நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம். அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகளையும் இதில் கலந்தே உங்களுக்குள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்..
யாம் (ஞானகுரு) உபதேசித்ததை எண்ணித் தியானிக்கும் போது
1.மகரிஷிகள் கண்டதை எல்லாம் உணரும் பருவம் நீங்க பெறலாம்…
2.அதைக் காட்சியாகவும் தெரியலாம்… நறுமணங்களாகவும் உங்களுக்குள் வரும்…!
3.அவரவர்கள் இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவு செய்த நிலைகள் கொண்டு நிச்சயம் உணர முடியும்… மணத்தால் உணர முடியும்
4.கடந்த காலக் காட்சிகளை குருநாதர் எனக்கு எந்தெந்த இடத்திலே வைத்து எப்படிக் காட்டினாரோ
5.அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் உணர முடியும்… புது உணர்வுகளாக உங்களுக்குத் தோன்றும்.
அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்கு முன் இந்தக் காற்றிலே படர்ந்து இருந்தாலும் அதைக் கவரக்கூடிய வலிமை நமக்கு வேண்டும்.
ஆயிரம் பேர் சேர்ந்து தான் ஆலயத்தில் இருக்கும் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனால் அந்தத் தேரை இழுக்க முடியாது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் அனைவரும் இந்தப் புவியின் ஈர்ப்பின் பிடிப்பை அறுத்து
2.அந்த அறுத்த உணர்வுகளை அவர்களுக்குள் விளைய வைத்து
3.எந்த மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் தான் சிக்காதபடி
4.இன்னொரு உடல் பெறாதபடி சப்தரிஷி மண்டலங்களாக விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
இருந்தாலும்…
1.புவியின் ஈர்ப்பின் பற்று கொண்ட நாம்
2.உடலின் உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம்…
3.எண்ணத்தால் அந்த மகா ஞானிகளின் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
4.நமக்கு அந்தத் திறன் நிச்சயம் தேவை.
அந்தத் திறனைப் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அருள் வழிப்படி மகா ஞானிகளின் ஆற்றல்மிக்க உணர்வின் எண்ணங்களை
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்து
2.அந்த உணர்ச்சிகளை உந்தும்படி செய்து
3.அனைவரும் சேர்ந்து ஏங்கிப் பெறும்படி செய்கிறோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகமாக நீங்கள் ஏங்கினால் ஆயிரம் பேர் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பது போன்று அந்த மாமகரிஷிகளின் சக்திகளை நமக்கு முன் கொண்டு வர முடியும்
1.அவரவர்கள் எந்தெந்த விகிதாச்சாரப்படி எண்ண வலு கொண்டு
2.எண்ணி ஏங்குகின்றீர்களோ அவரின் ஆன்மாக்களிலே அது கவரப்படும்.
3.ஆன்மாவில் கலந்து சுவாசித்து அந்த அருள் ஞான சக்தியைப் பெறும் தகுதி பெற்று
4.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக அதை விளைய வைக்க முடியும்
அதைத்தான் இப்பொழுது குரு வழியிலே யாம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
தியானிக்கும் போது அவரவர்கள் எண்ண வலுவுக்கு ஏற்றார் போல் மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் ஆன்மாவில் கலப்பதை உணரலாம். எந்த அளவுக்கு உயர்த்தி எண்ணுகின்றீர்களோ நிச்சயம் உணரலாம்… அதை நுகர முடியும்.
அந்த அறிவின் தன்மை தான் உங்களுக்குள் இப்போது படைக்கப்படுகின்றது. யாம் உபதேசிப்பதை ஆழப் பதிவு செய்து கொண்டால் உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும். அறியாது வந்த சாப நிலைகளை பாவ நிலைகளை மாற்ற முடியும்.
மெய் ஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டமைப்பாக இழுத்துக் கவர்ந்து…
1.எல்லோரும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே யாம் சொல்லும் இந்தத் தியானம்.
2.ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுக் கொண்டு தியானித்து நாம் அனைவரும் பெறுவோம்.