Wednesday, September 21, 2016

கண் என்ன செய்யும்...? உயிர் எதைச் செய்யும்....? உடல் எதை இணைக்கும்...? – "தியானத்தின் நுணுக்கம்"

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் இந்த உலகத்துடன் ஒத்து வாழ்கின்றோம். அதிலிருந்து பிரிந்து வாழ முடியாது. நன்மையோ, தீமையோ அவைகளைக் கேட்டுணர்ந்துதான் நாம் செயல்படுகின்றோம்.

தீமையை நுகர்ந்து தீமை என்று நாம் உணர்கின்றோம். ஆனால், அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் விளையக் கூடாது.

அப்படி என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒருவரிடம் பழகிய பின்பு எதிரியாகிவிட்டால் நமக்குள் அந்த உணர்வின் பதிவு இருக்கும். திடீர் என்று சந்தித்தோம் என்றால் “ஐயோ.., போகிறான் பார் அயோக்கியப் பயல்..,” என்று பயமோ, கோபமோ, ஆத்திரமோ வந்து அவன் செய்த தவறை உணர்த்தும்.

அப்பொழுது, அந்த வழியில் உருவான அணு தன் இரையை அந்த நேரத்தில் எடுக்கிறது என்று பொருள்.

அதே மாதிரி அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் பொழுது அதை நாம் கேட்க நேரும். மற்றவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் பொழுது அந்தத் தவறின் உணர்வை (நமக்குள் உருவான) அந்த அணு சாப்பிட்டு அது வளர ஆரம்பிக்கும்.

ஏனென்றால், ஒருவன் தவறு செய்கின்றான். அதைப் பார்த்துணர்ந்ததை நம் கண்ணின் கருவிழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ பார்த்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக (காற்றாக) மாற்றுகின்றது.

ஆன்மாவிலிருந்து மூக்கின் வழி அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளாக இயக்கிக் காட்டும். அந்த உணர்ச்சிகள் வாயிலே உமிழ்நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் இணையும். ஆகாரத்திலிருந்து இரத்தமாக மாறி பின் ஜீவ அணுக்களாகி உடலுடன் இணையும்.

ஆகவே, நம் கண் அது வழி காட்டும். நம் உயிரோ இயக்கிக் காட்டும், உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும். மீண்டும் நினைவுக்கு வரப்படும் பொழுது அதை அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி எந்தெந்த சந்தர்ப்பத்தில் அவைகள் நமக்குள் வளரத் தொடங்கினாலும் உடனுக்குடன் “ஈஸ்வரா..,” என்று நம் உயிரிடமே வேண்ட வேண்டும்.

உருவாக்கும் உயிரான ஈசனிடம் தான் தீமையை மீட்டிடும் நிலைகளைக் கேட்க வேண்டும். ஏனென்றால் நாம் எண்ணுவதை அணுவாக உருவாக்குவது நம் உயிர் தான். அவனின்றி அணுவும் அசையாது.

ஏனென்றால், கருவிழி பார்த்துப் பதிவாக்கி, காந்தப் புலன் ஆன்மாவாகக் கவர்ந்து நாம் சுவாசித்தபின் உள்ளுக்குள் சென்று அது எதனால் வளர்க்கப்பட்டதோ அந்த அணுவிற்கு உணவாகக் கொடுப்பது நம் உயிரின் வேலை. (நாம் எண்ணுவதை எல்லாம் ஜீவ அணுவாக மாற்றுவது நம் உயிரின் வேலை தான்).

நம் உயிர் சூரியனாக இருந்து அணுக்களை உருவாக்குவதும் அவைகளுக்கு இரையைக் கொடுப்பதும் அதனதன் நினைவுகளைக் கவர்ந்து தனக்குள் செயலாக்கும் நிலையாக இயக்கிக் கொண்டுள்ளது.

உடலில் விளைந்த உணர்வை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதற்கொப்ப அடுத்து மறு உடல் பெறச் செய்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே, நம் வாழ்க்கையில் மற்ற தீமையான உணர்வுகளை எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவான மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழகினாலும் அது தனித்து நிற்காது. எல்லா எண்ணங்களிலும், நினைவுகளிலும், உணர்வுகளிலும், அணுக்களிலும் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கும் சக்தியை வைத்து “ஈஸ்வரா” என்று உங்கள் புருவ மத்தியில் இருக்கும் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்து அந்த தீமைகளை நமக்குள் குறைக்க வேண்டும்.

தனியாக ஒரு மிளகாயைக் கடித்தால் “ஆ..,” என்று காரமாகின்றது. ஒரு விஷமான பொருளைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகின்றது.

அதே சமயத்தில் அந்த விஷமான சக்தியை மருந்துடன் சேர்த்து அதனின் கலவையைச் சிறுக்கப்படும் பொழுது மருந்தை நன்மையாக்குகின்றது. நோயை நீக்க உதவுகின்றது.

இதைப் போலத் தான் தீமையானவற்றைக் கேட்டுணர்ந்தாலும் அதை நுகர்ந்து இயக்கப்படும் பொழுது “இடைமறித்து...,” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதனுடன் இணைக்க வேண்டும்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் அணுவாக மாறுகின்றது. இதைக் கலந்த அணுவாக மாறும் பொழுது தீமையை அடக்கும் நிலைகளாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வலுப்பெறும் பொழுது தீமையான உணர்வை இங்கே பிளக்கின்றது. இப்படித் துடைத்துப் பழக வேண்டும். இதைத் தான் உங்களுக்குச் சக்தி வாய்ந்த ஆயுதமாக “ஆத்ம சுத்தி” என்று கொடுக்கின்றோம்.

சர்வ தீமைகளிலிருந்து விடுபடுவீர்கள், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும். உங்களை நீங்கள் நம்புங்கள்.