புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.
அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.
இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிராத்மாவிற்கும் அனைத்துச் சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.
1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.
இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன… அச்சக்தியே செயல்படுகின்றது.
இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்துச் சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.
இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.
இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.
ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.
இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.
1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.
வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!
ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”