ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2023

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தை செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.