வாழும் காலத்தில் அவரவர்களின் அந்தஸ்தைப் பொறுத்த வாழ்க்கை நிலை வாழ்வதாக இம்மனிதன் சொல்கின்றான். மனிதன் சொல்லும் அந்தஸ்து இப்பொருள் சுகத்தைக் கொண்ட அந்தஸ்து.
பொருளை வைத்து… அவரவர்களின் கையிலுள்ள செல்வத்தை வைத்து… இன்றுள்ள மனிதன் மனிதனை எப்படி எடை காண்கின்றானோ அந்நிலைக்கு மேல்…
1.இன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் பெற்ற வழி நெறிகளைக் கொண்டு
2.நம் ஆத்மா இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகும்
3.நம் ஆத்மாவிற்கும் அந்தஸ்து நிலையுண்டு (தர நிலையுண்டு).
வாழ்ந்த காலத்தில் மனிதன் தனத்தை வைத்துத் தரத்தை நிர்ணயிக்கின்றான். இத்தரம் எத்தரம்…? மனிதனே மனிதனுக்கு அளிக்கும் தரம் தான் இந்தத் தரம்.
வாழ்ந்த வாழ்க்கையில்… எண்ணம் செயல் அனைத்தையுமே ஆத்மீக நெறி கொண்ட அன்பு நிலை கொண்டு வாழ்பவனின் தரம்தான் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் “நிர்மலமான ஜோதி நிலை கொண்ட தரம்…!”
அத்தகைய தரம் பெற்ற ஆத்மாவுக்கு ஆண்டவனாக வாழும் அரும் பெரும் பொக்கிஷ நிலை கிட்டுகிறது.
1.வாழும் காலத்தில் இவ்வாத்மீக நெறி கொண்டவன் அவ்வழிக்கு வந்துவிட்டால்
2.மற்ற அணுக்களுக்கும் வந்து தாக்கிடவும் செய்யாது.
3.முதலில் அவ்வுடலில் இருந்த மற்ற அணுக்களின் (ஊழ்வினைகள்) சக்தியும் செயலற்றுப் போகின்றன.
ஆத்மீக வழிக்கு வந்து… அறம் பெற்று… வாழும் தரம் கொண்டே வாழ்ந்திட வேண்டும்.
இவ்வுடலுடன் உள்ள நாட்களில் நாம் நமக்களித்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
1.நம் ஆத்மாவுடன் ஆவி உலகத்தில் வாழும் வாழ் நாட்களுக்கும்
2.இவ்வுடலுடன் உள்ள பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்ட எண்ணமும் செயலும்தான் வந்து
3.நம்முடன் என்றும் சப்த அலைகளாக சத்து கொண்ட ஆத்மாவாக ஆவி உலகில் வாழப் போகின்றோம் என்பதை உணரல் வேண்டும்.
ஏனென்றால் நாம் சேர்க்கும் சொத்தும் சுகமும் அல்ல நம்முடன் வருவது.
நாம் உடலுடன் உள்ள நிலையில் நாம் இப்பிறவி எடுத்து நம் ஆத்மா என்று பிரிகிறதோ அன்று வரை “நம் சப்த அலைகள் அனைத்துமே” நம் ஆத்மாவுடன் நம் கூட வருகின்றன.
ஆகவே எண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.
ஞானிகள் வெளிப்படுத்தும் நல்ல அலைகளை ஈர்த்து வாழும் பக்குவத்திற்கு வாருங்கள். பல நிலை கொண்ட தீட்சண்ய ஆவிகளின் செயலில் இருந்து தப்பி வாருங்கள்.
இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் உள்ளன என்று பல முறை உணர்த்தியுள்ளேன்.
நம் உடலுக்குத் தேவையான மருந்தும்… உணவும்… நீரும்… காற்றும்… உலோகமும்… பல நிலை கொண்ட திரவங்களும்… இப்பூமித்தாய் பதித்துள்ள அனைத்து சக்திகளும்… இக்காற்றினிலே கலந்துள்ள பொழுது
1.நமக்கு வேண்டிய நல் நிலைகளை
2.நாம் ஈர்த்து வாழும் பக்குவம் பெற வேண்டும்.