உதாரணமாக வியாபாரமோ அல்லது தொழிலோ நாம் கூட்டாகச் செய்யும் போது அதிலே ஒருவருக்கொருவர் வெறுப்பாகி விட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.
தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும்… நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணமே அடுத்து வராது. அந்த வெறுப்பையே வளர்க்கப்படும் போது அது நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகிறது… சித்திரை.
யாரை எண்ணி வெறுப்பை நமக்குள் பதிவு செய்து வளர்த்தோமோ அந்த உணர்வின் ஆக்கமாக நம்மை அது இயக்கி வியாபாரத்தையும் மந்தமாக்கிவிடும்... உடல் நலத்தையும் பாதிக்கும்.
ஒரு நிலத்தில் வித்தைப் பதிவு செய்த பின் அது எப்படி வளரத் தொடங்குகிறதோ அது போல்
1.நம் உடலும் நிலம் போன்றது தான்.
2.அதிலே எத்தனை குணங்களை நாம் பதிவு செய்கின்றோமோ
3.வேதனை என்ற விஷமான உணர்வோ அல்லது கோபம் என்ற காரத்தை ஊட்டும் உணர்வோ அந்த வித்துக்கள் பதிந்து விட்டால்…
4.நம் ஆன்மாவில் படரப்படும் போது நம் நல்ல குணத்தின் இயக்கத்தையே அது மாற்றி நமக்குள் எதிரியாகிவிடுகின்றது.
இது எல்லாம் மனித வாழ்க்கையில் நமது எண்ணம் கனியாகும் பருவத்தை இழக்கச் செய்து சித்திரையாக மாற்றிவிடுகின்றது… நல்ல குணத்தினை மறைத்து விடுகின்றது.
இதைப் பிளத்தல் வேண்டும்.
ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகள் கொண்டு அதை நீக்கும் நினைவாற்றலைக் கொண்டு வர வேண்டும்.
அதைக் காட்டுவதற்குத் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று
1.தீமைகளைச் சரணமடையச் செய்யும் சக்தியாக
2.இந்த உடலான குகைக்குள் நின்று
3.வருவது அனைத்தையும் அறிந்து
4.தீமைகளை அகற்றி உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா… என்று
5.காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளார்கள் ஞானிகள்.
இந்தப் புது வருடத்தில்
1.ஆறாவது அறிவைக் கொண்டு இருளைப் போக்கித் தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பதிவு செய்து
2.பேரானந்தப் பெரு நிலை பெறும் அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வித்தாகப் பதிவு செய்து
3.தீமைகளை அகற்றும் உணர்வின் ஞானத்தை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
இதற்கு முன் தட்சிணாயணம்… இப்போது உத்தராயணம்…! இதனின் வளர்ச்சியில் ஒளி கண்ட பின் இருள்கள் மாய்கின்றது… நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையும் தடுக்கப்படுகின்றது.
அதே சமயம் அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் காய வைக்கின்றது. அதனின் சத்தைக் கவர்ந்து கொள்கிறது. ஆறு மாதம் கழித்துத் தட்சிணாயனம் என்று வரப்படும் போது அந்த மழைக் காலத்தில் அதனின் வித்துகளுக்கு இது உணவாகக் கொடுக்கின்றது.
1.ஆகவே ஆறாவது அறிவால் நாம் சேமித்துக் கொண்ட… நாம் தெளிந்து கொண்ட… அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
2.நமக்குள் சிறிது சிறிதாக மறைத்திருக்கும் தீமைகளைப் பிளந்து இந்தப் புதிய வருடம் நமது வாழ்க்கையைத் தொடர வேண்டும்.
வருடம் தோறும் பன்னிரெண்டு மாதங்களிலும் மக்கள் அருள் உணர்வுகளைப் பெறுவதற்கு நமது சாஸ்திரம் தெளிவாக வழி காட்டுகின்றது. இதனின் உண்மையின் உணர்வை நாம் உணர்ந்து அதன் வழியில் அருள் வாழ்க்கையாக வாழ வேண்டும்.