காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.
உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.
ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?
அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.
பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.
அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.
அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?
1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!
(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)
1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.
ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!
ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.
ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.
அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.
யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.
அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.
வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?
சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.
பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.
ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.
அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.
ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.
இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.
உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.
இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.
தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்கக் கூடிய சக்தியாகவும் வரும்…!
எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.