ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2023

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்...!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.