ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2022

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் உடலில் இருக்கக்கூடிய அணுக்கருக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவன் ஊட்டிப் பழக வேண்டும்.

அது அணுவின் தன்மையாக அடைந்தபின் நாம் எதை நுகர வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை எண்ணி ஏங்கப் படும்போது
1.அது ஞானத்தின் உணர்ச்சிகளாக நம்மை இயக்குவதும் அருள் வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது
2.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்க தொடங்கி விடுகிறது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விட்டால் இந்த உடலில் ஏற்கனவே உடலின் இச்சை கொண்டு மற்ற அணுக்கள் வளர்ந்திருந்தாலும் அருள் ஒளியின் சுடராக வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்து விடுகின்றது.

அது மடியும் தன்மை வரும் போது
1.ஒளியின் அணுவாக மாறுகின்றது… ஒளியாக மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்ற பின்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக ஆகின்றோம்.

உதாரணமாக ஒரு பட்டுப் புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் அந்த மலத்தை நூலாம்படை போன்று தனக்குள் சுற்றுகின்றது.

தனக்குள் சுழற்றிக் கொண்ட பின் தன்னை அறியாமலேயே ஒரு பாதுகாப்புக் கூடாக அமைத்து விடுகின்றது. அதிலே பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்டபின் “வெளியே செல்ல வேண்டும்… வெளியே செல்ல வேண்டும்…” என்று உணர்வுகள் உந்துகிறது.

1.தன் உடலில் மலத்தால் கட்டப்பட்ட இந்தக் கூட்டிற்குள் இருந்தே உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
2.நினைவின் ஆற்றல் வெளியே பறக்க வேண்டும் என்ற உணர்வுகள் முதிர்ந்து “இறக்கைகள்” வளர்கின்றது.

அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த கூட்டைக் கத்திரித்து விட்டு வெளியே வரப்படும் பொழுது அது பூச்சியாக (புழு - பூச்சியாக) வெளி வருகின்றது.

அதனின் நிலைகள் முட்டை இடும் பொழுது இதை உணவாக உட்கொண்ட அதனின் கருவாக தன் இனமாகப் பெருக்குகின்றது. கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகிறது.

இதைப் போலத்தான்
1.அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் கூட்டைக் கட்டி
2.இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நம் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அணுக்கள் விளைந்த பின்
4.கூட்டைவிட்டு (உடலை) வெளியே செல்லும் பொழுது அருள் மகரிஷிகளின் வட்டத்தில் சென்று
5.நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இப்படித்தான் ஒவ்வொரு உடலிலும் முழுமை அடைந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.