ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2023

1008 உணர்வுகள் கொண்ட மூன்று இலட்சம் பேரைச் (மனிதர்களை) சந்திக்கும்படி செய்தார் குருநாதர்

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.