ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2022

மறதிப் பூடு

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்...? என்ன செய்கிறோம்...! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு...” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்... என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா...! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை...! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்...? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா...! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது.... அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது... எந்தப் பக்கம் போவது...? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து... வாடா... வாடா... வாடா... வாடா... என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து... “அதன் மீது உட்கார்...” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்...! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே... நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்... உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.