ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2022

தலையில் வரும் வலி தான் உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி - ஈஸ்வரபட்டர்

 

நல்நிலை பெற்று நாம் எந்நிலை கொண்ட சுவாசம் எடுக்கின்றோமோ அந்நிலைக்குகந்த உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் நம் ஆரோக்கிய நிலையும் நமக்குக் கிட்டுகின்றன.

நமக்கு வரும் பிணிகள் எல்லாம் நம்மை வந்து அண்டுவது பிறரிடத்தில் இருந்தோ அனைத்தும் வம்ச வழி கொண்டோ நமக்கு வந்து அடைகிறது என்பது மட்டுமல்ல.

வம்ச வழியில் வருகின்றது பல பிணிகள் என்கிறார்கள். வம்ச வழியில் உதிரத் தொடர்புடன் சில நிலைகள் நமக்கு வருகின்றன.

ஆனாலும் நம்முடைய உணர்வும் உணவும் செயலும் கொண்டு நம் எண்ணத்தினால்… அந்த வம்ச வழியின் தொடரில் வரும் பிணிகள் நம்மை அண்டாமல்… நம் உடல் நிலையை ஆரோக்கிய நிலையில்… “இஜ்ஜெப நிலை என்னும் ஆத்மீக வழிக்கு நம்மை நாம் வழி நடத்தி வரும் பொழுது… எப்பிணியும் நம்மை அண்டாது...!”

1.இவ்வுடல் பிணிகள் அனைத்துமே வருவதெல்லாம் இவ்வெண்ணத்திலிருந்துதான்
2.மனிதனின் குண நிலை கொண்டுதான் அவனுக்கு வரும் பிணி எல்லாம்.

தலை வலி எந்நிலை கொண்டு வருகின்றது…?

சமமான நிலையில் மன நிலை உள்ள பொழுது ஆரோக்கிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருந்தாலும்
1.எண்ணமுடன் எண்ணம் மோதும் பொழுது (எதிர் நிலை)
2.நாம் உட்கொள்ளும் ஆகாரம் நமக்குச் செரித்து நம் நிலையில் அவ்வுமிழ் நீர் சுரக்கும் தன்மை தடைப்படுகிறது.

இந்த உமிழ் நீர் சுரப்பியின் நிலை வேறுபடும் பொழுது நாம் உட்கொள்ளும் உணவும் நமக்குச் செரிப்பதில்லை. அந்த நிலையிலிருந்து தான் நமக்கு வருகிறது தலை வலி.

1.உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி இச்சிரசில் வரும் வலி தான்.
2.இதன் தொடர்நிலை தான் நமக்கு வரும் வாந்தி மயக்கம் காய்ச்சல் இப்படி வரும் அனைத்துப் பிணிகளுமே.
3.இந்நிலையின் தொடர்தான் அடிக்கடி உடல் உபாதை உற்றவனுக்கு
4.அவன் உடலில் சில உறுப்புகள் செயல்படும் தன்மையை இழந்து விடுகின்றன.

சில உறுப்புகள் அதிகப் பிணி கொண்டு அதன் செயல் தன்மை இழந்த பிறகு எந்த விதமான வைத்தியத்தாலும் அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.

நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளுவதுதான் நமக்கு வரும் பிணிகளெல்லாம்.

1.மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு
2.என்றும் அமைதி கொண்டு வாழ்பவனுக்கு இவ்வலியும் பிணியும் வந்து அண்டாது.

நாம் மாறுபட்ட உணவை உட்கொள்ளும் பொழுது அம்மாறுபட்ட உணவினால் தான் “நம் உடல் நிலை சீர் கெட்டது…!” என்று செப்புகின்றோம்.

1.மாறுபட்ட இடம் மாறுபட்ட உணவு என்று எண்ணும் பொழுதே
2.நம் எண்ணத்தையும் மாறுபடக் கொள்கின்றோம்.

அந்நிலையின் கலக்கத்தினால் நம் எண்ணமே அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதே நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் உமிழ் நீர் சுரக்கும் தன்மையும் மாறுபடுகிறது.

அந்நிலையிலேயே அவ்வுணவு செரிக்கும் பொழுது இவ்வுடலுக்கும் அதை ஏற்கும் தன்மை குறைபடுகிறது. உணவின் மேல் நாம் பாரத்தைப் போடுகின்றோம்.

நம் உடல் நிலைக்குப் புசிக்கும் உணவை நாம் விரும்பி உண்ணும் பொழுது அதன் சுவை “நமக்கு அமிர்தம் போல் உள்ள நிலையாக” உணர்ந்து உண்டிட வேண்டும்.

உணவின் நிலையைப் பற்றி நம் முன்னோர்கள் எழுதிய பல நூல்களில் உணவை உண்ணும் நிலையையும்… நாம் உண்ணும் உணவினால் நம் உடல் பெறும் நிலைகளைப் பற்றியும்… பல நிலைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

1.நாம் உண்ணும் உணவையே நாம் சந்தோஷத்துடன் அவனளித்த அமிர்தத்தை அமிர்தமாகப் புசித்திடல் வேண்டும்.
2.“பசித்துப் புசி…!” என்று நம் முன்னோர் செப்பியுள்ளனர்.
3.பசித்த நிலையில் புசிப்பவனுக்குப் புசித்த உணவெல்லாம் அமிர்தம் போல் உட்சென்று
4.அதன் சத்தினை இவ் உடல் ஏற்கும் பக்குவ நிலைக்கு இருந்திடும்.

நம் முன்னோர்கள் நமக்குகந்த பல உணவுகளைப் பக்குவ நிலைப்படுத்தி நமக்கு உணர்த்திச் சென்றார்கள். உண்ணும் உணவை நாம் ஆசையுடன் புசித்திட்டாலே இவ்வுடல் நிலைக்கும் இவ்வுள்ள நிலைக்கும் எப்பிணியும் வந்து அண்டாது.

நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதற விட்டும் மோத விட்டும் நம் கோபத்தையும் அதி சந்தோஷ நிலையையும் வளரவிட்டும் அந்நிலையில் நாம் உண்ணும் எவ்வுணவையும் நம் உடல் நிலை ஏற்பதில்லை.

நமக்கு வரும் வலியும் பிணியும் இம்மாறுபட்ட சஞ்சல நிலை கொண்ட எண்ணத்தின் மோதலினால்தான் நமக்கு வருகிறது என்பதனை அறிந்திடல் வேண்டும்.

வியாதி உள்ளவனை நாம் சென்று பார்த்தால் அவன் உடல் நிலையிலுள்ள அவ்வியாதியின் அணுக்கள் நம்மையும் வந்து தாக்கி நமக்கும் அவ்வியாதி வரும் என்று சொல்கின்றோம்.

வியாதியஸ்தனைக் காணச் செல்பவனுக்கு…
1.நல்நிலையில்… ஆரோக்கிய நிலையில்… சமமான நிலையில்… அவன் எண்ணத்தில்
2.சிறு அணுவும் “தனக்கு அந்த வியாதி அண்டிக் கொள்ளுமே…” என்ற பயமில்லாத நிலையில் செல்பவனுக்கு
3.எந்த வியாதிஸ்தனின் உடலிலுள்ள எவ்வியாதி அணுவும் வந்து அண்டாது.

ஆனால்… அவ்வியாதியஸ்தனின் “உதிரத் தொடர்புடையவருக்கு” எண்ண நிலையில் ஒரு நிலை கொண்டவருக்கு அவன் சுவாச நிலை பட்டாலே அக்கிருமிகள் வந்து தாக்கும் நிலை உள்ளன.

சில வகை ஜுரங்களின் அணுக்கள் அவ்வியாதியஸ்தன் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்துடனே அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.உடல் நிலையில் ஆரோக்கியமில்லாதவரும்
2.எண்ண நிலையில் கலக்கமுள்ளவர்களும்
3.அந்நிலையிலுள்ள வியாதியஸ்தனின் சுவாசக் காற்று பட்டாலே
4.அவனின் வினையான இவ்வியாதி அணு இவர்களையும் வந்து அண்டிக் கொள்ளும்.

இப்படர்ந்த பூமியில் உள்ள அணுக்கள்தான் யாவையுமே. வியாதியின் அணுவும் இக்காற்றில்தான் உள்ளது. அவ்வியாதியைக் குணப்படுத்தும் மருந்தும் இக்காற்றில்தான் உள்ளது.

நாம் ஏற்கும் சுவாசம் கொண்டுதான் அனைத்து நிலைகளுமே நமக்கு வருகின்றன. “இவ்வெண்ணத்தினால் வருவதுதான் எல்லாப் பிணியும்…!”

இன்று பல புதிய புதிய வைத்தியமும் தான் வளர்ந்துள்ளன.

ஜீவராசிகளின் பெருக்கத்தினாலும் பல ஆலைகளிலிருந்து வெளிப்படும் கழிவின் புகையினாலும் விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் பொக்கிஷத்தை நாம் பிரித்து எடுத்தினாலும் தாவர வர்க்கங்களின் நிலையின் குறைவினாலும் வந்த வினைதான் “இன்று இக்காற்றில் கலந்து வரும் புதிய புதிய பிணிகளெல்லாம்…!”

இன்று இவ்வுலகம் உள்ள நிலையில் ஜீவராசியின் அதிபெருக்கத்தைச் சமப்படுத்தினால்தான் இவ்வுலகம் இனி வரும் மாற்றத்திலாவது தாவரங்கள் செழித்து வளர்ந்திடும்.

1.தாவரங்களின் வளர்ச்சிதான் உலகத்தின் உண்மையான வளர்ச்சி.
2.விஞ்ஞானம் கொண்டு வளரும் வளர்ச்சியல்ல இவ்வுலக வளர்ச்சி.

ஜீவராசிகளின் இனப்பெருக்கத்தைச் சமப்படுத்திடும் நிலை உணர்ந்தே வந்திடுங்கள்.