ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2022

சித்திரைக் கனி

 

புது வருடம்… “சித்திரை… சித்திரைக் கனி” என்று சொன்னாலும் ஒரு கனியின் தன்மையை எடுத்துப் பார்த்தால் அந்தக் கனிக்குள் வித்து மறைக்கப்பட்டுள்ளது. அந்த வித்தின் தோடோ (மேல் ஓடு) அது சித்திரையாக மறைத்துள்ளது.

இதைப் போன்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு மறைக்கப்பட்டே உள்ளது.
1.ஒரு நெல்லுக்குள் அரிசியின் தன்மை மறைக்கப்பட்டுள்ளது.
2.உமியைப் பிரித்துவிட்டால் அந்த நெல் முளைப்பதில்லை.
3.எந்த ஒரு வித்தாக இருந்தாலும் அதன் தோடைப் பிரித்து விட்டால் அதை மண்ணிலே ஊன்றினால் முளைப்பதில்லை.

இதைப் போன்று ஒரு தீமை என்று நமக்குள் வந்தாலும் அந்தத் தீமையின் நிலைகளைப் பிரித்து விட்டால் அது முளைப்பதில்லை (வளர்வதில்லை). இதைத்தான் நம்மை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலையை ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நம் உயிரின் தன்மை அதுவும் ஒரு வித்தாகின்றது. ஆனால் அதை மூடி மறைத்திருப்பது உடல்… இதுவும் சித்திரை தான்…! அதாவது பல அணுக்களின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை உடலாகி… உயிரினை உள்ளடக்கி அதை மறைத்துள்ளது.

ஆகவே ஒரு வித்திற்குள் இருக்கும் உணர்வின் சத்து தனக்குள் எதனை வளர்த்துக் கனியாக ஆனதோ அதை மண்ணிலே ஊன்றினால்
1.அந்த வித்தின் மேல் தோட்டைப் பிளந்து
2.தன் உணர்வின் சத்தினை வெளியே நீட்டி
3.தன் தாய்ச் செடியின் சத்தை அது நுகர்ந்து தன் இனத்தின் சத்தை அது வளர்க்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் மறைந்திருக்கும் உயிர் ஒளியாக இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் மற்ற உணர்வுகள் சித்திரையாக மறைத்திருக்கின்றது. அதை நீக்கி ஒளியின் உணர்வை நாம் நுகரப் பழக வேண்டும்.

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அதை எல்லாம் இராசிகள் என்று சொல்வார்கள்… வருடம் தோறும் அந்தச் சுழற்சிகள் வரும். அந்தந்த இராசியின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு நம் பூமியில் பரவும். ஆக சித்திரையால் மூடப்பட்டு அது செயல்படுகின்றது.

ஒரு வித்தை நாம் பூமியிலே ஊன்றும் போது அந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அச்சித்திரையை (மேல் ஓடை) விலக்கித் தன் உணர்வின் சத்தை வெளிப்படுத்தி அந்த உணர்வின் சத்தால் அது விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் தனக்குள் வித்தாகும் போது
2.அது மறைத்திருக்கும் அந்த ஓட்டிலிருந்து நீட்டி… எத்தகைய தீமையின் நிலைகளையோ
3.அந்த உணர்வின் தன்மை பிளந்து தன் உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்க்கத் தொடங்குகிறது.

ஆனால் அது சித்திரையாக மறைத்திருப்பினும் அதை மாற்றி அமைக்க
1.நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு ஒளியின் சத்தை நாம் கவரும் நிலை வரப்படும் போது
2.தீமையான உணர்வின் சத்தைப் பிளந்து ஒளியின் சிகரமாக நமக்குள் வளர்க்க இது உதவும்.

பல கோடிச் சரீரங்களில் அந்தந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி… மறைக்கும் தீமைகளை அகற்றி அகற்றித் தீமைகளை அகற்றிடும் தன்மை கொண்டு நாம் மனிதனின் நிலைகள் இன்று அடைந்துள்ளோம்.

இதனின் நிலைகள் கொண்டு…
1.உயிர் எப்படி ஒளியானதோ நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை கனியாக்கி கனியின் தன்மை முழுமையாகும் போது
3.ஆறாவது அறிவு ஏழாவது நிலை அடைகின்றது… சப்தரிஷி.

நம் ஆறாவது அறிவைச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஒளியாக வாழ்ந்திடும் நிலையைத் தான் கனிகளை வைத்துச் “சித்திரைக் கனி…” என்று காட்டினார்கள் ஞானிகள்.