ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2023

உலோகக் கலவை கொண்டு வலுவான இயந்திரத்தை இஞ்சினியர் உருவாக்குவது போல் நம் எண்ணங்களை வலுவாக்க முடியும்

ஒரு இன்ஜினியர் இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அந்த இயந்திரம் கடினமான பளு கொண்ட வேலை செய்ய வேண்டி இருக்கின்றது என்றால்

1.அந்த இயக்கத்தின் தன்மைக்கு எந்த உலோகத்தைச் சேர்த்தால் அது வலு கொண்டு தாங்கும் என்று
2.அதற்குண்டான உலோகக் கலவைகளைச் சேர்த்து வலுப்பெறும் தன்மை கொண்டு வருகின்றார்.

ஏனென்றால் பளு அதிகமாகி… அழுத்தம் அதிகமாகும் பொழுது இந்த உலோகம் அதனுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தேய்மானம் இல்லாதபடி அது இயங்க வேண்டும்.

1.தேய்மானம் இல்லாது செயல்படுத்த வேண்டுமென்றால் அதிலே “வழுவழுப்பின் தன்மை” கொண்டு வர வேண்டும்
2.அதற்கு மாறாகச் சொர சொரப்பை உண்டாக்கி விட்டால்… அதனுட உராயும் பொருளை அது சீக்கிரம் தேய்த்து விடும்… இயந்திரம் இயங்காது.

இது எல்லாம் விஞ்ஞான அறிவு கொண்டு கொண்டு இயக்கும் நிலைகள்.

இதைப் போன்று தான் நம் உடலில் “மனிதனின் உணர்வுகளின் இயக்கத்தை எப்படிச் சீராக இயக்க வேண்டும்…?” என்ற பயிற்சியை இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

1.சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்துக் கொண்ட பிறிதொரு உணர்வுகள் ஒன்றுக்கொன்று மோதலாகும் போது
2.நம் நல்ல குணங்களை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…? (இயந்திரம் தேய்மானம் ஆவது போல்) என்பதை “நமக்கு நாமே அறிந்து”
3.நுகர்ந்த உணர்வு நமக்குத் தீமை செய்கிறது என்றால் அதை நாம் உடனே துடைத்துப் பழகுதல் வேண்டும்
4.அதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைத் தெளிவாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

தீமையான உணர்வுகளை எப்போது நுகர நேர்ந்தாலும் அல்லது பார்க்க நேர்ந்தாலும் “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…. எங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அந்த உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது இது வலுவாகிவிடுகிறது.
1.வேதனையோ சலிப்போ சங்கடமோ எதுவாக இருந்தாலும் உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தி விடுகின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க
3.தீமை செய்யும் உணர்வுகள் நம் ஈர்ப்பைக் கடந்து… ஆன்மாவிலிருந்து அகன்று சென்று விடுகின்றது.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று முதலில் தெரிந்து கொள்கின்றோம். அதே சமயத்தில் நம் உடலுக்குள் வேதனையான உணர்வு அணுவாக உருவாகாதபடி தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

அதற்குத் தான் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சும்படி சொல்கிறோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது. முதலில் தெரிந்து கொண்ட வேதனையின் வலு குறைகிறது.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… சந்தர்ப்பத்தில் பகைமையாகி விட்டால் துரோகம் செய்தான் பாவி…! என்று எண்ணினால் அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் அது உடனே அங்கே இயக்குகின்றது… அவனுக்குத் தீமையாகின்றது.

அதே போன்று அவனை நாம் எண்ணும் போது அந்தத் தீமையின் அணுக்கள் நமக்குள்ளும் விளையத் தொடங்குகிறது.

அத்தகைய நேரத்தில் எல்லாம்
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் கவர்ந்தோம் என்றால் அது “வசிஷ்டர்”
2.நம் இரத்தநாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்க்கப்படும் பொழுது கருவுற்றுப் பிரம்மமாக மாறுகின்றது.

இப்படி இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுவின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். "மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்..."

அதை நீங்கள் எளிதில் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் பயிற்சி முகாமாக அமைத்துத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.