஜக ஜக ஜகஎன்று இருக்கிறது சாமி என்றேன்.

என்னடா ஜக ஜக ஜக? என்று, இரண்டு அடியும் கொடுத்தார் எப்படி இருக்கிறது? என்றார்.

ஜக ஜக ஜக என்றேன், நான்.

திரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய்? என்று, இரண்டாவது தடவையும், ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.

மீண்டும் நான் என்ன செய்தேன்? ஜக ஜக ஜக என்று சொன்னேன்.

அப்புறமும் எப்படி இருக்கிறது? என்று கேட்டார் குருநாதர்.

தங்கம் மாதிரி மின்னுகிறது சாமி என்றேன்.

குருநாதர், அப்படிச் சொல்லுடா, “தூஎன்று சொல்லி, அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன், மூடுடா என்றார்.

பின் அதை எடுத்துப் பார்த்தால், உறைந்து இருக்கிறது.பார்த்தால் தங்கக்கட்டி”. அலுங்காமல் கொண்டு போய், அதை விற்றுவிட்டு வா என்றார்.

இது உண்மையா பொய்யா? என்பதைத் தெரிந்து கொள்ள, இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

அவர் உரசிப் பார்த்து விட்டு,  "அட.. அடடடா., என்ன இது? சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

இங்கு நகைக் கடையில் கொடுத்தால், நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய் என்று, இப்பொழுதுதான் தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய்என்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும், நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில், பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள், யாரிடமும்  சொல்ல  வேண்டாம் என்கிறார்.

இன்னொருவர், வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் பாதரசத்தைச் செய்கிறேன் என்று, அந்த ரசத்தைக் கூட்டி, எனக்குத் தங்கம் செய்வதைக் கொஞ்சம் சொல்லிக் கொடு. நான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை. நீ தங்கத்தைச் செய்யும் வித்தையை, எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு என்கிறார்.

நீ செய்ய வேண்டாம், நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி, என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின், அவர் செத்தும் போனார்

இப்படி எல்லாம் மனிதனுடைய ஆசைகள். எப்படியெல்லாம் மனிதருக்கு ஆசைகள் வருகிறது? எமக்கே இதைச் செய்து, கடைகளில் பணத்தை வாங்கி வந்து, என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

குருநாதர், தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கி, பார், எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது? அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா? என்று கூறி, அந்தப் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு, எமக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

இத்தனை தூரம் செய்த பிற்பாடு, இந்த ஒரு ரூபாயை எம்மிடம்  கொடுத்து, உன் பிள்ளைகளுக்கு, மிட்டாய், திண்பண்டங்கள் வாங்கிக் கொடு என்கிறார், குருநாதர்.
            
ஆக, இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது. குருநாதருக்குத் தெரியாமல், அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று, அந்த செத்தைகளையெல்லாம் போட்டு, ஈயக் கரண்டியும் கொண்டு வந்து, அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம். அதே மாதிரி தங்கமாக மாறியது.

இரண்டாவது முறையாகத் தங்கம் ஆனவுடன், இரண்டு பேரிடம் தங்கம் பதம் பார்ப்பவர்களிடம் கொடுத்து, அது எப்படி இருக்கிறது என்றேன்?

அட..அட..அட., நைனா, உனக்கு இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது”. உங்களைத் தேடி எத்தன பேர் வருவார்கள்? என்று, இதில் பெருமை பேசுகின்றார்கள்.

இவர் இப்படிச் சொன்னவுடன், அங்கிருந்து குருநாதர் வருகிறார் ரோட்டில் திட்டிக் கொண்டே, ஏய்.. திருட்டுப் பயலே, அதே திருடா.., டேய்.. தெலுங்கு ராஜ்யம்.., என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.

ஒரு செயின், சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று, “டேய்.. திருடா என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.

நான் என்ன செய்தேன்? எழுந்து விழுந்தடித்து, சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொன்டேன். அங்கேயும் பின்னாடி, என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார், குருநாதர்.

அவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். ஏய்.., திருடா”. தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் திட்டுவார் என்னைத் திட்ட மட்டார், தெலுங்கு ராஜ்ஜியம் என்றுதான், சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.

அப்பொழுது இதை எடுத்துக் கொண்டு ஓடி, ஓடிப் பார்க்கிறேன் இருந்தாலும் என்னால் முடியவில்லை கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.

இங்கே வாடாஎன்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்? என்று பிடித்துக் கொண்டார் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன், பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.

ஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி? என்றார் குருநாதர். உன் மனதைத்தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன். இதில் எத்தனை நிலைகள் இருக்கின்றது?

உன் மனதைத் தங்கமாக்கினால், எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது? என்றார்.

 ஆக, அந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது, இதே போல் நான் செய்த மாதிரி, அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.

நான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே, அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது. ஏனென்றால், மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது? என்று சோதிக்கிறார், குருநாதர்.

பின், தங்கம் செய்து வித்தார் என்று சொல்லிக் கொண்டு, எமக்குப் பின்னால் எல்லோரும் தேடி வருவதற்கு ஆரம்பித்தார்கள். கொஞ்சம் சொல்லிக் கொடு, நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்.. நீ செய்தால் தான், குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக்கொடு, நான் எல்லாம் செய்துகொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன். பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள், ஏராளமானோர்.

ஏனென்றால், குருநாதர் ஒவ்வொரு ஆசையின் தன்மைகளை எமக்குக் காட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையெல்லாம் தெளிவுபடுத்தினார். ஆகையால், மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டுமென்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.

ஆக, சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாறி, உலகத்தின் தன்மையை எப்படி உருவாக்கும் தன்மை பெறுகின்றதோ, அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும், இந்த பாதரசத்தின் தன்மை அடைந்தது. அதன் உணர்வின் தன்மை பெற்றது தான், அந்த உயிர்

ஆக மொத்தம், உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும். உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.

எப்படி பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும், அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ, அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.
2. என்னை வேலையை விட்டு நிற்கச் சொன்னார் குருநாதர்
என்னை மில்லில் இருந்து வேலையை விட்டு (நிற்க) போகச் சொன்னார். இங்கு வீட்டில், சாமிஅம்மாவுக்குத் (ஞானகுருவின் மனைவி) தெரியாது அப்பொழுதுதான் அவர் நோயில் இருந்து எழுந்திருக்கின்றார். சாமி வேலையை விட்டு நின்றுவிட்டார் என்று. இங்கு வீட்டில் வந்து சொல்லி இருக்கின்றார்கள்.

அங்கு யாம் வேலைக்குச் சென்றாலும், குருநாதர் என்ன செய்தார்? அவனை உடனே ரிசைன் (ராஜினாமா) பண்ணச் சொல் என்று, ஆபீசில் போன் அடிக்கின்றது. 

ஆனால், இங்கே மில்லில் இவர்கள், என்னை ரிசைன் செய்ய விட மாட்டேன் என்கிறார்கள் உனக்கு என்னப்பா வேண்டும்? செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன், நீ வேலையைப் பார் என்கிறார்கள்.

அதற்குள் போனில் குருநாதர், அவனை உடனே நீ வெளியே அனுப்புகிறாயா இல்லையா என்று அங்கே கேட்கிறது

அந்த மேனேஜருக்கு அதைக் கேட்டவுடனே, அவருக்கு ஒரு அதிர்ச்சி மாதிரி ஆகி, “கிடு கிடு கிடுவென்று மயக்கமாக வந்து, என்னப்பா இது, யாரோ உன்னை ரிசைன் பண்ணச் சொல்லி, அவனுக்குப் பணத்தைக் கொடுத்து, வேலையை விட்டுப் போகச் சொல் என்று சொல்லுகிறார்கள். என்னைப் போட்டு வெளுக்கின்றார்கள், என்கிறார்.

இப்படி இதைக் கேட்டு, இவர்களும் பயந்து கொண்டு, நீ எப்பொழுது வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்று வேலைக்கு வரும்படி சொல்லி, எம்மிடம் அந்த மேனேஜர் 700 ரூபாய் கொடுத்தார்.

யாம் அதைக் கொண்டு போகவும், உடனே குருநாதர் நடுரோட்டில் எம்மை மடக்கி, இங்கே பார், எத்தனை பேர் பட்டினியாக இருக்கிறர்கள்? அவர்களுக்கு எல்லாம் வாங்கிக்கொடு என்றார்.

அந்தப் பணத்தை, நான் வீட்டிலே கூடக் கொடுக்க முடியவில்லை

நீ வீட்டில் கொடுத்தால், வேலையை ராஜினாமா பண்ணியது தெரிந்துவிடும். நிச்சயம் அழுகத்தான் போகிறார்கள் ஆகையால், நீ பணத்தைக் கொடு.

அந்தப் பணத்தை, இங்கே அழுகிறவர்களுக்கெல்லாம் கொடுக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்டார் குருநாதர். அதையும் வீட்டில் கொடுக்க முடியவில்லை.

இந்த மாதிரியெல்லாம் சில சிரமங்களை ஏற்படுத்தித்தான், அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். பின், வீட்டில் யாரிடமும் சொல்லாமல், பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.

பிறகு குருநாதர், என் பொண்ணு மீராவுக்கு காட்சி கொடுக்கிறார். ஆனால், என் பையன் தண்டபானி சிறிய பையன். சாமிஅம்மாவுக்கும் குருநாதர் காட்சி கொடுக்கவில்லை.

என் பொண்ணுகள் இருவருக்கும் காட்சி கொடுக்கவும், எனக்கு சாப்பாடு போட்டு வைத்தார்கள். அந்த சாப்பாட்டுத் தட்டு அங்கு போய் நிற்கிறது, போட்டுவிட்டு இங்கே வைத்து, நான் கையை வைக்கப் போனால், தட்டு நகர்ந்து அங்கே போகிறது.

இப்படியே மாற்றி மாற்றி வந்தவுடன், என் பிள்ளைக்குச் சந்தேகம் வருகின்றது. என்னமோ ஏதோ நடக்கிறது என்று அழுகின்றார்கள் அப்பொழுது, அந்தப் படத்தில் குருநாதர் காட்சி கொடுத்து, உங்கள் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது. நான்தான் வேலையை விட்டு நிற்கச் சொன்னேன், அவர் வேலையை விட்டார் இதை யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால், உனக்குத் தலைவலி வரும் என்று சொன்னவுடன், அந்தப் பொண்ணும் எதுவும் சொல்லவில்லை.

பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டது, சாமிஅம்மாவும் இப்பொழுதுதான் நோயில் இருந்து எழுந்தார்கள் அவரிடமும் சொல்லவில்லை என்று எண்ணி, எனக்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
3. மலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொன்னார் குருநாதர்
அப்பொழுது இந்த உணர்வை எடுத்து, நீ நேராக பழனி மலைக்குப் போ என்று சொல்கிறார். அப்படி அந்த மலைக்குப் போவதற்கு முன்தான், முருகன் உனக்குக் காட்சி கொடுக்கும் பொழுது, நீ என்ன கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார், குருநாதர்.

இருந்தாலும், உனக்குக் முருகன் காட்சி தருவான். முருகன் காட்சி தரும் பொழுது, நீ என்ன கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அப்பொழுது, செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், சொல்வாக்கு வேண்டும் என்று, நீ கேட்க வேண்டும் என்று சொல்லி, இதற்கு விளக்கமும் கொடுத்தார், குருநாதர்.

இந்தச் செல்வம் இருந்தாலும், செல்வாக்கு வேண்டும், அது இல்லாமல் போனால், அந்தச் செல்வத்திற்குள் எதிரிகள் வரும், செல்வாக்கு வேண்டும், இரண்டாவது சொல்வாக்கு வேண்டும், இதைச் சொன்னால், அந்த உணர்வை அவன் கிரகிக்கும் தன்மை. இந்த மூன்று நிலையும், ஒரு மனிதனுக்குத் தேவை என்று குருநாதர் சொல்கின்றார்.

ஆனால், முருகன் உனக்குக் காட்சி கொடுப்பான் நீ இதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார். இதே மாதிரி, பல உணர்வின் உண்மையின் நிலைகளை இயக்கிக் காட்டினார்.

சாதாரணமாக முருகன் என்றால், இப்படித்தான் இருப்பார் என்று நமக்குத் தெரியும், வேறு ஒன்றும் தெரியாது. நானும் படி ஏறிப் போனேன், சாப்பிடவும் முடியவில்லை கிரக்கமும் அதிகமாகின்றது. என்னுடைய சிந்தனை எங்கெங்கேயோ போகிறது.

இதென்னடா வம்பாகப் போய்விட்டது. சாமிஅம்மா உடல் நிலை இப்பொழுதுதான் சரியாகி உள்ளது. பிள்ளைகள் எல்லாம் இந்த மாதிரி இருக்கின்றது. மாமனார் இறந்து விட்டார் பார்ப்பதற்கும் வழி இல்லை என்ற வகையில் திகைத்துப் போய், மிகவும் கவலையில் இருந்தேன்.

இப்படி, ரொம்பக் கவலையாக இருக்கும் பொழுதுதான், திடீரென்று, மலைக்கு போ என்ற இந்த உணர்வு வந்து மலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்
4. முருகனின் காட்சி
அங்கு போனவுடன் நான் போன நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் தான் இருந்தார்கள். அப்பொழுது, என் உடலில், கம கமஎன்று வாசனை வருகிறது.

அந்த மலையில் உள்ளவர்களில், இதற்கு முன் என்னுடன் பழகிய வாட்ச்மேன் வந்து, நைனா, நைனா, வாங்க..” என்று, அங்கு தாம்பாலத்தில் யாரோ அர்ச்சனை செய்த மாலையை எடுத்து, என் கழுத்தில் போட்டார்.

அய்ய.. என் கழுத்தில் ஏன் மாலையைப் போடுகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர், “இல்லை நைனா, உனக்குப் போட வேண்டும் என்று தோன்றியது, போடுகிறேன் என்றார்.

அட., எனக்குப் போடவேண்டும் என்று என்னப்பா வந்தது. நானே இப்படிக் கஷ்டப்பட்டு வருகிறேன்என்றேன்

என்னமோ எனக்கு, மாலயை உனக்குப் போட வேண்டும் தோன்றியது, நான் போடுகிறேன் என்கிறார் அந்த வாட்ச்மேன்.

முதலில் அங்கே அந்த வரவேற்பு. அந்த மாலையைப் போட்டவுடனே என்ன நடக்கின்றது? அந்தச் சிலையில் இருந்து முருகன் அப்படியே எழுந்திருந்து வருகின்றார்.

அது, அந்த உணர்வு, முருகன் அந்த குழந்தைப் பருவமாக வருவது தெரிந்தது. நான் முன்னே பின்னே, முருகனைப் பார்த்ததும் இல்லை, அப்பொழுது காட்சியாக, சிலையிலிருந்து முருகன் வந்தால் எப்படி இருக்கும்? எனக்கு ஒரே அதிசயம், பொங்குகின்றது !
5. “நான் நல்லவனாக ஆகவேண்டும்என்றுதான் முருகனிடம் கேட்டேன்
முருகன் வந்தவுடன், எனக்கு என்ன ஆனது? செல்வாக்கு, சொல்வாக்கு, தனம், இந்தப் பொருள் வேண்டும் என்ற வகையில், இந்த செல்வாக்கு வேண்டும், சொல்வாக்கு வேண்டும், செல்வம் வேண்டும் என்று கேட்பதற்கே, எனக்கு மனம் வர வில்லை,

ஆக, நம் வாழ்கையில் முருகனையே பார்த்து விட்டோம். இனிமேல், இதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும்? இந்த நிலையில்,
நான் நல்லது செய்ய வேண்டும்,
நல்லதைச் செயல்படுத்த வேண்டும்,
நல்ல வழியில் நடத்த வேண்டும்,
என்னை அறியாது தீயது வந்தால்,
அது வராது தடுக்கக்கூடிய சக்தி எனக்கு வேண்டும்.

எனக்குள் ஆசை என்ற நிலைகளோ, தவறான உணர்வுகள் வந்தாலோ, அவைகளை வராது தடுக்கும் அந்த சக்தியை, நீங்கள் கொடுக்க வேண்டும் என்று, வேண்டினேன். அவ்வளவுதான்.
6. போகர் சமாதியில், போகருடைய அருளைப் பெற்றேன்
அதைக் கேட்டுவிட்டு, அங்கிருந்து நேராக போகர் சமாதிக்குப் போனேன். அங்கேயும் ஆள் இல்லை போய் நின்றவுடன், போகரைப் பற்றி தெரிந்தவுடனே, சேகண்டி சத்தம் கேட்கின்றது.

கேட்கவும், உடனே பூஜை செய்து கொண்டிருக்கின்ற மாதிரி சப்தம் கேட்டவுடன், அங்கு உள்ளவர், நைனா., நைனா., இது என்ன வேலை செய்கிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டு, அவரும் உள்ளே வருகின்றார் வந்தால், அவருக்கும் சேகண்டி சத்தம் கேட்கிறது.

அப்படியே நானும் தரையிலிருந்து, ஒரு அடிக்கு மேலே இருக்கின்ற மாதிரி இருக்கிறது. எனக்கே தெரிகின்றது. அப்பொழுது, பல அற்புதமான வாசனைகளெல்லாம் அங்கே வருகின்றது. அது என்னை, எங்கேயோ அழைத்துப் போகின்ற மாதிரி இருக்கிறது.

அப்பொழுது, இவர் வந்து பார்த்துவிட்டு, சிறிது நேரம் கழித்து, என்ன நைனா., பெரிய சித்து வேலை எல்லாம் விளையாடுவது போல் இருக்கின்றது? தரைக்கு மேல் இருக்கிறீர்கள், சேகண்டி சப்தம் எல்லாம் கேட்கின்றது. போகனுடைய அருளையே பெற்றுவிட்டீர்கள் போல் இருக்கின்றதே என்று, சொல்கிறார்.

நான் வழக்கமாக அங்கு போய் வருவதால், அவர் இப்படிக் கேட்கிறார். அந்தப் பெரியவர், அங்கே உள்ளவர் அப்படிக் கேட்கின்றார். ஆக,  போகர் சமாதியில், இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி இது நடந்தவுடன், எனக்கு ஒரு பெரிய தனி உற்காகமே வந்தது. நான் சாப்பிடாமல் வந்த, அந்த நிலையெல்லாம் இங்கே மாறிவிட்டது.

அங்கே நான் கேட்டது என்ன? எனக்குச் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விடுத்து. நான் நல்லவனாக இருக்க வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும், என்றுதான் கேட்டேன்.

எனென்றால், இந்த உணர்வுகள் நாம் தப்பிதவறி தவறு ஏதும் செய்துவிட்டால், இவர்கள் எல்லாம் பெரிய மகான்களாகத் தெரிகிறது. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், இவர்களின் சாபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற பயத்திலேதான், நான் அதை அப்படிக் கேட்டேன், அங்கிருந்து கீழே இறங்கி வந்தேன். வந்தவுடன், என்னை அறியாமலேயே பெரிய உற்காகம் வந்தது.
7. ஆவி பிடித்த ஒரு பெண் நலமடைந்தார்
இறங்கும் வழியில், சின்ன சேலத்தில் இருந்து வந்த ஒரு ஆவி பிடித்த ஒரு பெண். உடல் பூராவும் பல தாயத்துக்கள். ஆனால், அழகான பெண். அவர்கள் எங்கெங்கோ சுற்றி ஒன்றும் முடியவில்லை.

ஒரு படையே இவரைக் கூட்டி கொண்டு, பழனி மலைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். படி மேல் நின்று கொண்டு, “ஏறு ஏறு என்று, மேள தாளங்களோடு சொல்கின்றார்கள். ஆனால், அந்தப் பெண்ணால் ஏற முடியவில்லை.

அப்பொழுது, நான் இந்த போகர் சமாதியில் இருந்த விபூதியை, நான் கீழே போகும் பொழுது, அந்தப் படி மேல் நின்று கொண்டிருந்த பெண்மேல் வீசி எறிந்துவிட்டு, நான் போய்விட்டேன்.

உடனே, அரோகரா, முருகா என்று சொல்லி கொண்டு அந்தப் பெண் படியில் ஏறிப் போகின்றது. எல்லோரும் மேலே போகின்றார்கள். ஆனால், அந்தக் கூட்டதில் இருந்த ஒரு ஆள், என்னைத் துரத்திக் கொண்டு வந்து, ஐயா, நீ முருகனேதான், நீ என் கூட வரவேண்டும் என்று சொல்கிறார்.

அட., நான் முருகனும் அல்ல, கத்தரிக்காயும் இல்லை என்றேன் நான்.

இல்லை இல்லை, நீங்கள் முருகன்தான், மாறுவேடத்தில் வந்திருக்கின்றீர்கள்என்கிறார் அவர். நாங்கள் இத்தனை பேரும் என்னென்னமோ செய்தோம். எத்தனையோ தாயத்துக்களைக் கட்டினோம் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் பெண், இப்பொழுது வேகமாக ஓடுகின்றது. முருகன் ஏதோ பண்ணியிருக்கின்றார். நாங்கள் வேண்டிக் கொண்டிருந்தோம். அவர்தான் வந்திருக்கிறார் என்கிறார், அவர்.

ஐயா, நான் சாதாரண ஆள், மில்லில் வேலை பார்க்கின்ற ஆள் என்று சொன்னாலும், என்னை அவர் விடவில்லை. அப்புறம், நான் எவ்வளவு சொன்னாலும், விடவில்லை. அந்த இடத்தில், எமக்கு அவ்வளவு உற்சாகம் ஊட்டுகின்றார், குருநாதர்.

எனக்கு ஓரே குஷி. ஐயா, நீங்கள் இந்த விபூதியை வேண்டுமென்றால், கொண்டு போங்கள். ஏதாவது ஆனால், பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

இல்லை நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று, அவரும் சொல்கின்றார்.

ஐயா நான் வருவதற்கு இல்லை, நான் போகவேண்டும் என்று சொன்ன பின்பு, போய் விட்டார்.
8. என்னை சூட்டையும், சட்டையும் போடச் சொன்னார் குருநாதர்
இங்கே கீழே நான் வந்தவுடன், பஸ்டாண்டில் வைத்து குருநாதர் என்னை அடித்தால், பயங்கரமாக அடிக்கிறார் குருநாதர். உன்னை முருகனிடம், நான் எதைக் கேட்கச் சொன்னேன்? நீ எதைக் கேட்டாய்?

பணம் இல்லை என்றால், எதாவது நடக்குமா? செல்வம் வேண்டும், சொல்வாக்கு வேண்டும் என்று கேட்கச் சொன்னால். நீ என்ன கேட்டாய்? என்னிடம் இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது. என்னை எவன்டா மதிக்கிறான்? நீ அதைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான், இதைச் செய்கிறேன் என்று குருநாதர் சொன்னார்.

குருநாதர் என்னை அடிக்கும் பொழுது, அந்த மூலைக் கடைக்காரர் மஜீத் வந்து, மாமா, வசமாக மாட்டிக் கொண்டாயா?”, நான் குருநாதரிடம் தைலத்தை வாங்கிவிட்டு, உடல் சரியான பின்பு என்னைப் போட்டு உதைத்தார். இப்பொழுது நீ சிக்கிக் கொண்டாய் என்றார்.

அதைக் கேட்டவுடன், எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாகப் போய்விட்டது. ஆனால், இவருடைய உண்மைகள் அனைத்தும் குருநாதருக்கும், நமக்கும்தான் தெரியும். இதில் எப்படி நடந்தது, எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று.

இருந்தாலும் எம்மை அடித்து, என் சட்டையெல்லாம் கிழித்து விட்டார் அந்தப் பேருந்து நிலையத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த, ஒரு டாக்சி டிரைவர் இந்தக் கிழவனை அடிடா என்கிறார்,

ஐயா, நீங்கள் பேசாமல் விட்டுவிட்டுப் போங்கள். எங்களுக்குள் எதுவும் இருக்கும், நீங்கள் எதுவும் அவரைத் தொடாதீர்கள் என்று நான் சொன்னேன்.

அவர், இல்லை இல்லை.., இது பைத்தியம்தான், இருக்க இருக்க ரொம்ப முத்திப் போய்விட்டது, அதனால் எல்லாரையும் அடிக்கிறார் என்றார்.

குருநாதர், அப்புறமும் என்னை விடவில்லை சட்டையெல்லாம் கிழிந்துவிட்டது. வேஷ்டியையும் கிழித்துவிட்டார். ஜட்டி இல்லையென்றால் அதுவுமில்லை. இப்படி, டார் பார்என்று கிழித்து விட்டார். அப்புறம், திண்டுக்கல் ரோட்டில் அந்த ஸ்கூல் பக்கம் அழைத்துப் போய், குருநாதர் எம்மிடம் சொல்கின்றார்.

நான் இவ்வளவு பெரிய சக்தி பெற்றேன் என்னை எவனும் மதிக்கவில்லை. அதற்காக வேண்டித்தான், முருகனிடம், உனக்கு செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், சொல்வாக்கு வேண்டும் என்று உன்னைக் கேட்கும்படிச் சொன்னேன். நான் சொன்னதை, நீ கேட்கவில்லை உனக்கு, யார் பணம் தரப் போகின்றார்கள் என்றார், குருநாதர்.

அப்பொழுது நான் சொன்னேன். முருகனையே எனக்குக் காண்பித்துக் கொடுத்தீர்கள். இதனுடைய சக்தியை, நீங்கள் குருவாக இருந்து எனக்கு வழி காட்டுகின்றீர்கள். நீங்கள் இருவரும் இருந்தால், எனக்குப் போதாதா சாமி”, என்றேன்

அவ்வளவுதான், உடனே அங்கு பக்கதில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துப்போய், லட்டு, ஜிலேபி வாங்கிக் கொடுத்து, சாப்பிடச் சொன்னார். ஆனால், குருநாதர் இதை மட்டுமா செய்தார்?

பல நிலைகளை செய்யப்படும் போது, சக்தி வந்தவுடன் ஒரு வார்த்தை கேட்கிறார், என்ன செய்கின்றார் குருநாதர்? நீ நல்ல சூட்டையும், கோட்டையும் போட்டுக்கொள் என்று ஆசையைத் தூண்டுகின்றார்.

ஜவுளிக் கடைக்குப் போய், நல்ல சூட்டை வாங்கிக்கொள், நல்ல சட்டையைப் போட்டுக் கொள், நன்றாக ஜம்என்று வரவேண்டும் என்றார், குருநாதர்.

நான், எனக்கு இந்த சூட்டும் வேண்டாம், சர்ட்டும் வேண்டாம் சாமி”, இந்த அவஸ்தைப்பட்டது போதும்.

நீ வாங்கிக் கொள்கிறாயா இல்லையாடா?” என்று, திரும்பவும் கேட்கின்றார்.

எனக்கு வேண்டவே வேண்டாம் என்றேன், நான்..

நீ சூட்டைப் போட்டுக் கொண்டு, நீட்டா (neat) இருக்க வேண்டும். உனக்கு சக்தி நிறையக் கொடுத்திருக்கின்றேன். நீ செய் என்றார், அதிலும் ஆசையைத் தூண்டுகிறார்.

அப்பொழுது, அங்கிருந்தவர்கள் எல்லாம், குருநாதர் என்னமோ சூட்டும், சர்ட்டும் வாங்கித் தருகிறேன் என்று சொல்கின்றார், நீ வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே என்றனர்.

நான், எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம், சர்ட்டும் வேண்டாம் என்னை ஆளை விடுங்கள், போதும் என்றேன்.

அதிலே அவர் சந்தோஷப்பட்டு, அந்தச் சந்தோஷத்திலேயே வந்தேன். என் சைக்கிள் கடையில் வேலை செய்த, சின்னத்தம்பி என்ற பையன், அவன் கடைக்கு வந்தேன். அவனுக்கு ஏற்கனவே சைக்கிள் எல்லாம் கொடுத்திருக்கின்றேன்.

அங்கே வந்தவுடன் அவன் என்னை ,“ஓய்” பைத்தியம் பிடித்தவன், நீ அந்தப் பக்கம் போயா.., இங்கு கடையில் உட்காராதே, தரித்திரம் பிடித்தவன்என்று என்னைத் திட்டுகின்றான்.

நீ வேலையையும் விட்டுவிட்டு, இதையும் விட்டுப் போட்டு பிள்ளைகுட்டி எல்லாம் விட்டுவிட்டு, ஒரு பைத்தியக்காரன் கூடப் போய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய், இங்கே வராதே என்கிறான்.

என்னடா இது வம்பாகப் போய்விட்டது. என்னை எதிர்த்துப் பேசாதவன், இப்படிப் பேசுகின்றானே என்று, அதை விட்டுவிட்டுப் போனேன்.

அங்கிருந்து போனால், என் வீட்டுக்கு முன்னாடி உள்ள கடைக்காரர் இப்ராஹிம், “ஓய் நைனா., உனக்கு நன்றாகப் பைத்தியம் பிடித்துவிட்டது, நல்லய்யா நாயக்கர் சம்பாதித்து வைத்திருகின்றார். நீ சொத்தையெல்லாம் தொலைத்து விட்டாய்என்று சொல்லி, ஐயா., இந்தக் கடையில் உட்காராதே, எனக்கும் தரித்திரம் பிடிக்கும் போய்யா, என்று சொல்கின்றார். எங்கே போனாலும், இதே மாதிரி எம்மைப் பேசுகின்றார்கள்.

என் பொண்ணு மீராவும், எம்மிடம், நீ வீட்டிற்குள் வராதே, தரித்திரம் பிடித்தவர் என்று எல்லோரும் பேசுகின்றார்கள், என்று சொல்கின்றது.

அதே தெருவிற்குள் வரும்போது, அங்கிருக்கும் ஒவ்வொருத்தரும் எம்மை மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். இப்படி இந்த மாதிரி, எதிர்ப்பின் உணர்வுகள் வருகிறது. இந்த நேரத்தில்தான், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
9. கேன்சர் நோயை நீக்கச் செய்தார்  குருநாதர்
அப்படி ரொம்பக் கஷ்டமாக இருக்கும் பொழுதுதான், பாப்பம்பட்டியில் இருக்கும் நண்பர் இராமசாமி, அவர் தோட்டத்துக்குப் போனேன்.

அவரிடம், “எனக்குப் பெரிய அவஸ்தையாக இருக்கின்றது, எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்”, என்று சொன்னேன். அங்கேயும் எம்மை சும்மா விடவில்லை, குருநாதர். பல நிலைகளை ஏற்படுத்துகின்றார்.

என்னமோ செய்யப் போகிறாய் என்கிறார், குருநாதர். அங்கே அந்த சமயத்தில், சிலருடைய உடலில், டெங்குக் காய்ச்சல் என்று, மூட்டுக்கு மூட்டு வலிக்கிறது என்ற நிலையாக இருக்கின்றது.

அப்பொழுது, “மண்ணைத் தூக்கிப்போட்டு இது சரியாகும் என்று சொன்னால், அந்த நோய் போகின்றது. அதனால். அங்கே ஒரே கூட்டமாகக் கூடுகின்றது. இப்படியெல்லாம் பல நிலைகள் ஆகின்றது. இங்கேயும் போகவிடவில்லை. இப்படியும் செய்கிறார், குருநாதர். எனக்கு என்ன செய்வது? என்று ஒன்றும் தெரியவில்லை.

அப்பொழுதுதான், அங்கிருந்து மகாலிங்கம் என்ற ஜாதகம் பார்க்கிறவர் வீட்டில் போய்த் தங்கி இருந்தேன். அங்கும் பல அற்புதங்கள் நடக்கிறது. கூட்டங்கள் வருகின்றது.

அங்கே, அந்த மகாலிங்கத்தின் அண்ணன் பையன், அவனுக்கு வயிற்று வலி என்று சொல்லி, இராமசாமி நாயுடுவின் ரைஸ் மில்லுக்கு வரச்சொல்லிச் சொன்னார்கள்.

அங்கு போய்ப் பார்க்கும்போது, அவன் வயிற்று வலியுடன் வேதனைப்படுகிறான். நான் அங்கு சென்றவுடன், ஹாஸ்பிட்டலுக்கு போவதற்குப் பணம் இருந்தால் பரவாயில்லை. பையனுக்குக் கேன்சர் என்று டாக்டர் சொல்லிவிட்டார். கேன்சரை நீக்குவதற்கு, சென்னைக்குப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இராமசாமி எம்மிடம், உன் குருநாதரை நினைத்து ஏதாவது செய் என்கிறார்.

அங்கிருந்த விபூதியை எடுத்து, குருநாதரை எண்ணி அந்தப் பையனுக்குக் கொடுத்தேன். ஆனால், என்ன ஆனது? விபூதியைக் கொடுத்தவுடன் அவனுக்கு இரத்த இரத்தமாக, வெளியில் போக ஆரம்பித்துவிட்டது.

இராமசாமி என்ன செய்தார்? நான் தான் அந்த விபூதியை, உன்னிடம் கொடுத்தேன். நீ என்னிடம் இருந்த விபூதியைத்தான்நீ அந்தப் பையனுக்குக் கொடுத்தாய். ஒரு வேளை, இந்த விபூதியில் யாராவது பாலிடாலைக் (பூச்சி மருந்தை) கலந்து வைத்திருப்பார்களோ, என்னமோ தெரியவில்லையே என்கிறார், எம்மிடம்.

யாரும் இதைத் தொடாதீர்கள் என்று இராமசாமி சொல்கிறார் ஏனென்றால், இரத்தமாக அவனுக்கு வெளியிலே போகவும், அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்படி, பல குழப்பங்களில் எல்லோரும் இருக்கின்றனர். நானும் திகைத்துப் போய் இருந்தேன். எனக்கும் காட்சி கொடுக்கவில்லை.

மகாலிங்கத்தினுடைய பையனுக்கு உடனே அருள் மாதிரி வந்து, குருநாதர் காட்சி கொடுத்து “நான் தான் வந்துள்ளேன், அவனுடைய கேன்சரை ஆபரேசன் பண்ணியுள்ளேன், அதுதான் இப்பொழுது வெளியிலே வந்திருக்கின்றது”, என்று சொன்னதும், எல்லோருக்கும் ஒரு ஜீவன் வந்தது. இது நடந்த நிகழ்ச்சி.

நான் ஆபரேசன் செய்த அந்தக் கேன்சர் கட்டி, இப்பொழுது வெளியே வந்துள்ளது. அந்த இரத்தத்தின் மத்தியில் உள்ளது. அதை எடுத்து, தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார் என்றார், குருநாதர்.

அதே மாதிரிக் கழுவிப் பார்த்தால், கட்டி இருக்கின்றது.

அந்தப் பையனுக்குச் சாப்பாடு, எட்டு மணி நேரம், எட்டு நாழிகை வரையிலும் கொடுக்க வேண்டும். அது இன்னார் வீட்டில், இந்த மாதிரி கஞ்சி வடித்திருக்கின்றார்கள். நீ போய்ப் பார் என்று சொல்கின்றார் குருநாதர்.

போய்ப் பார்த்தால், அதே மாதிரி கஞ்சி வடித்திருந்தார்கள்.

அந்தக் கஞ்சித் தண்ணீரைக் கொண்டுவா. அதில் இந்த விபூதியைப் போடு. அந்தக் கஞ்சியைத்தான், அவன் இத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும் என்றார், குருநாதர்.

அப்புறம் அதே மாதிரி அவனைச் சாப்பிடச் செய்தேன். அந்த எட்டு நாள், எட்டு மணி நேரம், எட்டு நாழிகை வரையிலும், அந்தக் கஞ்சியைச் சாப்பிட்டவுடன், அந்தப் பையன் எழுந்து, குஷியாக விளையாட ஆரம்பித்து விட்டான். அங்கேதான், முதன் முதலில் ஆபரேசன் செய்து, கேன்சரை நிவர்த்தி பண்ணியது. இப்படி, சில அதிசயங்கள் அங்கே நடந்து கொண்டே இருந்தது.
10. டெங்கு காய்ச்சலை நீக்கச் செய்தார் குருநாதர்
அப்புறம் ஊரில் உள்ளவர்களுக்குக் கேட்கவா வேண்டும், அந்த அற்புதமான நிலைகள் அங்கே பரவுகின்றது. அந்த சமயத்தில், அங்கே எல்லோருக்கும் டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. அனைவருக்கும், யாம் அந்த விபூதியைக் கொடுக்கவும், உடனடியாகக் குணமானது.

அப்பொழுது, இந்த இராமசாமிக்கு மிகவும் ஓரே குஷியாகப் போய்விட்டது. பரவாயில்லை, கிழவன் கூட, சேர்ந்து நீ சுற்றியதற்கு உனக்கு நல்ல சக்தி கிடைத்தது என்று எம்மிடம் சொல்கிறார்.

நோய்கள் குணமாவதைக் கேள்விப்பட்டு, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வண்டியை போட்டுக் கொண்டு அங்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.