ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2023

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்...!

அகஸ்திய மாமகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பூமியில் உள்ள மலைப்பகுதிகளில் எல்லாம் சுழன்று வந்து பல பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டறிந்த விண்ணின் ஆற்றல்மிக்க உணர்வின் தன்மையை
2.இங்கே பாபநாசம் மலைப் பகுதியில் நாம் அமர்ந்து மீண்டும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.இங்கே மீண்டும் அது ஜீவன் பெறுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அதை நினைவுபடுத்தும் போது அந்த உணர்ச்சியின் வேகம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை உங்களுக்குள் தூண்டும்படி செய்கிறோம்.

இங்கே படர்ந்துள்ள பதிந்துள்ள அந்த அகஸ்தியன் உணர்வுகளுடன்… குரு உணர்வுகளைக் கலந்து அதனுடன் இணைக்கச் செய்து தான் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கப்படும் போது
1.உங்கள் எண்ணங்கள் அந்த மகரிஷியின் உணர்வுகளை ஈர்க்கும் தன்மையாக
2.அதை நுகரும் நிலையும் கவரும் நிலையும் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த அருள் சக்திகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதியச் செய்யும் நிலைக்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு அழைத்து வந்தது.

காரணம்…
1.அன்று அகஸ்தியன் அவன் தனக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த ஆற்றல்கள்
2.இந்த இடத்தில் (பாபநாசம் மலை) இருக்கும் பாறைகளுக்குள் காந்தப் புலனால் கவரப்பட்டுப் பதிவாகியுள்ளது.

அந்த மகா ஞானி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் உடலில் தாவர இனங்களின் சத்துக்களை நுகர்ந்தறிந்தான். அறிந்த நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அதனுடன் இணை சேர்த்து “மகா சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” (புதிதாக) உருவாக்கினான்.

அதாவது இன்று விஞ்ஞானிகள் மற்ற மற்ற தாவர இன செல்களை இணைத்து எப்படிப் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றார்களோ அது போன்ற சக்தி வாய்ந்த தாவர இனங்களின் சத்துக்களை இணைத்து “மிக மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” அகஸ்தியன் உருவாக்கினான்.

1.அந்தத் தாவர இனச் சத்துக்களை மனிதர்கள் நுகர்ந்தால்
2.அவர்கள் உடலில் அறியாது சேர்த்ததீய வினைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக ஆது பெருகுகின்றது.
3.அதற்கே அகஸ்தியன் அதை எல்லாம் உருவாக்கினான்.

பிற்காலத்தில் வந்தவர்கள் அனைவரும் அத்தகைய தாவரங்களைப் பயன்படுத்தி வேருடன் அறுத்து அழித்து விட்டார்கள். அவைகள் அதற்குப்பின் வளர்ச்சி இல்லாது அதை வளர்த்திடவும் அதைக் காத்திடவும் நிலையில்லாது சென்று விட்டது. அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட பல தாவர இனங்கள் காலத்தால் இப்படி அழிந்துவிட்டது.

இந்த மலைப்பாங்குகளில் அன்று அகஸ்தியன் தன் உணர்வின் ஆற்றலால்… அவன் எண்ணத்தால் சுவாசித்து… பல பல தாவர இனங்களின் சத்துக்களை அவன் இணை சேர்த்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்தான்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் சென்ற அனைத்து மலைப்பகுதிகளிலும்… இப்படிப் பதியச் செய்தான்.

வானில் மேகங்கள் கூடி வந்தாலும் மலைப் பாங்குகளில் வரும் பொழுது
1.அங்கே அகஸ்தியனின் உணர்வலைகள் பதிந்து இருப்பதனால்
2.தாவரங்கள் அந்த மேகங்களைக் கவர்ந்து அழைத்து வரப்படும் போது
3.பாறைகளுக்குள் அகஸ்தியனின் உணர்வுகள் பட்டதைக் கவர்ந்து “ஜீவ நீராக… ஜீவ நதியாக உருவாகின்றது…”

அப்படி உருவாகும் ஜீவித நீரால் அப்பகுதியில் மற்ற தாவர இனங்கள் புதிதாக ஜீவன் பெறும் நிலையும் வந்தது. அதே சமயத்தில் அகஸ்தியன் எந்தெந்தத் தாவர இனங்களை உருப்பெறச் செய்தானோ அதற்கு நீரே இல்லை என்றாலும் மேகங்களைக் கூடச் செய்து ஜீவித நீர் கிடைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக அவன் உருவாக்கினான்.

1.வெறும் கற்பாறைகளாக இருந்தாலும் அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்ந்து நீராக வடிக்கச் செய்கின்றது
2.தான் உருவாக்கிய அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த தாவர இனங்களை வளர்த்திடுவதற்காக
3.அவ்வாறு செய்தான் அன்றைய முதல் மெய் ஞானியான அகஸ்தியன்…!